Sunday, 16 February 2025

பிரதமர் மோடியின் கையால் செங்கோலை சட்டசபையில் வைத்த பின்பு தான் சட்டசபையில் நுழைவோம். இது எங்களது சபதம் - தமிழிசை

 சென்னை அம்பத்தூரில் பாஜக சென்னை மேற்கு மாவட்டத் தலைவர் அறிமுக கூட்டம் நடைபெற்றது. அப்போது சென்னை மேற்கு மாவட்ட தலைவராக நியமிக்கப்பட்டுள்ள பாஸ்கரை பாஜக தமிழ்நாடு முன்னாள் தலைவர் தமிழிசை செளந்தரராஜன் அறிமுகம் செய்து வைத்தார்.


பின்னர் பேசிய தமிழிசை செளந்தரராஜன், "இரண்டு மாநில முதல்வர்களை வீட்டுக்கு அனுப்பிவிட்டு தான் தற்போது இங்கு வந்துள்ளேன். கட்டாயம் தமிழகத்திலும் பாஜக ஆட்சியைப் பிடிக்கும். பாஜகவின் செங்கோல் தமிழக சட்டசபையை அலங்கரிக்கும். பிரதமர் மோடியின் கையால் செங்கோலை சட்டசபையில் வைத்த பின்பு தான் சட்டசபையில் நுழைவோம். இது எங்களது சபதம். தமிழகத்தில் வெற்றி வாய்ப்பு குறித்த கருத்து கணிப்பு விளம்பரத்தால் வருவது. இந்திய அளவில் மோடி மீண்டும் வருவார் என்பதை நீங்கள் மறந்து விடக்கூடாது. தமிழகத்தில் பெண்கள் சுதந்திரமாக நடக்க கூட முடியவில்லை. அவர்களுக்கு பாதுகாப்பு இல்லை. 2026 தேர்தல் பாஜகவிற்கானது. ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகி நீதிமன்ற படிகட்டுகளை ஏறி வருகிறார்கள். தமிழ்நாட்டில் பாவிகள் ஆளும்போது காவிகள் ஆளக்கூடாதா?

தர்மேந்திர பிரதான் மூன்றாவது மொழி இந்தி என்று கூறவில்லை, இந்தி என்று நீங்கள் தான் திணிக்கிறீர்கள். நாங்கள் திணிக்கவில்லை. இன்னொரு மொழியை கற்றுக்கொண்டால் வளர்ச்சி அடையாளம் என்று கூறினார். தமிழக அரசை பிளாக்மெயில் செய்யவில்லை, தனியார் பள்ளிகளில் கடைபிடிக்கும் மும்மொழிக் கொள்கையை எதற்காக அரசுப் பள்ளிகளில் கடைபிடிப்பதில்லை என சொல்லுங்கள்? தாய்மொழி தமிழைதான் பிரதானமாக கற்பிப்போம் என சொல்கிறோம். அதற்கு உங்கள் பதில் என்ன? தமிழை உங்களால் பிழையின்றி பேச முடியுமா? கருத்து சுதந்திரத்தை பற்றி திமுக பேசுகிறது. தங்களுக்கு எதிராகச் செயல்பட்டார்கள் என்பதற்காக மதுரையில் பத்திரிகை அலுவலகத்தை எரித்தவர்களே நீங்கள்தான்" என விமர்சித்துள்ளார்.

No comments:

Post a Comment