வைகை ஆற்றில் கழிவு நீர் கலக்கப்படுவதை தடுக்க தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர்கள் தலைமையிலான குழுவினர் வாரம் தோறும் ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
மதுரையை சேர்ந்த நாகராஜன் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக்கோரி மனு தாக்கல் செய்தார்.அந்த மனுவின் படி இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அந்த மனுவில், ” வைகை ஆறு தேனி மாவட்டம் வருசநாடு பகுதியில் உற்பத்தியாகி, தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்கள் வழியாக சென்று கடலில் கலக்கிறது. வைகையில் தேனி, மதுரை, ராமநாதபுரம் உள்ளிட்ட பகுதியில் கழிவுநீர் கலக்கிறது. இதை தடுக்க நடவடிக்கை கோரி கடந்த 2021 ஆம் ஆண்டு உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தேன்.
மனுவை விசாரித்த நீதிபதிகள், வைகையில் கழிவு நீர் கலப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டனர். இந்த உத்தரவை முழுமையாக நிறைவேற்றவில்லை. எனவே, தொடர்புடைய மாவட்ட ஆட்சியர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் ஜி.ஆர். சுவாமிநாதன், புகழேந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மதுரை மாவட்ட வருவாய் அலுவலர் சக்திவேல் நேரில் ஆஜராகி, மதுரை மாவட்டத்தில் வைகை ஆற்றில் கழிவு நீர் கலப்பதை தடுக்க கூட்டப்பட்ட மாவட்ட கூட்டம் குறித்து விளக்கினார்.
அரசு தரப்பில் கூடுதல் தலைமை வழக்கறிஞர்கள் ரவீந்திரன், வீரா கதிரவன் ஆகியோர் ஆஜராகி, வைகை ஆற்றில் கழிவு நீர் கலப்பதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றும் உரிய கால அவகாசம் வழங்க வேண்டும் எனவும் கோரினர்.
இதை தொடர்ந்து நீதிபதிகள், மதுரை, தேனி, சிவகங்கை உள்ளிட்ட 5 மாவட்ட ஆட்சியர்கள் தலைமையில் வைகை ஆறு மீட்பு குழு அமைக்கப்பட்டு உள்ளது. அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள், தலைமையிலான பல் துறை அரசு அதிகாரிகள் குழு, வைகை ஆறு பகுதியில் வாரம் தோறும் ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.
வைகை ஆற்றில் கழிவு நீர் கலப்பவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆய்வின் அறிக்கையை 40 நாட்களுக்கு ஒரு முறை உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்ய வேண்டும். மேலும், ஆறுகளை பாதுகாக்க மாநில அளவில் பொதுபணி துறை, வருவாய்துறை உள்ளிட்ட துறை செயலாளர்கள் அடங்கிய குழுவும் வைகை ஆறு மீட்பு குறித்து என்ன நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது என்பது குறித்து பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டனர்.
மேலும், வைகை அணையில் கழிவு நீர் கலப்பதை தடுக்க தற்போது வரை எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து 5 மாவட்ட ஆட்சியர்கள் பதில் மனு தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தன.
No comments:
Post a Comment