சம்பவம் குறித்து வெளியான தகவலின்படி, கடந்த ஆகஸ்ட் 28 அன்று, திமுக நகர மன்ற உறுப்பினர் ரம்யா ராஜா, தனது வார்டுக்குத் தேவையான கோப்பு ஒன்றைக் கொண்டு வருமாறு முனியப்பனிடம் கேட்டதாகவும், அதற்கு அவர் தாமதமாக பதிலளித்ததால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த ரம்யா ராஜா, நகர மன்றத் தலைவரின் கணவர் ரவிச்சந்திரனிடம் புகார் அளித்துள்ளார்.
அதன்பின், ரவிச்சந்திரன், ரம்யா ராஜா மற்றும் சிலர் சேர்ந்து முனியப்பனை நகராட்சி ஆணையரின் அறைக்கு அழைத்துச் சென்று, மன்னிப்பு கேட்கும்படி மிரட்டியுள்ளனர். அப்போது, முனியப்பன் அழுதபடியே இருக்கையில் அமர்ந்திருந்த ரம்யா ராஜாவின் காலில் விழுந்து மன்னிப்பு கோரியுள்ளார். இந்த சம்பவம் குறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து, பாதிக்கப்பட்ட முனியப்பன் அளித்த புகாரின் பேரில், ரம்யா ராஜா மற்றும் ரவிச்சந்திரன் உட்பட 5 பேர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் திண்டிவனம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.
No comments:
Post a Comment