Wednesday, 23 June 2021

கரோனாவால் இறப்போரின் எண்ணிக்கை குறைத்துக் காட்டப்படுகிறதா?- அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதில்

 கரோனாவால் இறப்போரின் எண்ணிக்கை குறைத்துக் காட்டப்படுகிறதா?

15 Jun 2021

திருச்சி விமான நிலையத்தில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:


''தமிழ்நாட்டில் கருப்புப் பூஞ்சை நோயால் இதுவரை 1,736 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நமக்கு 45,000 எண்ணிக்கை அளவுக்கு ஆம்போடெரிசின் மருந்துகள் தேவை எனக் கேட்டுள்ளோம். இதுவரை மத்திய அரசிடம் இருந்து 11,796 ஆம்போடெரிசின் மருந்துகள் வரப்பெற்றுள்ளன. அவற்றில் நோயாளிகளுக்கு அளித்ததுபோக 4,366 கையிருப்பில் உள்ளன. கருப்புப் பூஞ்சை பாதிப்பால் இதுவரை 77 பேர் இறந்துள்ளனர்.

தமிழ்நாட்டுக்கு நேற்றுவரை 1.10 கோடி கரோனா தடுப்பூசிகள் வந்துள்ளன. அதில் 1.05 கோடி பிரித்துக் கொடுக்கப்பட்டுள்ளது. இன்று காலை 6.16 லட்சம் தடுப்பூசிகள் வந்துள்ளன. அவற்றையும் பிரித்துக் கொடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. தினமும் 2 லட்சம் என்ற அடிப்படையில் பிரித்துக் கொடுக்கப்பட்டாலும்கூட, இன்னும் 3 நாட்களுக்குத் தடுப்பூசி போதும். மத்திய அரசு ஜூன் மாதத்துக்குள் கொடுக்க வேண்டியதை அட்டவணைப்படுத்தி, அதற்கேற்பப் பிரித்துக் கொடுத்து வருகின்றனர். நாமும் அவற்றை மாவட்ட வாரியாக விநியோகித்து வருகிறோம். எனவே இனிமேல் தட்டுப்பாடு இருக்காது என நினைக்கிறேன்.

கரோனாவால் பாதிக்கப்பட்டு இறப்போரின் எண்ணிக்கையைக் குறைத்துச் சொல்ல வேண்டிய அவசியம் அரசுக்கு இல்லை. நானும், சுகாதாரத்துறைச் செயலாளரும் இதுவரை 23 மாவட்டங்களில் ஆய்வுக்கூட்டத்தை நடத்தியுள்ளோம். அப்போது கரோனா தொற்றால் ஏற்படும் ஒரு மரணத்தைக்கூட மறைக்கக் கூடாது என ஆட்சியர்களிடம் அறிவுறுத்தியுள்ளோம். கரோனாவால் பாதிக்கப்படுவோர் சிகிச்சையில் சேரும்போது பாசிட்டிவ் ஆக இருக்கும். 7 நாட்களில் அது, நெகட்டிவ் ஆக மாறிவிடும்.

சில நேரங்களில் தொற்றால் பாதிக்கப்படுவோர் 20 நாட்கள் ஆன நிலையில் நுரையீரல் பாதிப்புஇணை நோய்கள் காரணமாக இறக்கும்போது, அவருக்கு பாசிட்டிவ் ஆக இருக்காது. ஐசிஎம்ஆர் வழிகாட்டுதல்படி ஒருவர் மரணிக்கும் தறுவாயில், அதற்கு என்ன நோய் காரணமாக இருந்ததோ அதைத்தான் சான்றிதழில் குறிப்பிட முடியும். இந்த நடைமுறை தமிழ்நாட்டில் மட்டுமல்ல, ஒட்டுமொத்த முதல் அலையிலும்கூட இதைத்தான் கூறியுள்ளனர். உதாரணமாக பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம், மறைந்த எம்.பி. வசந்தகுமார் ஆகியோர் மருத்துவமனையில் சேரும்போது பாசிட்டிவ் ஆக இருந்தது. அவர்கள் இறந்தபோது நெகட்டிவ் எனக் காட்டியது. எனவே அவர்களுக்கு நெகட்டிவ் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

கரோனாவால் பெற்றோரை இழந்து வாழும் ஆதரவற்ற குழந்தைகளுக்கு அரசு உதவித்தொகை அறிவித்துள்ளதால், இச்சான்றிதழ் சிலருக்கு அவசியமானதாக விளங்குகிறது.

. கரோனா சிகிச்சைக்காக சித்தா, ஆயுர்வேதம் தொடர்புடைய 69 மருத்துவ சிகிச்சை மையங்கள் அமைக்கப்பட்டு, இரண்டாம் அலையில் மட்டும் இதுவரை 22 ஆயிரம் பேர் குணமடைந்து, பயன்பெற்றுள்ளனர்''.

இவ்வாறு அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

பேட்டியின்போது பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

 

 

 

No comments:

Post a Comment