Thursday, 1 May 2025

ஈரோடு மாவட்டம் சென்னிமலை ஈங்கூர் ரோடு மூதாட்டியிடம் நகை பறித்த 2 பேர் கைது .

ஈரோடு மாவட்டம் சென்னிமலை ஈங்கூர் ரோடு அண்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் தனலட்சுமி என்பவர் அந்த பகுதியில் பர்னிச்சர் கடை ஒன்று வைத்துள்ளார். இவருடைய தாயார் அருக்காணிக்கு 69 வயதாகிறது. கோவை சிங்காநல்லூர் பகுதியை சேர்ந்த அருக்காணி தற்போது மகளுக்கு உதவியாக சென்னிமலையில் தங்கியபடி பர்னிச்சர் கடையையும் கவனித்து வந்திருக்கிறார்.




கடந்த ஏப்ரல் 28ம் தேதி காலையில் அருக்காணி வழக்கம்போல மகளின் பர்னிச்சர் கடைக்கு சென்றார். அங்கு ஒரு வாலிபரும், பெண்ணும் ஸ்கூட்டரில் வந்தனர். அப்போது கடையில் அருக்காணி மட்டும் தனியாக இருந்திருக்கிறார்.. ஸ்கூட்டரில் வந்த பெண் வண்டியிலேயே உட்கார்ந்துள்ளார். குறிப்பிட்ட இளைஞர் மட்டும் கடைக்குள் சென்றார். அவர், அருக்காணியிடம் பீரோ வாங்க வேண்டும் என்று கூறியிருக்கிறார். அவரை நம்பிய அருக்காணி அருகில் சென்று அங்கிருந்த பீரோக்களை காட்டி விலையை கூறிக்கொண்டிருந்தார். அப்போது சற்றும் எதிர்பாராத வகையில் அந்த நபர் அருக்காணியின் கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் தங்க சங்கிலியை கண் இமைக்கும் நேரத்தில் பறித்துக்கொண்டு மின்னல் வேகத்தில் வெளியே ஓடினாராம். வெளியில் தயார் நிலையில் நின்றிருந்த ஸ்கூட்டரில் 2 பேரும் தப்பிச்சென்றுவிட்டார்களாம். உடனே அருக்காணி திருடன் திருடன் என்று அபயக்குரல் எழுப்பினார். அதைக்கேட்டு அக்கம்பக்கத்தினர் வந்து பார்த்தபோது யாரையும் காணவில்லை

இது குறித்து மூதாட்டி அருக்காணி ஈரோடு மாவட்டம் சென்னிமலை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் சென்னிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் சென்னிமலை போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகி இருந்த காட்சிகளை பார்வையிட்டு 2 பேரை தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது ஸ்கூட்டரை ஓட்டிச்சென்ற பெண்ணின் அடையாளத்தை சென்னிமலை போலீசார் கண்டுபிடித்தனர். அவர் சென்னிமலை அருகே உள்ள நாமக்கல்பாளையம் தியாகி குமரன் நகர் பகுதியை சேர்ந்த தமிழ்செல்வி (30) என்பதும், அவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஈரோடு தெற்கு மாவட்ட மகளிர் அணி செயலாளராக பொறுப்பு வகித்து வருவதும் போலீசாருக்கு தெரியவந்தது.
இந்தநிலையில் நேற்று காலை தமிழ்செல்வி ஈரோடு பஸ் நிலையம் பகுதியில் இருப்பதாக சென்னிமலை போலீசாருக்கு தகவல் வந்தது. உடனடியாக போலீசார் ஈரோடு பஸ் நிலையத்துக்கு சென்று தமிழ்செல்வியும், அவருடன் இருந்த வாலிபரையும் பிடித்து சென்னிமலை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரித்தனர்
விசாரணையில், விடுதலை சிறுத்தைகள் கட்சி மகளிர் அணியின் செயலாளராக இருந்த தமிழ்செல்விக்கு சத்தியமங்கலம் அரியப்பம்பாளையம் புதுகொத்துக்காடு பகுதியை சேர்ந்த கட்டிட தொழிலாளி ரமேஷ் (25) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டதாம். 2 பேரும் இணைந்து பர்னிச்சர் கடையில் அருக்காணி தனியாக இருப்பதை நோட்டமிட்டு தங்க சங்கிலியை பறித்துச்சென்றதும் விசாரணையில்தெரிய வந்தது. அதுமட்டுமின்றி, தமிழ்செல்வி ரமேஷ் ஜோடி, அருக்காணியிடம் பறித்த 3 பவுன் தங்க சங்கிலியை ஈரோட்டில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் அடமானம் வைத்து ரூ.1 லட்சத்து 45 ஆயிரம் பெற்று, அந்த பணத்தை தமிழ்செல்வியின் வங்கி கணக்கில் டெபாசிட் வைத்திருப்பதும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் 2 பேரையும் கைது செய்தனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க முடிவு செய்துள்ளனர்.

No comments:

Post a Comment