Tuesday, 18 February 2025

விகடன் பிளஸ் இணைய இதழை முடக்கி - கருத்துச் சுதந்திரத்தை நெரிக்கும் ஒன்றிய அரசை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மக்கள் சிவில் உரிமைக் கழகம்(பியூசிஎல்) வன்மையாகக் கண்டிக்கிறது.

 


விகடன் பிளஸ் இணைய இதழை முடக்கி - கருத்துச் சுதந்திரத்தை நெரிக்கும் ஒன்றிய அரசை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மக்கள் சிவில் உரிமைக் கழகம்(பியூசிஎல்) வன்மையாகக் கண்டிக்கிறது.


அமெரிக்காவில் இருந்து இந்திய சட்டவிரோதக் குடியேறிகள் விலங்கிடப்பட்டு இந்தியாவுக்கு திரும்ப அனுப்பப்பட்ட நிகழ்வின் மீதான தலைமை அமைச்சர் மோடியின் மௌனத்தை சுட்டும் வண்ணம் விகடன் பிளஸ் இணைய இதழின் முகப்பு அட்டையில் 10.02.2025 அன்று கேலிச்சித்திரம் வெளியிடப்பட்டு இருந்தது. இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு பாசக தலைவர் கே. அண்ணாமலை 15.02.2025 அன்று ஒன்றிய அரசின் தகவல் ஒளிபரப்புத்துறை இணை அமைச்சர் எல். முருகனுக்கு புகார் ஒன்றை அனுப்பினார். இதன் விளைவாக, விகடன் பிளஸ் இணைய இதழ் 15.02.2025 அன்று முடக்கப்பட்டது. இதை தகவல் தொடர்பு மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சகமும் உறுதி செய்துள்ளது.


கேலிச் சித்திரங்களின் முன்னோடி கேரளாவைச் சார்ந்த மறைந்த கே.சங்கர். இவர் இந்தியாவின் முதல் தலைமை அமைச்சர் சவகர்லால் நேருவை தொடர்புபடுத்தி கிட்டதட்ட 4000 கேலிச்சித்திரங்கள் வரை தீட்டியதாகச் சொல்லப்படுகிறது. சனநாயக மற்றும் நகைச்சுவை உணர்வு மிக்க நேரு அவர்கள் இவரிடம் 'என்னையும் விட்டு வைக்காதே' என்று கூறினாராம்.


1932- காலக் கட்டத்தில் கார்ட்டூனிஸ்ட் சங்கர் 'இந்துஸ்தான் டைம்ஸ்' ஆங்கில் நாளேட்டில் கேலிசித்திர ஓவியராக பணியாற்றிய போது, அப்போதைய இந்திய வைஸ்ராய் வெலிங்டன் பிரபுவை கேலி செய்து கேலிச்சித்திரங்கள் வரைந்திருக்கிறார். வெலிங்டன் பிரபு சங்கரை தன் மாளிகைக்கு வரவழைத்து அவரை தட்டிக் கொடுத்து பாராட்டி மகிழ்ந்தாராம்.

     ஓ.வி.விஜயன், குட்டி மற்றும அபு ஆப்ரகாம் ஆகியோருக்கு சங்கர் வழி காட்டியாகத் திகழ்ந்தார். புகழ் பெற்ற கேலிச் சித்திர ஓவியர் ஆர்.கே. லட்சுமணன் சவகர்லால் நேருவை கேலி செய்து பல கேலிச் சித்திரங்கள் வரைந்திருக்கிறார். விகடன் மதன் 'சிரி- சிந்தி சித்திரங்கள்' மிகவும் கூர்மையானவை என்பது குறிப்பிடத்தக்கது. 1975 டிசம்பரில் தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வெளியிட்ட குடியரசுத் தலைவர் ஃபக்ருதீன் அலி அகமது குளியல் தொட்டியில் இருந்தபடியே 'நெருக்கடி நிலைக்கு' கையெழுத்திடும் அபு ஆப்ரகாமின் கேலிச்சித்திரம் இன்றும் நினைவில் நிற்பது.

     15.08.2017 தேதியிட்ட "மலையாள மனோரமா நாளேட்டில் வந்த கேலிச்சித்திர வழக்கில் (மாமன் வர்க்கீஸ் எதிர் கேரள அரசு 24.07.2014)  கேலிச் சித்திர வரைவோரும் பத்திரிக்கை மற்றும் ஊடகத்தின் இன்றியமையாத மற்றும் ஒருங்கிணைந்த உட்கூறாவர். எனவே அரசியல் அமைப்புச் சட்டம் பிரிவு 19 (1) (a) வழங்கும் பேச்சு மற்றும் கருத்துச் சுதந்திர உரிமை அவர்களுக்கும் உண்டு என கேரள உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி மலையாள மனோரமாவுக்கு எதிரான வழக்கை தள்ளுபடி செய்தது. தமிழ்நாடு கார்ட்டுனிஸ்ட் பாலா மீது போடப்பட்ட வழக்கினையும் சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. (*பாலமுருகன் (எ) பாலா எதிர் காவல் ஆய்வாளர் 19.04.2021). 

     புகழ் பெற்ற ஓவியர் எம் ஃஎப் ஹூசைன் மீதான வழக்கில் (எம் ஃஎப் ஹூசைன் எதிர் ராஜ்குமார் பாண்டே(09.05.2008) உச்சநீதிமன்றம் கருத்து சுதந்திரத்தை உயர்த்திப்பிடித்து தீர்ப்பு வழங்கியது.

எனவே விகடன் இணையதளத்தை ஒன்றிய அரசு முடக்கியிருப்பது முற்றிலும் சனநாயகததிற்கு எதிரானது. பத்திரிக்கை உள்ளிட்ட ஊடகத்துறை சனநாயகத்தின் நான்காவது தூணாகும். அதைச் சிதைக்கும் வண்ணம் விகடன் இணையதளத்தை முடக்கியிருப்பது மக்கள் நாயகத்தின் மாண்பை சிதைக்கின்ற ஃபாசிச செயலாகும். 

     இதை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மக்கள் சிவில் உரிமைக் கழகம் (PUCL) வன்மையாகக் கண்டிக்கிறது. எனவே ஒன்றிய அரசு 

இம் முடக்கத்தை உடனே நீக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறது.



No comments:

Post a Comment