Thursday, 1 May 2025

மதுரைதனியார் மழலையர் பள்ளியில் சிறுமி பலியான சம்பவம்.. தனியார் பள்ளியின் உரிமம் ரத்து! -மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் நடவடிக்கை

 மதுரை ஸ்ரீ கிண்டர் கார்டன் மழலையர் பள்ளியில்சிறுமி பலியான சம்பவம்..  தனியார் பள்ளியின் உரிமம் ரத்து!



மழலையர் பள்ளியில் சிறப்பு வகுப்பு; தண்ணீர் தொட்டிக்குள் விழுந்த 4 வயது  சிறுமி பலி.. மதுரையில் சோகம் - Vikatan

மதுரை கே.கே.நகரில் உள்ள ஸ்ரீ கிண்டர் கார்டன் மழலையர் பள்ளியில் 4 வயது சிறுமி ஒருவர் படித்து வந்த நிலையில், திறந்து கிடந்த தண்ணீர் தொட்டிக்குள் தவறி விழுந்து பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

 மதுரை மாநகருக்கு உட்பட்ட கே.கே நகர் பகுதியில் செயல்பட்டு வரும் ஸ்ரீ கிண்டர் கார்டன் மழலையர் பள்ளியில், மாணவர்களுக்கு கோடைக்கால சிறப்புப் பயிற்சி முகாம் நடைபெற்று வந்துள்ளது. இதில், மதுரை உத்தங்குடி பகுதியைச் சேர்ந்த அமுதன் - சிவ ஆனந்தி தம்பதியின் நான்கு வயது குழந்தை ஆருத்ராவும் பங்கேற்றுள்ளார். காலை 11 மணியளவில் பள்ளி வளாகத்தில் விளையாடிய சிறுமியை திடீரென காணவில்லை. பள்ளி வளாகம் முழுவதும் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. சிறுமி, அங்குள்ள தண்ணீர் தொட்டிக்குள் விழுந்து கிடந்தது தெரியவந்தது. அதிர்ச்சி அடைந்த ஆசிரியர்கள் அண்ணா நகர் காவல் நிலையத்துக்கும், தீயணைப்பு வீரர்களுக்கும் தகவல் தெரிவித்தனர். 

தகவல் அறிந்து அக்கம் பக்கத்தினரும் அங்கு திரண்டனர். கார் ஓட்டுநர் ஒருவர் உள்ளே சென்று சுமார் 8 அடி ஆழமுள்ள தண்ணீர் தொட்டிக்குள் கிடந்த குழந்தையை மீட்டார். பின்னர் அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு குழந்தையை கொண்டு சென்றனர். மருத்துவமனையில் குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள், குழந்தை இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் குழந்தைகள் நடமாடும் பகுதியில் தண்ணீர் தொட்டியை அஜாக்கிரதையாக திறந்து வைத்திருந்தது தொடர்பாக பள்ளி தாளாளர் திவ்யா ராஜேஷ், உதவியாளர் வைரமணி ஆகியோரை கைது செய்துள்ளனர். அவர்களுக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ள நிலையில் விசாரணை நடந்து வருகிறது.

 இந்நிலையில் சிறுமியின் மரணத்தைத் தொடர்ந்து அந்த பள்ளியை இழுத்து மூட வேண்டும் என பெற்றோர்கள் கூறிவந்த நிலையில், அந்த பள்ளியின் உரிமத்தை ரத்து செய்து அறிவிப்பு வெளியாகியுள்ளது. பள்ளிக்கு சீல் வைக்கப்பட்ட நிலையில் உரிமம் ரத்து; மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் நடவடிக்கை எடுத்துள்ளார்.

முன்னதாக, "மதுரை மாவட்டத்தில் பள்ளிக்கல்வித் துறையின் கீழ் செயல்படும் மழலையர் பள்ளி உள்ளிட்ட அனைத்து வகை பள்ளிகளும் கோடைக்கால விடுமுறை நாட்களில் எவ்வித நிகழ்வுகளின் பெயரில் பள்ளிக் குழந்தைகளை பள்ளிக்கு வரவழைக்கக் கூடாது எனவும், இதனை மீறிச் செயல்படும் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்," என்றும் மாவட்ட ஆட்சியர் சங்கீதா நேற்று     { 29 4.2029}       எச்சரிக்கை விடுத்திருந்தார்.

 மதுரை மாவட்டத்தில் உள்ள மழலையர் பள்ளி உள்ளிட்ட அனைத்து வகையான பள்ளிகளிலும் மாணவர்களுக்கான பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் எனவும், கோடைக்கால சிறப்பு முகாம்கள் மற்றும் வகுப்புகள் நடத்தக்கூடாது எனவும் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம் சார்பில் பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. மேலும் இந்த உத்தரவை மீறினால் சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகத்தின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அந்த சுற்றறிக்கையில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment