புதுடில்லி : கட்சியை ஒருங்கிணைப்பதற்காக, அ.தி.மு.க., பொதுச் செயலர் பழனிசாமிக்கு 10 நாட்கள் கெடு விதித்ததைத் தொடர்ந்து, தலைமையின் அதிருப்திக்கு ஆளானார் தமிழக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்.
இதையடுத்து செங்கோட்டையனை, அமைப்புச் செயலர் மற்றும் ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட செயலர் பொறுப்பில் இருந்து நீக்கி உத்தரவிட்டார் பழனிசாமி. அவருடைய ஆதரவாளர்களின் கட்சிப் பொறுப்பும் பறிக்கப்பட்டன.
இதன் தொடர்ச்சியாக, தமிழகம் முழுதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, கட்சியினரையும்; பொதுமக்களையும் சந்தித்து கட்சி ஒருங்கிணைப்பை வலியுறுத்தி பிரசாரம் மேற்கொள்வதோடு, பழனிசாமிக்கு எதிராக நியாயம் கேட்கும் நிகழ்வையும் துவங்கும் திட்டத்தில் இருந்தார் செங்கோட்டையன். இதற்கிடையில், பா.ஜ., தலைமை அலுவலகத்தில் இருந்து வந்த அழைப்பைத் தொடர்ந்து, நேற்று டில்லி சென்ற செங்கோட்டையன், அங்கு மத்திய அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து பேசியதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அமித் ஷாவின் இல்லத்தில் சந்திப்பு நடந்ததாகவும், அரை மணி நேரம் நீடித்ததாகவும் டில்லி அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.
அப்போது, தமிழக அரசியல் நிலவரம் மற்றும் அ.தி.மு.க., ஒருங்கிணைப்பு முயற்சியில் ஏற்பட்டிருக்கும் அதிர்வுகள் குறித்தெல்லாம் செங்கோட்டையனிடம் அமித் ஷா விரிவாக கேட்டறிந்ததாகவும் அவ்வட்டாரங்கள் மேலும் கூறின.
No comments:
Post a Comment