Tuesday, 6 May 2025

தமிழ்நாட்டில் 2 இடங்களில் போர் ஒத்திகை-பேரிடர் மேலாண்மை ஆணையம் தகவல்!

   


        ஜம்மு காஷ்மீர் பஹல்காம்லில் ஏப்ரல் 22 ம் தேதி நடந்த பயங்கரவாத தாக்குதலில்    சுற்றுலாப் பயணிகள் 26 பேர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து பாகிஸ்தான் மீது இந்தியா பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. 

    இரு நாடுகளும் தங்கள் ராணுவ பாதுகாப்பு நடவடிக்கைகளை அதிகரித்துள்ளன. இதனால், எல்லை பகுதிகளில் போர் பதற்றம் அதிகரித்துள்ளது. இந்நிலையில் இன்று மே   7 நாடு முழுக்க உள்ள 259 இடங்களில் போர் கால பாதுகாப்பு ஒத்திகையை மேற்கொள்ள மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி தமிழ்நாட்டில் கல்பாக்கம், துறைமுகம் ஆகிய 2 இடங்களை மத்திய அரசு தேர்வு செய்துள்ளது.


 தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "மத்திய உள்துறை அமைச்சகத்தின் அறிவுரைப்படி, போர் ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இந்த ஒத்திகை நிகழ்ச்சி கல்பாக்கம் அணுமின் நிலையம் மற்றும் சென்னை துறைமுகத்தில் இன்று   4 மணிக்கு நடைபெற உள்ளது. 

    எந்த அவசரகால சூழ்நிலையை எப்படி எதிர்கொள்வது குறித்து இந்த பயிற்சியின் போது ஆய்வு செய்யப்படும். சென்னை எழிலகத்தில் உள்ள மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தில், மாநில அவசர கால செயல்பாட்டு மையம் செயல்படும். இந்த போர் ஒத்திகையின் போது, மாவட்ட ஆட்சியர் தலைமையிலான மாவட்ட பேரிடர் மேலாண்மை ஆணையம், போலீசார், தீயணைப்பு வீரர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட துறையினர் பங்கு கொள்வார்கள். மாலை 4 மணி முதல் 4:30 மணி வரை இப்பயிற்சி நடக்க உள்ளது.

    இந்த பயிற்சி தொடர்பாக  மத்திய மற்றும் மாநில அதிகாரிகளுடன் தமிழக அரசின் தலைமைச் செயலாளர் ஆலோசனை நடத்தினார். இந்தக் கூட்டத்தில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை செயலர், வருவாய் பேரிடர் மேலாண்மை ஆணையர், டிஜிபி, கல்பாக்கம் அணுமின் நிலையத்தின் திட்ட இயக்குநர், சென்னை துறைமுகத்தின் தலைவர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 

    சம்பந்தப்பட்ட இடங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் எப்படி உள்ளன என்பதை ஆய்வு செய்வதற்காக இந்த ஒத்திகை நடக்கிறது. மற்ற இடங்களில் வழக்கம் போல் பணிகள் நடக்கும். இந்த ஒத்திகையால் பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை." என மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.


இந்திய எல்லைப் பகுதிகளில் வான்வழித் தாக்குதல், போர் மற்றும் ஏவுகணை தாக்குதல் எதிரிகள் தாக்கும்போது பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் எப்படி தங்களைப் பாதுகாத்து கொள்வது? எதிரி நாட்டினர் திடீரென எல்லைக்குள் நுழைந்தால் சைரன் ஒலிப்பது, மின் தடை ஏற்பட்டால் எப்படி? என்பது குறித்தெல்லாம் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து பயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.. அதுமட்டுமல்ல, ஒருவேளை குடியிருப்பு பகுதிகளில் திடீர் தாக்குதல் நடத்தப்பட்டால், பொதுமக்கள் தங்களை எப்படி தற்காத்து கொள்வது? என்பது குறித்த பயிற்சி தரப்படுகிறது.. போர் பதற்ற சூழலின்போது மக்களை எப்படி பாதுகாப்பது? எப்படி வெளியேற்றுவது? என்பது குறித்தும் ஒத்திகைகள் நடத்தப்பட உள்ளது.

No comments:

Post a Comment