சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் திமுக தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் முன்னிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சார்ந்தவர்கள் மாற்றுக்கட்சியினர் தங்களை திமுகவில் இணைத்துக் கொண்டனர். இந்த நிகழ்வில் முதல்வர் ஸ்டாலின் உரையாற்றினார். "நேற்று பிறந்தவர்கள் எல்லாம் நான்தான் அடுத்த முதலமைச்சர் என்கிறார்கள். நேற்று கட்சி தொடங்கியவர்கள் எல்லாம் நான்தான் அடுத்த முதலமைச்சர்.. அரசியலுக்கு அரிச்சுவடே தெரியாதவர்கள் எல்லாம் அடுத்த முதலமைச்சர்.. என்று பேசக்கூடிய நிலைதான் இன்றைக்கு உள்ளது. நாம் அதைப்பற்றி கவலைப்பட வேண்டியதே இல்லை. திமுக கட்சி தொடங்கும்போது ஆட்சிக்கும் வரவேண்டும் என்று நினைக்கவில்லை. கட்சி தொடங்கிய உடனே நாம் தேர்தலில் களத்திற்கு வரவில்லை. 57-ல் தேர்தல் களத்திற்கு வந்தோம். திருச்சியில் அண்ணா மாநாட்டை வைத்து, ஒரு பெட்டியை வைத்து தேர்தலுக்கு போகலாமா என்று எழுதி போட சொல்லி பிறகு நாம் தேர்தல் அரசியலுக்கு வந்தோம்.
பிறகு அண்ணா தேர்தலில் நிற்கலாம் என்று கூறினார். தேர்தலில் நின்று 15 இடங்களில் வெற்றி பெற்றோம். பிறகு இரண்டு நாடாளுமன்ற தொகுதிகளில் வெற்றி பெற்றோம். அடுத்த தேர்தலில் ஐம்பது இடங்களில் வெற்றி பெற்றோம். அண்ணா தலைமையில் பிறகு ஆட்சி பொறுப்பேற்று தேர்தல் வாக்குறுதிகள் தொடர்ந்து நிறைவேற்றப்பட்டது. ஏழாவது முறையாக இருமொழிக் கொள்கை தீர்மானம் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. தமிழ்நாட்டுக்கு தமிழ்நாடு என்ற பெயர் சூட்டப்பட தீர்மானம் நிறைவேற்றப்பட்டு பெயர் வைக்கப்பட்டது. அண்ணா மறைந்த பிறகு அந்த இடத்தை பூர்த்தி செய்ய கலைஞர் கருணாநிதி தனது பணிகளை தொடங்கினார். அண்ணா விட்டுவிட்டுப் போன திட்டங்களை அவர் தொடர்ந்தார். 71 தேர்தலில் நின்று வெற்றி பெற்றோம், 1975 ஆம் ஆண்டு ஆட்சி கலைக்கப்பட்டது. 13 ஆண்டு காலமாக ஆட்சிக்கு வர முடியாமல் 89 ஆம் ஆண்டு ஆட்சிக்குப் பிறகு வந்தோம். ராஜீவ் காந்தி கொலை வழக்கை வைத்து திமுக மீது குற்றம் சாட்டினார்கள். தேர்தலில் தோற்க வைத்தார்கள். மீண்டும் 2021 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்து நான்கு வருடங்கள் முடிந்து ஐந்தாம் வருடத்தை தொடங்க உள்ளோம். ஆறு முறை தமிழகத்தில் வெற்றி பெற்று ஏழாவது முறையாகவும் திமுக தான் வெற்றி பெற உள்ளது. நான் திமிராக சொல்கிறேன் என்று நினைக்க வேண்டாம்.
இந்தியாவில் முதல் முறையாக மாநில கட்சியாக ஆட்சி அமைத்தது தமிழ்நாடு தான், இந்தியாவிற்கு வழிகாட்டக் கூடிய கட்சி திமுக. 90% தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஒரு சில வாக்குறுதிகள் தான் நிறைவேற்றப்படவில்லை, அதனையும் விரைவில் நிறைவேற்றுவோம்." எனப் பேசினார். முதல்வர் ஸ்டாலின் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யை மறைமுகமாக தாக்கிப் பேசியுள்ளார் என்ற பேச்சுகள் அரசியல் அரங்கில் உலவத் தொடங்கி உள்ளன. தவெக தலைவர் விஜய், பாஜகவையும், திமுக அரசையும் கடுமையாக விமர்சித்துப் பேசி இருந்தார். இந்நிலையில், முதல்வர் ஸ்டாலினும் அட்டாக் மோடை தொடங்கி உள்ளார் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.
No comments:
Post a Comment