Saturday, 15 February 2025

ஜெயலலிதாவின் 1000 ஏக்கர் நிலம் , 27 கிலோ நகைகள் தமிழக அரசிடம் ஒப்படைப்பு .

 1991-96ல் ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புகார் எழுந்தது. புகார் தொடர்பாக ஜெயலலிதா வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர். 
     சோதனையின் போது வருமானத்துக்கு அதிகமாக ரூ.66.65 கோடி சொத்து வாங்கி குவித்ததாக வழக்கு பதிவுசெய்தனர். 




    வருமானத்திற்கு அதிகமாக சொத்துக் குவித்த வழக்கில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவிடம் பறிமுதல் செய்யப்பட்ட நகைகள், சொத்து ஆவணங்கள், பெங்களூருவில் உள்ள அரசு கருவூலத்தில் வைக்கப்பட்டிருந்தன.  தமிழ்நாடு முன்னாள் முதல்வர் மறைந்த ஜெயலலிதாவின் நகைகள், அசையா சொத்துகளை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா மற்றும் அண்ணன் மகன் தீபக் மனு தாக்கல் செய்த நிலையில், அந்த மனுவை சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது

    சிறப்பு நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தீபா மற்றும் தீபக் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். ஜெயலலிதாவின் நகைகள், சொத்துகள் ஆகியவை தமிழ்நாடு அரசுக்கே சொந்தமானவை என்ற சிறப்பு நீதிமன்றத்தின் உத்தரவை உறுதி செய்து கர்நாடக உயர்நீதிமன்றமும் அந்த மனுவை தள்ளுபடி செய்தது.


    ஜெயலலிதாவின் நகைகளை ஏலம் விடக் கோரி ராமமூர்த்தி என்பவர் மனுதாக்கல் செய்தார். அப்போது ஜெயலலிதாவின் நகைகளை கர்நாடகா அரசு ஏலம் விடுவதற்கு பதில் தமிழக அரசிடம் ஒப்படைக்க உத்தரவிடப்பட்டது.

     இதற்காக தமிழக அதிகாரிகள் நியமிக்கப்பட வேண்டும், நகைகளை அவர்கள் பெற்றுச் செல்வதை பதிவு செய்ய வீடியோ, போட்டோகிராபர்கள் அனுப்ப வேண்டும் உள்ளிட்ட நீதிபதிகள் விதிமுறைகளை வகுத்திருந்தனர்.

 

    கர்நாடக அரசிடம் இருந்த ஆவணங்களை தமிழ்நாடு அரசிடம் ஒப்படைக்க சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டதை, கர்நாடக உயர்நீதிமன்றமும் உறுதி செய்தது.
     இந்த நிலையில் ஜெயலலிதாவின் நகைகள், சொத்து ஆவணங்களைப் பெற தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புப் காவல்துறையினர் நேற்று கர்நாடகா சென்றனர். நீதிபதி மோகன் முன்னிலையில் ஒவ்வொரு பெட்டியாகத் திறந்து, நகைகளை எண்ணி, மதிப்பீடு செய்யும் பணி நடைபெற்றது. தமிழ்நாடு உள்துறை இணை செயலர் ஹனி மேரி, லஞ்ச ஒழிப்பு எஸ்.பி., விமலா ஆகியோர் நகைகளைச் சரி பார்த்தனர்.

    ஜெயலலிதாவின் தங்க நகைகள் பலத்த பாதுகாப்புடன் கர்நாடகாவில் இருந்து தமிழ்நாடு எடுத்து வரப்படுகின்றன. அதனை தொடர்ந்து ஜெயலலிதாவின் 27 கிலோ தங்க நகைகள், 1000 ஏக்கர் நிலம் நீதிபதி மோகன் முன்னிலையில் தமிழ்நாடு அரசிடம் ஒப்படைத்தனர்

No comments:

Post a Comment