Saturday, 6 September 2025

செங்கோட்டையன் பதவி நீக்கம் பற்றி தினகரன் , நயினார் நாகேந்திரன் கருத்து.

 



செங்கோட்டையன் பதவி நீக்கம் அவருக்குப் பின்னடைவு அல்ல என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

இதுபற்றி செய்தியாளர்களிடம் பேசிய தினகரன், "அதிமுகவின் மூத்த நிர்வாகியான செங்கோட்டையன் கூறியது கட்சியைத் தாண்டி மக்கள் விரும்புகின்ற கோரிக்கை. அவரை நீக்குவது என்பது கெடுவான் கேடு நினைப்பான் என்பதைப் போன்ற செயல் ஆகும். அது அவருக்கு பின்னடைவு அல்ல, அவரை நீக்கியவர்களுக்கே பின்னடைவு என்பதை காலம் உணர்த்தும்." எனத் தெரிவித்தார்.      

   நயினார் நாகேந்திரன் கருத்து,

செங்கோட்டையனின் பதவி நீக்கம் தொடர்பாக பேசிய பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் அது அதிமுகவின் உட்கட்சி விவகாரம் எனத் தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்களிடம் பேசுகையில், "அரசியலில் எதுவும் நிரந்தரம் இல்லை. திமுகவை வீழ்த்த வேண்டுமென்றால் எல்லோரும் ஒன்றாக வந்தால் தான் வீழ்த்த முடியும். திமுக வேண்டாம் எனச் சொல்பவர்கள் அனைவரும் ஒன்று சேர வேண்டும். அதிமுக ஒன்றுபடுவது குறித்து அவர்கள் தான் முடிவெடுக்க வேண்டும்." எனத் தெரிவித்தார்.    

செங்கோட்டையன் பேசியது என்ன?

        கோபிச்செட்டிப்பாளையத்தில் நேற்று(05/06/2025) செய்தியாளர்களை சந்தித்த செங்கோட்டையன், "வெளியே சென்றவர்களை நாம் அரவணைக்க வேண்டும். எந்த நிபந்தனையும் இல்லை, எங்களை ஏற்றுக்கொள்ளுங்கள், உங்களோடு இணைந்து பணியாற்றுவோம், எந்தத் தியாகத்தையும் செய்து பணியாற்றுகிறோம் என்று பல்வேறு மேடைகளில், கடிதங்களில் சொல்லியிருக்கிறார்கள்.

    நாங்கள் எல்லோரும் தவித்துக்கொண்டிருக்கிறோம். யார் இதை எடுத்துச் சொல்வது என்ற நிலையில், நான் இதைப் பேசுகிறேன். மக்கள் ஆட்சி மாற்றம் தேவை என நினைக்கிறார்கள். அப்படி ஆட்சி மாற்றம் தேவை என்றால் வெளியே சென்றவர்களை ஒருங்கிணைக்க வேண்டும். வெளியே அமைதியாக இருப்பவர்களை மீண்டும் இணைக்க வேண்டும். அப்படிச் செய்யும்போதுதான், வெற்றிபெற முடியும். நாளை நம் ஆட்சி மலரப் போகிறது என யாராலும் சொல்ல முடியாது. என்னிடம் பலரும் பேசினார்கள். அதன் அடிப்படையில்தான் உங்களைச் சந்தித்துப் பேசுகிறேன். அவர்கள் (வெளியில் இருப்பவர்கள்) எந்தப் பொறுப்பும் தேவையில்லை என அவர்கள் சொல்லும்போது, நாம் அனைவரும் உறுதுணையாக இருக்க வேண்டும். இதனை விரைந்து செய்ய வேண்டும். தேர்தல் பணிகள் துவங்கிவிட்டன. அப்படிச் செய்யவில்லையென்றால் இந்த மனநிலையில் உள்ள அனைவரும் ஒன்றிணைந்து அந்தப் பணிகளை மேற்கொள்வோம். அதனைச் செய்யவில்லையென்றால் ஜெயலலிதா ஆட்சி மலர ஏதுவாக இருக்காது. இந்தப் பிரச்சனைக்கு முடிவுவந்தால்தான் சுற்றுப் பயணத்தில் கலந்துகொள்வேன்" என்றார்.       

        "அது நடக்கவில்லையென்றால் எல்லோரையும் ஒருங்கிணைத்து அந்த பணிகளைச்செய்வோம். 10 நாட்கள் காலக்கெடு. நாங்கள் ஆறு பேர் சென்று பேசிய பிறகு, கழகத்தின் பொதுவான கருத்துகளை என்னிடம் பேச முன்வரவில்லை. எல்லோரையும் ஒருங்கிணைக்கும்போதுதான் கட்சி ஒருமைப்படும். அப்போதுதான் நாம் மாபெரும் வெற்றியைப் பெற முடியும். இப்போது பத்திரிகையாளர்களை சந்தித்திருக்கிறேன். பிறகு இதே மனநிலையோடு இருப்பவர்களை கலந்தாலோசித்து முடிவெடுப்பேன். என்னுடைய மனநிலையை, தொண்டர்களின் மனநிலையை முன்வைத்திருக்கிறேன்" என்றும் அவர் கூறியுள்ளார்.                            

No comments:

Post a Comment