அண்ணா பல்கலைக்கழக மாணவி, பாலியல் குற்றவாளி ''ஞானசேகரன் மீதான வழக்குகளை சிபிஐ-க்கு மாற்றத் தேவையில்லை'': ஐகோர்ட்டில் டிஜிபி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது .
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான கோட்டூரைச் சேர்ந்த ஞானசேகரன் மீதான வழக்குகளை சிபிஐ விசாரணைக்கு மாற்றக்கோரி பாஜக வழக்கறிஞரான ஏ.மோகன்தாஸ் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு, பாலியல் வழக்கில் கைதாகியுள்ள ஞானசேகரன் மீது இதுவரை பதிவு செய்யப்பட்ட மற்ற வழக்கு விவரங்களை தாக்கல் செய்ய காவல்துறைக்கு உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில் இந்த வழக்கில் தமிழக டிஜிபி சார்பில் உதவி ஐஜி தேஷ்முக் ஷேகர் சஞ்சய் உயர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், “அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக 3 பெண் ஐபிஎஸ் அதிகாரிகள் தலைமையில் சிறப்பு புலனாய்வுக்குழு அமைத்து, விசாரணை நடத்தி நீதிமன்றத்தில் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு அல்லிக்குளம் மகளிர் நீதிமன்றத்தில் விசாரணை நிலையில் உள்ளது. இந்த வழக்கில் மொத்தம் 18 சாட்சிகள் சேர்க்கப்பட்டுள்ளனர்.
அதில் பாதிக்கப்பட்ட மாணவி உள்பட 13 சாட்சிகளிடம் மகளிர் நீதிமன்றம் விசாரணை மேற்கொண்டுள்ளது. இந்த வழக்கு தவிர, கடந்த 2010 முதல் கடந்த 2024 வரை ஞானசேகர் மீது சென்னை, செங்கல்பட்டு மற்றும் தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளில் கத்தியைக் காட்டி மிரட்டி வழிப்பறி செய்தது, பூட்டிக்கிடக்கும் வீடுகளுக்குள் புகுந்து நகைகளை கொள்ளையடித்தது, அண்ணா பல்கலைக்கழகத்தின் பார்க்கிங் பகுதியில் நின்று கொண்டு மிரட்டி மொபைல் போன்களை பறித்தது, சாஸ்திரி நகர் பகுதியில் கத்தியைக் காட்டி மிரட்டி தங்கச் சங்கிலியை பறித்து வழிப்பறியில் ஈடுபட்டது என மொத்தம் 35 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
ஆக மொத்தம் அவர் மீது பதியப்பட்ட 36 வழக்குகளில் 5 வழக்குகளில் அவருக்கு நீதிமன்றம் குற்றவாளி என அறிவித்து தண்டனை விதித்துள்ளது. 9 வழக்குகளில் அவர் விடுவிக்கப்பட்டுள்ளார். மற்ற வழக்குகளில் விசாரணை முடிக்கப்பட்டு நீதிமன்றங்களில் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தற்போது அவருக்கு எதிரான எந்த வழக்கிலும் விசாரணை நிலுவையில் இல்லை என்பதால் அவர் மீதான வழக்குகளை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டிய அவசியமில்லை,” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கு வரும் ஜூன் 12ம் தேதி தலைமை நீதிபதி அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வரவுள்ளது.
No comments:
Post a Comment