திருப்பூர்: ஊதிய ஒப்பந்தப்படியான நிலுவை தொகை வழங்குவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, காத்திருப்பு போராட்டம் நடத்தி வரும் ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள், பாடை கட்டி ஒப்பாரி பாடி போராட்டம் நடத்தினர். தமிழக அரசு போக்குவரத்து கழகங்களில் பணியாற்றி ஓய்வுபெற்ற ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கடந்த 22 நாட்களாக, திருப்பூரில் உள்ள அரசு பஸ் டிப்போ முன் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அதில், 15 வது நிதிக்குழு ஒப்பந்தப்படியான நிலுவைத் தொகையை வழங்க வேண்டும். கடந்த 2003ம் ஆண்டுக்குப் பின் பணியில் இணைந்தோருக்கு பென்சன் வழங்க வேண்டும்.
பணியின் போது இறந்த ஊழியர் குடும்பங்களுக்கு குடும்ப பென்சன் வழங்க வேண்டும். பணியாற்றும் ஊழியர்களுக்கு உரிய டி.ஏ. உயர்வு வழங்க வேண்டும். ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு நிலுவையின்றி அனைத்து பணப் பயன்களையும் வழங்க வேண்டும், என்பது உட்பட கோரிக்கைகளை முன்வைத்து, சி.ஐ.டி.யு., மற்றும் ஓய்வு பெற்ற ஊழியர் கூட்டமைப்பு ஆகியன சார்பில், இவற்றை வலியுறுத்தி இந்த போராட்டம் நடக்கிறது. அவ்வகையில், நேற்று, நுாதன போராட்டம் நடத்தினர். கோரிக்கைகளை நிறைவேற்றாத அரசு போக்குவரத்து கழகம் உயிரிழந்த சடலம் என்று குறிப்பிடும் வகையில், பாடை கட்டி அதில் ஒரு வைக்கோலில் செய்யப்பட்ட உருவத்தை வைத்து 'ஒப்பாரி' உடன் போராட்டம் நடத்தினர்.
இந்த தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள முன்னாள் போக்குவரத்து ஊழியர்கள் ஏற்கனவே அரை நிர்வாணப் போராட்டமும், கஞ்சி தொட்டி திறப்பு போராட்டமும் நடத்தியது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment