Tuesday, 30 June 2015

மெட்ரோ ரெயில் தண்டவாளத்தில் நடந்தால் 6 மாதம் ஜெயில் அல்லது ரூ.500 அபராதம்

சென்னை, ஜூன் 30–மெட்ரோ ரெயில் தண்டவாளத்தில் நடந்தால் 6 மாதம் ஜெயில் அல்லது ரூ.500 அபராதம்
சென்னையில் நேற்று தொடங்கப்பட்ட மெட்ரோ ரெயில் பயணம் பொது மக்களை பெரிதும் கவர்ந்துள்ளது. பாதுகாப்பு கருதி பல்வேறு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அதன் விவரம் வருமாறு:–
* குடித்து விட்டு, பயணிகளுக்கு இடையூறு – ரூ.500 அபராதம்.
* பிறருக்கு தீங்கு விளைவிக்கும் பொருட்கள் எடுத்து சென்றால் – ரூ.500 அபராதம்.
* அபாயகரமான பொருட்கள் எடுத்து சென்றால் – ரூ.5,000 அபராதம் மற்றும் நான்கு ஆண்டுகள் சிறை.
* ரெயிலில், எழுதுவது, போஸ்டர் ஒட்டினால் – 6 மாதங்கள் தண்டனை அல்லது 1,000 ரூபாய் அபராதம்.
* ரெயிலில் கூரையில் பயணம் செய்தால் – ஒரு மாதம் தண்டனை அல்லது ரூ.50 அபராதம்.
* சட்டத்திற்கு புறம்பாக ரெயிலில் நுழைந்தால் – 3 மாதங்கள் தண்டனை அல்லது ரூ.250 அபராதம்.
* சட்டத்திற்கு புறம்பாக ரெயில் தண்டவாளத்தில் நடந்தால் – 6 மாதங்கள் சிறை அல்லது ரூ.500 அபராதம்.
* ரெயில் இயக்கத்திற்கு தடை ஏற்படுத்தினால் – 4 ஆண்டுகள் தண்டனை அல்லது ரூ.5,000 அபராதம்.
* முறையான பயண சீட்டு இல்லாமல் பயணித்தால் – பயண தொகையுடன், ரூ.50 அபராதம்.
* அவசர அழைப்பு மணியை தவறாக பயன்படுத்தினால் – ஒரு ஆண்டு தண்டனை அல்லது ரூ.1,000 அபராதம்.
* அத்துமீறி பொருட்கள் விற்பனை – 6 மாதங்கள் தண்டனை அல்லது ரூ.500 அபராதம்.
* போலி பயண சீட்டு விற்பனை – 3 மாதங்கள் தண்டனை அல்லது ரூ.500 அபராதம்.
* மெட்ரோ ரெயில் பொருட்களை சேதப்படுத்தினால் – 10 ஆண்டு சிறை தண்டனை.
* தவறான தகவல் மூலம் இழப்பீடு கேட்பது – 3 ஆண்டுகள் சிறை தண்டனை.
* நாசவேலையில் ஈடுபட்டால் – ஆயுள் தண்டனை, 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும்

ஹெல்மெட் அணியாவிட்டால் வாகனம் பறிமுதல்: அரசு உத்தரவை எதிர்த்த வழக்குகள் தள்ளுபடி - ஐகோர்ட்டு உத்தரவு

சென்னை, ஜூன் 30–
சென்னை ஐகோர்ட்டில், ஒரு வக்கீலிடம் உதவியாளராக பணியாற்றும் டி.கோபாலகிருஷ்ணன் ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள பொது நல மனுவில் கூறியிருப்பதாவது:–
ஜூலை 1–ந்தேதி முதல் மோட்டார் சைக்கிளை ஓட்டுபவர்கள், பின்னால் அமர்ந்து பயணம் செய்பவர்கள் கண்டிப்பாக ஹெல்மெட் அணியவேண்டும். ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டுபவர்களின் மோட்டார் சைக்கிள், அந்த மோட்டார் சைக்கிளின் பதிவு சான்றிதழ், ஓட்டுனர் உரிமம் ஆகியவை பறிமுதல் செய்யப்படும் என்று தமிழக உள்துறை செயலாளர் கடந்த 18–ந்தேதி அரசாணை வெளியிட்டுள்ளார்.
ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டினால், வாகனத்தை ஓட்டியவருக்கு மோட்டார் வாகனச் சட்டத்தின்படி அபராதம் மட்டுமே விதிக்க முடியும். வாகன பதிவுச் சான்றிதழை பறிமுதல் செய்யவேண்டும் என்று எந்த ஒரு சட்டமும் கூறவில்லை.
கடந்த 2011ம் ஆண்டு தமிழக உள்துறை செயலாளர் பிறப்பித்துள்ள அரசாணையின்படி, ஹெல்மெட் இல்லாமல் வாகனத்தை ஓட்டுபவர்களுக்கு ரூ.100 முதல் ரூ.300 வரை அபராதம் விதிக்கலாம் என்று மட்டுமே கூறியுள்ளார். எனவே, ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டுபவர்களின் வாகனத்தில் பதிவுச் சான்றிதழ், ஓட்டுனர் உரிமம் உள்ளிட்டவைகளை பறிமுதல் செய்யப்படும் என்று கடந்த 18ந் தேதி தமிழக உள்துறை செயலாளர் பிறப்பித்துள்ள உத்தரவை ரத்து செய்யவேண்டும். அந்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனு தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல், நீதிபதி டி.எஸ்.சிவஞானம் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது வக்கீல் வசந்தகுமார் ஆஜராகி வாதிட்டார். அவற்றின் விவரம்:
வக்கீல்:– தாக்கல் செய்யப்பட்டுள்ள இது வழக்கு பொதுநல வழக்கு...
நீதிபதிகள்:– ஹெல்மெட் அணியாமல் விபத்தில் சிக்கி மக்கள் சாகவேண்டும் என்று தாக்கல் செய்யப்பட்ட பொதுநல வழக்கா?
வக்கீல்:– இல்லை. மோட்டார் வாகனச் சட்டத்தின்படி ஹெல்மெட் அணியவில்லை என்றால் அபராதம் தான் விதிக்க முடியும். அதற்காக ஆவணங்களை, வாகனங்களை பறிமுதல் செய்ய சட்டம் எதுவும் இல்லை. ஏற்கனவே தமிழக அரசு பிறப்பித்த அரசாணையில், அபராதம் மட்டுமே விதிக்கப்படும் என்று கூறியிருந்தது. ஆனால், இப்போது ஆவணங்கள், வாகனங்கள் பறிமுதல் என்று புதிய கட்டுப்பாடுகளை உருவாக்கியுள்ளது.
நீதிபதிகள்:– இந்த வழக்கில் பொதுநலன் என்று எதுவும் இல்லை. அதனால் இந்த வழக்கை தள்ளுபடி செய்கிறோம்.
இவ்வாறு விவாதம் நடந்தது.
இதன்பின்னர், நியூ இந்தியா மக்கள் அமைப்பு என்ற அறக்கட்டளையின் தலைவர் ஜெ.எஸ்.நிம்முவசந்த் என்பவர் தாக்கல் செய்த பொதுநல மனுவை நீதிபதிகள் விசாரணைக்கு எடுத்தனர். அந்த வழக்கு மனுவில், ‘கட்டாய ஹெல்மெட் அணிய வேண்டும் என்று கடந்த 18–ந்தேதி தமிழக அரசு பிறப்பித்துள்ள உத்தரவு சட்டவிரோதமானது. ஹெல்மெட் அணிவதால் மட்டுமே விபத்தில் சிக்குபவர்கள் உயிர் பிழைத்து விடுவார் என்று கூற முடியாது. விபத்தில் தலையில் மட்டும் அடிப்பட்டு யாரும் சாவதில்லை. மேலும், ஹெல்மெட் அணிவது என்பது பெண்கள், குழந்தைகள் ஆகியோருக்கு முடியாத காரியம். கொண்டை போட்ட பெண்ணால், ஹெல்மெட் அணிய முடியாது. எனவே, வாகனத்தில் பின்னால் அமர்ந்து இருக்கும் பெண்கள், குழந்தைகளும் ஹெல்மெட் அணியவேண்டும் என்ற உத்தரவை ரத்து செய்ய வேண்டும்’ என்று கூறியிருந்தார்.
இந்த மனு மீதான விவாதம் பின்வருமாறு:–
நீதிபதிகள்:– அறக்கட்டளை என்று கூறியுள்ளீர்கள். இந்த அறக்கட்டளையின் அடிப்படையில் நோக்கத்தில், போக்குவரத்து, சாலை, மோட்டார் சைக்கிள் தொடர்பான ஏதாவது உள்ளதா?
மனுதாரர் நிம்மு வசந்த்:– அதுதொடர்பான தீர்மானம் இயற்றியுள்ளோம்.
நீதிபதிகள்:– தீர்மானம் என்பது தேவையற்றது. அறக்கட்டளை தொடங்கும்போது என்ன நோக்கத்துக்காக தொடங்கப்பட்டதோ? அதில் போக்குவரத்து உள்ளிட்டது தொடர்பான ஏதாவது ஒரு தகவல் உள்ளதா?
மனுதாரர்:– பெண்கள், குழந்தைகள் ஹெல்மெட் அணிய முடியாது. இப்போது அரசு பிறப்பித்துள்ள உத்தரவு, பொதுமக்களுக்கு மிகப்பெரிய தண்டனை வழங்குவது போல உள்ளது. டாஸ்மாக் விற்பனைக்கு ஊக்கம் அளிக்கும் அரசு, சாலைகளை மேம்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
நீதிபதிகள்:– இந்த வழக்கை தள்ளுபடி செய்கிறோம்.
இவ்வாறு விவாதம் நடந்தது.

ஆர்.கே.நகர் வெற்றி: ஜெயலலிதாவுக்கு கவர்னர் வாழ்த்து

சென்னை, ஜூன் 30–
ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் முதல்–அமைச்சர் ஜெயலலிதா பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதையடுத்து கவர்னர் கே.ரோசய்யா, முதல்–அமைச்சர் ஜெயலலிதாவை டெலிபோனில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தார்.
தனக்கு வாழ்த்து தெரிவித்த கவர்னருக்கு முதல்– அமைச்சர் ஜெயலலிதா நன்றியை தெரிவித்துக்கொண்டாஆர்.கே.நகர் வெற்றி: ஜெயலலிதாவுக்கு கவர்னர் வாழ்த்துர்.

எம்.எல்.ஏ.வாக ஜெயலலிதா இன்று மாலை பதவி ஏற்கிறார்

சென்னை, ஜூன் 30–
சென்னை ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் முதல்–அமைச்சர் ஜெயலலிதா அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார்.
அவரை எதிர்த்து போட்டியிட்ட 27 பேருக்கும் டெபாசிட் பறிபோனது.
முதல்–அமைச்சர் ஜெயலலிதா வெற்றி பெற்றதை தேர்தல் அதிகாரி இன்று மதியம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். வெற்றி பெற்றதற்கான சான்றிதழை அவர் ஜெயலலிதாவின் முகவரிடம் ஒப்படைத்தார்.
இதையடுத்து அந்த வெற்றி சான்றிதழ் போயஸ் கார்டனுக்கு கொண்டு செல்லப்பட்டது. அதை அ.தி. மு.க. மூத்த தலைவர்கள் ஜெயலலிதாவிடம் ஒப்படைத்தனர்.
இதையடுத்து முதல்–அமைச்சர் ஜெயலலிதா இன்றே எம்.எல்.ஏ. ஆக பதவி ஏற்க முடிவு செய்துள்ளார். இதற்காக இன்று மாலை 4 மணிக்கு அவர் தலைமை செயலகத்துக்கு செல்கிறார்.
சபாநாயகர் அறையில் ஜெயலலிதா பதவி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெறும். மாலை 4.30 மணிக்கு ஜெயலலிதா ஆர்.கே.நகர் தொகுதி எம்.எல்.ஏ. ஆக பதவி ஏற்றுக்கொள்கிறார்.
அவருக்கு சபாநாயகர் தனபால் பதவி பிரமாணம் செய்து வைப்பார்.
எம்.எல்.ஏ. ஆக பதவி ஏற்ற பிறகு முதல்–அமைச்சர் ஜெயலலிதா புதிய திட்ட தொடக்க விழாவில் கலந்து கொள்கிறார்.
"

முதல்வர் ஜெயலலிதா அமோக வெற்றி: வாக்கு வித்தியாசம் 1,51,252 - எதிர்த்து போட்டியிட்ட அனைவரும் டெபாசிட் இழப்பு

சென்னை, ஜூன் 30-

ஆர். கே. நகர் இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளராக போட்டியிட்ட முதல்வர் ஜெயலலிதா அமோக வெற்றி பெற்றார். இத்தேர்தலில் ஒட்டுமொத்த 2,40,543 வாக்குகளில் 181032 வாக்குகள் பதிவாகின. இதில் வாக்கு எண்ணிக்கை சற்றுமுன் முடிவடைந்த நிலையில் முதல்வர் ஜெயலலிதாவுக்கு 160921 வாக்குகளும், இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் மகேந்திரனுக்கு 9669 வாக்குகளும் கிடைத்தன. இதன் மூலம் 1,51,252 வாக்குகள் வித்தியாசத்தில் ஜெயலலிதா வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்களும் டெபாசிட் இழந்தனர்.

சுற்றுவாரியாக கிடைத்த ஒட்டு மொத்த வாக்குகள் விவரம் பின்வருமாறு:

1வது சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவு: ஜெயலலிதா - 9546 வாக்குகள் - மகேந்திரன் - 930 வாக்குகள்

2வது சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவு: ஜெயலலிதா - 20398 வாக்குகள் - மகேந்திரன் - 1647 வாக்குகள்

3வது சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவு: ஜெயலலிதா - 30329 வாக்குகள் - மகேந்திரன் - 2297 வாக்குகள்

4வது சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவு: ஜெயலலிதா - 38806 வாக்குகள் - மகேந்திரன் - 2809 வாக்குகள்

5வது சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவு: ஜெயலலிதா - 49000 வாக்குகள் - மகேந்திரன் - 3713 வாக்குகள்

6வது சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவு: ஜெயலலிதா - 58297 வாக்குகள் - மகேந்திரன் - 4349 வாக்குகள்

7வது சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவு: ஜெயலலிதா - 67899 வாக்குகள் - மகேந்திரன் - 4876 வாக்குகள்

8வது சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவு: ஜெயலலிதா - 77309 வாக்குகள் - மகேந்திரன் - 5426 வாக்குகள்

9வது சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவு: ஜெயலலிதா - 87026 வாக்குகள் - மகேந்திரன் - 5941 வாக்குகள்

10வது சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவு: ஜெயலலிதா - 98990 வாக்குகள் - மகேந்திரன் - 6278 வாக்குகள்

11வது சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவு: ஜெயலலிதா - 109653 வாக்குகள் - மகேந்திரன் - 6710 வாக்குகள்

12வது சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவு: ஜெயலலிதா - 118043 வாக்குகள் - மகேந்திரன் - 7215 வாக்குகள்

13வது சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவு: ஜெயலலிதா - 126666 வாக்குகள் - மகேந்திரன் - 7765 வாக்குகள்

14வது சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவு: ஜெயலலிதா - 135517 வாக்குகள் - மகேந்திரன் - 8097 வாக்குகள்

15வது சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவு: ஜெயலலிதா - 146247 வாக்குகள் - மகேந்திரன் - 8854 வாக்குகள்

16வது சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவு: ஜெயலலிதா - 155963 வாக்குகள் - மகேந்திரன் - 9420 வாக்குகள்

17வது சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவு: ஜெயலலிதா - 160921 வாக்குகள் - மகேந்திரன் - 9669 வாக்குகள்

சுயேட்சை வேட்பாளர் டிராபிக் ராமசாமிக்கு 3604 வாக்குகள் மட்டுமே கிடைத்தது.

Monday, 29 June 2015

பறக்கும் ரெயிலை விட மெட்ரோ ரெயில் பாதுகாப்பானது: பொதுமக்களின் முதல் பயண திரில் அனுபவம்

மெட்ரோ ரெயிலில் பயணம் செய்த அனுபவம் பற்றி பயணிகள் கூறியதாவது:–பறக்கும் ரெயிலை விட மெட்ரோ ரெயில் பாதுகாப்பானது: பொதுமக்களின் முதல் பயண திரில் அனுபவம்
சரஸ்வதி (பரங்கிமலை):– மெட்ரோ ரெயில் பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன். இதுவரை பயணம் செய்தது கிடையாது. இன்று முதல் முறையாக பயணம் செய்ய வேண்டும் என்ற ஆர்வத்தில் குடும்பத்துடன் வந்தோம்.
ரெயில் நிலையமே பளிச்சென்று சொர்க்கலோகம் போல் காட்சியளிக்கிறது. ஏதோ வெளிநாட்டில் இருப்பது போன்ற உணர்வுதான் ஏற்பட்டது. சென்னையில் பறக்கும் ரெயிலில் அடிக்கடி பயணம் செய்திருக்கிறேன்.
ஆனால் இந்த ரெயிலில் அதே போல் படிக்கட்டில் யாரும் நிற்க முடியாது. கதவுகள் மூடிக் கொள்வதால் பயணம் பாதுகாப்பாக இருக்கிறது. ரெயில் முழுவதும் சில்லென்று ஏ.சி. குளிர் இருப்பதால் பயணமே ஒரு திரில்லிங்காக இருக்கிறது.
ஜோன்னா (தி.நகர்):– முதல் மெட்ரோ ரெயிலில் பயணம் செய்தது சரித்திரத்தில் இடம் பிடித்தது போல உள்ளது. இதை நான் நினைத்துப் பார்க்கவில்லை. பரங்கிமலை மீது நின்றால்தான் சென்னையின் அழகை பார்க்க முடியும் என்று சொல்வார்கள். ஆனால் தற்போது மெட்ரோ ரெயிலில் சென்றாலே சென்னையின் அழகை ரசிக்கலாம்.
இந்த ரெயில் பயணம் ரொம்ப பாதுகாப்பானது. குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும். சிரமம் இல்லை. தலைவலி இல்லை. வெயில் தெரியாது. போக்குவரத்து நெரிசல் இல்லை. வெளிநாடுகளில் அப்படி இருக்கு, இப்படி இருக்கு என்று பெருமைப்பட்டு பேசுவோம். இப்போது அதை சென்னையில் மெட்ரோ ரெயிலில் பயணம் மூலம் சொகுசாக அனுபவிக்கிறோம்.
கல்யாணி (மடிப்பாக்கம்):– நானும், எனது கணவரும் ஒரு திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக மெட்ரோ ரெயிலில் செல்கிறோம். முதல் நாளிலேயே மெட்ரோ ரெயிலில் சென்றது மகிழ்ச்சியான அனுபவமாக உள்ளது. இனி வடபழனி, கோயம்பேட்டுக்கு நாங்கள் மெட்ரோ ரெயிலிலேயே பயணம் செய்வோம்.
பூஜா (வடபழனி):– மிக உயரமான மேம்பாலத்தில் ரெயில் போகும்போது சென்னை நகரை பார்க்கும் அழகே தனி. அழகாக தெரிகிறது. கத்திப்பாரா மேம்பாலத்தின் மேல் செல்லும் போது தாழ்வாக பறந்து விமானம் தொட்டு விடும் தூரத்தில் செல்வது போல் பார்க்க பிரம்மிப்பாக உள்ளது

ஹெல்மெட் சட்டத்தில் ஆவணம் பறிமுதல் அரசாணைக்கு தடை விதிக்க கோரி வழக்கு

சென்னை, ஜூன் 29–ஹெல்மெட் சட்டத்தில் ஆவணம் பறிமுதல் அரசாணைக்கு தடை விதிக்க கோரி வழக்கு
சென்னை ஐகோர்ட்டில், கோபாலகிருஷ்ணன் என்பவர் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில் கூறியிருப்பதாவது:–
மோட்டார் வாகன விபத்து வழக்கு ஒன்றை விசாரித்த ஐகோர்ட்டு, வருகிற ஜூலை 1–ந்தேதி முதல் மோட்டார் சைக்கிள்களை ஓட்டுபவர்கள், பின்னால் உட்கார்ந்து பயணம் செய்பவர்கள் ஆகியோர் கண்டிப்பாக ஹெல்மெட் அணிய வேண்டும் என்று தமிழக உள்துறை செயலாளர், டி.ஜி.பி. உத்தரவிட வேண்டும் என்று உத்தரவிட்டது. இதனடிப்படையில் கடந்த 18–ந்தேதி தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.
அதில், 'ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டுபவர்களின் வாகனம், அந்த வாகனத்தின் பதிவு சான்றிதழ், ஓட்டுனர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களை போலீசார் பறிமுதல் செய்வார்கள். ஆவணங்கள் இல்லாத வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்வார்கள். அந்த ஆவணங்களை காட்டிய பின்னர், போலீசாரிடம் சான்றிதழ் பெற்று சம்பந்தப்பட்ட கோர்ட்டுக்கு சென்று அபராதம் செலுத்த வேண்டும் என்று கூறியுள்ளது.
மேலும் புதிய ஹெல்மெட் வாங்கி, அதற்கான ரசீதை போலீசாரிடம் காட்ட வேண்டும் என்று கூறுவது தேவையில்லாத குழப்பத்தையும், சிரமத்தையும் பொதுமக்கள் மத்தியில் ஏற்படுத்தும். மேலும், வாகனங்களில் ஆவணங்களையும் பறிமுதல் செய்வது என்பது சட்டவிரோதமாகும். எனவே, கடந்த 18-ந்தேதி பிறப்பிக்கப்பட்ட இந்த அரசாணையை ரத்து செய்ய வேண்டும். அந்த அரசாணைக்கு தடை விதிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனு தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல், நீதிபதி டி.எஸ்.சிவஞானம் ஆகியோர் முன்பு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது

தந்தை தற்கொலை வழக்கை சி.பி.சி.ஐ.டி விசாரிக்க கோரி மகன் மனு: கடலூர் போலீஸ் சூப்பிரண்டுக்கு ஐகோர்ட்டு நோட்டீசு

சென்னை, ஜூன்.29–
கடலூர் மாவட்டம், சிதம்பரத்தை சேர்ந்தவர் என்.ராஜராஜன்.தந்தை தற்கொலை வழக்கை சி.பி.சி.ஐ.டி விசாரிக்க கோரி மகன் மனு: கடலூர் போலீஸ் சூப்பிரண்டுக்கு ஐகோர்ட்டு நோட்டீசு
இவர், ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:–
என் தந்தை மாதவன், டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வந்தார். இவர் ஒரு லாரியை வங்கியில் கடன் பெற்று வாங்கினார். இந்த லாரியை சிதம்பரம் மேலவீதியில் பழக்கடை வைத்திருக்கும் பாலகிருஷ்ணன் என்பவர் என் தந்தையின் நண்பர். இவர், இந்த லாரியை தனக்கு குத்தகைக்கு தரவேண்டும் என்றும் வங்கியில் செலுத்த வேண்டிய மாதத் தொகையை தானே செலுத்தி விடுவதாகவும், முன் பணம் ரூ.1 லட்சம் தருவதாகவும் கூறினார். இதன்படி ஏற்பட்ட வாய்மொழி ஒப்பந்தப்படி, அந்த லாரியை பாலகிருஷ்ணனுக்கு என் தந்தை வழங்கினார்.
ஆனால், அவர் சொன்ன படி தவணைத் தொகையை செலுத்தவில்லை. லாரியையும் திருப்பித் தரவில்லை. இதையடுத்து சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன் என்று என் தந்தை கூறியதும், அந்த லாரியை ‘பைசல் மகால்’ முன்பு நிறுத்தியுள்ளதாகவும், அதை எடுத்துக்கொள் என்றும் பாலகிருஷ்ணன் கூறினார்.
அந்த லாரியை சென்று பார்த்தபோது, பேட்டரி, சக்கரம் உள்ளிட்டவைகள் முக்கிய பொருட்கள் இல்லை. அதேநேரம், என் தந்தை மீது சிதம்பரம் டவுண் போலீசில் கடந்த 2014–ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பொய் புகார் செய்தார். அப்போது சப்-இன்ஸ்பெக்டர் கதிரவன், என் தந்தையை மிரட்டி வெற்றுப் பேப்பரில் கையெழுத்து வாங்கினார்.
இதன் பின்னர் கடந்த மார்ச் மாதம் என் தந்தையை, இன்ஸ்பெக்டர் ‘லாமேக்’ அழைத்து ரூ.1.50 லட்சத்தை பால கிருஷ்ணனுக்கு கொடுக்க வேண்டும் என்று மிரட்டினார். ஆனால், ரூ.90 ஆயிரத்தை பாலகிருஷ்ணன்தான் தனக்கு தர வேண்டும் என்று என் தந்தை கூறியதை இன்ஸ்பெக்டர் லாமேக் கேட்கவில்லை. பொய் வழக்கு போட்டு உள்ளே தள்ளிவிடுவேன் என்றும் மிரட்டினார்.
மேலும், தே.மு.தி.க. நிர்வாகி விஜயகுமார் மற்றும் அடியாட்களுடன் பாலகிருஷ்ணன் எங்கள் வீட்டுக்கு வந்து மிரட்டி தொந்தரவு செய்து வந்தார். இதனால் மனவேதனை அடைந்த என் தந்தை, முதல்-அமைச்சர் தனிப்பரிவு, ஐகோர்ட்டு தலைமை பதிவாளர், கடலூர் மாவட்ட முதன்மை நீதிபதி, கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு என்று எல்லாருக்கும் கடிதத்தை எழுதி அனுப்பி விட்டு தற்கொலை செய்து கொண்டார்.
அந்த கடிதத்தில் தன்னை சித்ரவதை செய்த இன்ஸ்பெக்டர் லாமேக் உட்பட பலர் மீது குற்றம் சுமத்தியிருந்தார். இதுகுறித்து சந்தேகச் சாவு என்று வழக்குப்பதிவு செய்த போலீசார் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளனர். இந்த வழக்கில் போலீஸ் அதிகாரிக்கு தொடர்பு உள்ளதால், உள்ளூர் போலீசார் விசாரணை நடத்தினால் நியாயமாக இருக்காது. என் தந்தை தற்கொலை வழக்கை சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்ற வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனு நீதிபதி பி.என்.பிரகாஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் சார்பில் வக்கீல் ஆர்.முருகபாரதி ஆஜராகி வாதிட்டார். இதையடுத்து, மனுவுக்கு 3 வாரத்துக்குள் பதிலளிக்கும்படி கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு, சிதம்பரம் டவுண் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் ஆகியோருக்கு நோட்டீசு அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார்.
"

ஆலந்தூரில் இருந்து புறப்பட்ட முதல் மெட்ரோ ரெயிலை இயக்கிய சென்னை பெண் பிரீத்தி


ஆலந்தூரில் இருந்து புறப்பட்ட முதல் மெட்ரோ ரெயிலை இயக்கிய சென்னை பெண் பிரீத்தி
ஆலந்தூரில் இருந்து புறப்பட்ட முதல் மெட்ரோ ரெயிலை இயக்கிய சென்னை பெண் பிரீத்தி
சென்னை, ஜூன் 29-

சென்னையில் ரூ.14 ஆயிரத்து 600 கோடி செலவில் நடந்து வரும் மெட்ரோ ரெயில் திட்டப்பணிகளில் முதல் கட்டமாக கோயம்பேடு–ஆலந்தூர் இடையிலான மெட்ரோ ரெயில் சேவையை முதலமைச்சர் ஜெயலலிதா இன்று காணொலி மூலம் தொடங்கி வைத்தார்.

இதையடுத்து, சரியாக பகல் 12.16 மணிக்கு ஆலந்தூரில் இருந்து கோயம்பேடு நோக்கி புறப்பட்ட முதல் மெட்ரோ ரெயிலை சென்னை சைதாப்பேட்டையை சேர்ந்த பிரீத்தி என்பவர் ஓட்டி சாதனை படைத்துள்ளார்.

மெட்ரோ ரெயில் திட்டம் தொடர்பான அறிவிப்பு வெளியானவுடன் ஏற்கனவே செய்துவந்த பணியை ராஜினாமா செய்துவிட்டு மெட்ரோ ரெயிலை இயக்குவதற்கான ஓட்டுனர் வேலைக்கு இவர் மனு செய்தார். அதிர்ஷ்டவசமாக இந்த பணிக்கான ஒரே பெண்ணாக பிரீத்தி தேர்வானார். 

பின்னர், இதற்கான தனிப் பயிற்சிகளை நிறைவு செய்து, சென்னையின் முதல் மெட்ரோ ரெயிலை இயக்கியவர் என்ற சிறப்பிடத்தை இவர் பிடித்துள்ளார். சென்னை தரமணியில் உள்ள தர்மாம்பாள் பெண்கள் பாலிடெக்னிக் கல்லூரியில் டிப்ளோமா பட்டம் பெற்றவர் பிரீத்தி, என்பது குறிப்படத்தக்கது.

Saturday, 27 June 2015

மெட்ரோ ரெயில் பணியின்போது பள்ளம் விழுந்த சாலையில் ரசாயன கலவை கொப்பளித்ததால் பரபரப்பு

சென்னை, ஜூன் 28- 

சென்னை அரசு பொது மருத்துவமனை அருகே நடந்த மெட்ரோ ரெயில் பணியின்போது ஏற்கனவே ஏற்பட்ட பள்ளத்தில் இருந்து நேற்று ரசாயன கலவை கொப்பளித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் மீண்டும் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டு, பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டனர். 

சென்னையில் மெட்ரோ ரெயில் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது. சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை எதிரே உள்ள பூந்தமல்லி சாலையில் நேற்று முன்தினம் பிற்பகல் திடீரென பெரிய பள்ளம் ஏற்பட்டது. இதில் அந்த வழியாக வந்த கார் ஒன்று பள்ளத்தில் சிக்கிக்கொண்டது. 

நல்லவேளையாக கார் மெதுவாக வந்ததால் அதில் இருந்தவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர். இந்த சம்பவத்தால் அந்த சாலையில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. அந்த பள்ளத்தில் மெட்ரோ ரெயில் ஊழியர்கள் அவசரமாக கலவை மற்றும் மணல் கொட்டியும், ராட்சத இரும்பு தகடுகள் பொருத்தியும் சரிசெய்தனர். இதனால் அங்கு போக்குவரத்து சீரானது. 

இந்தநிலையில், நேற்று பிற்பகலில் அதே இடத்தில் இரும்பு தகடு பொருத்தப்பட்ட பகுதியில் இருந்து ரசாயன கலவை கொப்பளித்து வெளியே வந்தது. சில நிமிடங்களில் சாலை முழுவதும் ரசாயன கலவை தேங்கியது. தொடர்ந்து ரசாயன கலவை வெளியேறிக் கொண்டு இருந்ததால் அந்த வழியாக சென்றவர்கள், அங்கிருந்த கடைக்காரர்கள் அதிர்ச்சி அடைந்தனர். 

இதனால் நேற்று பிற்பகலில் மீண்டும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த தகவல் அறிந்த மெட்ரோ ரெயில் ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு வந்தனர். பாதுகாப்பு கருதி போலீசாரும் அங்கு குவிக்கப்பட்டனர். 

பின்னர் மெட்ரோ ரெயில் ஊழியர்கள் சாலையில் தேங்கி வழிந்தோடிய ரசாயன கலவையை அப்புறப்படுத்தினர். பின்னர் அந்த இடத்தை சுற்றிலும் சிமெண்ட் மூட்டைகளை அடுக்கி, எஞ்சிய பாதையில் வாகனங்கள் செல்ல அனுமதித்தனர். தொடர்ந்து ரசாயன கலவையை அப்புறப்படுத்தும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். 

இதன் காரணமாக சென்டிரலில் இருந்து பாரிமுனை செல்வதற்கு 20 நிமிடங்களுக்கு மேல் ஆனது. இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். 

இந்த பள்ளத்தை நிரந்தமாக சீரமைக்கும்படி பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதுகுறித்து மெட்ரோ ரெயில் அதிகாரிகள் கூறுகையில், ‘‘நகரின் முக்கியமான பகுதி என்பதாலும், அரசு மருத்துவமனை அருகில் உள்ளதாலும் தற்காலிக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு போக்குவரத்து சரிசெய்யப்பட்டுள்ளது. ஆனால் இரவோடு இரவாக இந்த பள்ளம் சரிசெய்யப்பட்டு, போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றனர்.

இருசக்கர வாகனங்களில் செல்வோர் ஹெல்மெட் அணிவது குறித்து சென்னை போலீசாரின் புதிய நிபந்தனைகள்


இருசக்கர வாகனங்களில் செல்வோர் கட்டாயமாக ஹெல்மெட் அணிவது தொடர்பாக சென்னை போலீசார் புதிய நிபந்தனைகளை அறிவித்துள்ளனர்.

சென்னை மாநகர காவல்துறை சார்பில் நேற்று வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- 

தமிழக அரசு கடந்த 17-ந் தேதி வெளியிட்டுள்ள பொது அறிவிப்பில், வருகிற 1-ந் தேதி முதல் இருசக்கர வாகன ஓட்டுநர் மற்றும் வாகனத்தின் பின்னால் அமர்ந்து செல்பவரும் கட்டாயமாக ஹெல்மெட் அணிய வேண்டும் என்றும், தவறும்பட்சத்தில் மோட்டார் வாகன சட்டம் 1988, பிரிவு 206-ன் கீழ், வாகன ஓட்டியின் ஓட்டுநர் உரிமம் உள்பட இருசக்கர வாகனத்தின் அனைத்து ஆவணங்களும் பறிமுதல் செய்யப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

ஐ.எஸ்.ஐ. தரச்சான்று பெற்ற புதிய ஹெல்மெட் மற்றும் அதனை வாங்கியதற்கான ரசீது ஆகியவற்றை சமர்ப்பிக்கும் பட்சத்தில் பறிமுதல் செய்யப்பட்ட மேற்படி ஆவணங்கள் திரும்ப அளிக்கப்படும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

மோட்டார் வாகன சட்டம் 1988-ல் கூறப்பட்டுள்ள ஹெல்மெட் அணிவது தொடர்பான விதிமுறைகளை வருகிற 1-ந் தேதி முதல் சென்னை காவல்துறை கடுமையாக அமல்படுத்த உள்ளது. அதன்படி, இருசக்கர வாகனம் ஓட்டும் நபரோ அல்லது பின்னால் அமர்ந்து செல்பவரோ தலைக்கவசம் அணியாமல் செல்வது கண்டுபிடிக்கப்பட்டால், மோட்டார் வாகன சட்டம் 1988-ன் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். 

சென்னை ஐகோர்ட்டு கடந்த 8-ந் தேதி வழங்கியுள்ள ஆணையின்படியும், மோட்டார் வாகன சட்டம் 1988, பிரிவு 206-ன்படியும், இருசக்கர வாகன ஓட்டியின் அசல் ஓட்டுநர் உரிமம், வாகன பதிவு சான்றிதழ் மற்றும் இருசக்கர வாகனம் சம்பந்தப்பட்ட அசல் ஆவணங்கள் அனைத்தும், உரிய ஒப்புகைக்கு பின், பறிமுதல் செய்யப்பட்டு, அனைத்து அசல் ஆவணங்களும் சம்பந்தப்பட்ட நீதிமன்றத்திற்கு மேல் நடவடிக்கைக்காக அனுப்பப்படும். ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகன பதிவு சான்றிதழ் போன்ற ஆவணங்களின் நகல்கள் (ஜெராக்ஸ்) ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. 

இருசக்கர வாகனம் ஓட்டும் விதி மீறுபவர் மேற்கூறப்பட்ட அசல் ஆவணங்களை வைத்திருக்காத பட்சத்தில், மோட்டார் வாகன சட்டம் 1988, பிரிவு 207-ன்படி இருசக்கர வாகனம் தற்காலிகமாக பறிமுதல் செய்யப்பட்டு, சம்பந்தப்பட்ட போக்குவரத்து காவல் நிலையத்தில் நிறுத்திவைக்கப்படும். இதற்கு உண்டான ஒப்புகை சீட்டு விதி மீறுபவருக்கு வழங்கப்படும். 

மேற்படி விதி மீறுபவர் அசல் ஆவணங்களை (ஓட்டுநர் உரிமம், வாகன பதிவு சான்றிதழ்) காவல் அதிகாரியால் அளிக்கப்பட்ட ஒப்புகை சீட்டுடன் சம்பந்தப்பட்ட போக்குவரத்து காவல் நிலையத்தில் காலை 10 மணி முதல் மாலை 5 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். அசல் ஆவணங்களைப் பெற்ற பின்னர், அதற்குண்டான ஒப்புகை சீட்டு அளிக்கப்பட்டு, தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்ட இருசக்கர வாகனம் விடுவிக்கப்பட்டு, மேற்படி அசல் ஆவணங்கள் சம்பந்தப்பட்ட நீதிமன்றத்திற்கு மேல் நடவடிக்கைக்காக அனுப்பப்படும். 

மேலும், விதி மீறுபவர், ஐ.எஸ்.ஐ. தரச்சான்று பெற்ற புதிய ஹெல்மெட்டையும், அதனை வாங்கியதற்கான ரசீதையும் சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் சமர்ப்பித்து, மோட்டார் வாகன சட்டம் 1988-ல் கூறப்பட்டுள்ள நடைமுறைகளின்படி தங்களது அசல் ஆவணங்களை திரும்ப பெற்றுக்கொள்ளலாம். 

ஹெல்மெட் அணியாததால் சாலை விபத்துகளின்போது, ஏற்படும் காயங்கள் மற்றும் இறப்புகளை தவிர்க்கும் பொதுநல நோக்கத்துடன் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. 

இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பின்னால் அமர்ந்து செல்பவர்கள் அனைவரும் தவறாமல் ஹெல்மெட் அணியுமாறு சென்னை காவல்துறை கேட்டுக்கொள்கிறது. ஹெல்மெட் அணிவதனால் தங்களது விலை மதிப்பற்ற உயிரினை பாதுகாத்துக்கொள்வதுடன், தங்களது அசல் சான்றிதழ்கள் அல்லது வாகனங்கள் தற்காலிகமாக பறிமுதல் செய்யப்படுவதை தவிர்க்கலாம். 

நாம் இருசக்கர வாகனம் ஓட்டும்போதும், பின்னால் அமர்ந்து செல்லும்போதும் தலைக்கவசம் அணிவோம் என்ற உறுதிமொழியை ஏற்றுக்கொள்வோம். சென்னை நகரினை வாகன ஓட்டிகளுக்கு பாதுகாப்பானதாக ஆக்கும் இந்த பணியில் பொதுமக்கள் தங்கள் ஆதரவினையும், ஒத்துழைப்பையும் அளிக்குமாறு சென்னை காவல்துறை கேட்டுக்கொள்கிறது. 

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

மறைந்துபோன பழைய மணியார்டர் முறை: மின்னணு மூலம் பணம் அனுப்பும் புதிய வசதி

சென்னை, ஜூன்.28-        

தபால் துறையில் தகவல் தொழில்நுட்ப வசதி கொண்டுவரப்பட்டதால், 135 ஆண்டுகளாக நடைமுறையில் இருந்த மணியார்டர் அனுப்பும் பழைய முறை மறைந்து போய்விட்டது. விரைவான சேவைக்காக இணையதள உதவியுடன் ‘மணியார்டர்’ அனுப்பும் வசதிகள் கொண்டுவரப்பட்டுள்ளது. இதில் ஏராளமான சேவைகள் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 
இதுகுறித்து சென்னை வட்ட தபால் துறை தலைவர் மெர்வின் அலெக்சாண்டர் கூறியதாவது:-        

மணியார்டர் முறை முடிவுக்கு வந்துவிட்டது என்று கூறுவது தவறு. பழைய மணியார்டர் முறை தற்போது நிறுத்தப்பட்டு, முற்றிலும் கணினி மயமாக்கப்பட்டு இணையதளம் மூலம் பணம் செலுத்தும் முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. இதில் ‘இன்ஸ்டன்ட்’ மணியார்டர் முறை, ‘மொபைல்’ பண பரிமாற்றம், சர்வதேச பண பரிமாற்றம் என்பது உள்பட பல்வேறு சேவைகள் உள்ளன.         

இன்ஸ்டன்ட் மணியார்டர் முறையில் ரூ.1,000 முதல் ரூ.50 ஆயிரம் வரை அனுப்பலாம். இதற்காக கமிஷன் தொகையாக ரூ.100 முதல் ரூ.120 வரை எடுக்கப்படும்.  வாடிக்கையாளர் பணம் செலுத்தியதும், அவருக்கு 16 இலக்க எண் வழங்கப்படும். அதை அவர் யாருக்கு பணம் அனுப்ப விரும்புகிறாரோ அவரிடம் தெரிவிக்க வேண்டும். அவர் தபால் நிலையத்துக்கு சென்று அந்த நம்பரை அங்கு கொடுக்கப்படும் விண்ணப்பத்தில் பதிவு செய்து அடையாள அட்டை நகலுடன் கொடுத்து பணத்தை பெற்றுக்கொள்ளலாம்.         

இதேபோல், மொபைல் பண பரிமாற்றத்தில் பணம் அனுப்ப வருபவர் பணத்தை பெறுபவரின் மொபைல் எண்ணை தர வேண்டும். பணத்தை செலுத்தியதும், ரகசிய எண் பணம் பெறுபவரின் மொபைலுக்கு சென்றுவிடும். பின்னர், அவர் அந்த ரகசிய எண்ணை தபால் நிலையத்துக்கு கொண்டுவந்து காண்பித்து, அடையாள அட்டை நகலை கொடுத்து பணத்தை பெற்றுக்கொள்ளலாம். இதில் அதிகபட்சமாக ரூ.10 ஆயிரம் வரை தான் அனுப்ப முடியும். கமிஷன் தொகையாக ரூ.45 முதல் ரூ.112 வரை எடுக்கப்படும். இந்த 2 சேவைகளிலும் பணம் அனுப்பிய ஒரு மணி நேரத்துக்குள்ளேயே உரியவருக்கு சென்றுவிடும்.        

மேலும் ‘மின்னணு வாணிபம்’ என்ற பார்சல் முறையும் அமல்படுத்தப்பட்டுள்ளது. அதில் தற்போது ஆன்-லைன் வர்த்தகம் செய்யும் நபர்களுக்கு அந்த நிறுவனம் எங்கள் மூலமாக பொருட்களை அதிகளவில் அனுப்பி வருகின்றனர். அதேபோல், ‘ஸ்பீடு போஸ்ட்’ முறையில் 2 தடவை டெலிவரி செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.        

‘மின்னணு வாணிபம்’ மூலம் ஏராளமான பார்சல்கள் அனுப்பப்பட்டு வருவதால் அதை கொண்டு செல்வதற்கு வசதியாக புதிய பைகள் வாங்க ரூ.2 லட்சம் ஒதுக்கப்பட்டு உள்ளது. இந்த பைகளில் 15 கிலோ வரை பார்சல்களை சுமந்து செல்லலாம்.         இவ்வாறு அவர் கூறினார்.        

சென்னை அண்ணா சாலை மற்றும் ஜார்ஜ் டவுனில் உள்ள தபால் நிலையங்களில் ‘போஸ்ட் ஷாப்’ ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதில் பேப்பர், பேனா, பென்சில், கத்தரிக்கோல், ‘ஸ்டேப்ளர் பின்’ போன்ற எழுதுபொருட்களும், ‘பென்டிரைவ்’, செல்போன் போன்ற சில எலக்ட்ரானிக்ஸ் பொருட்களும் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளன.        

காபி கப் மற்றும் நாணயங்கள், ரூபாய் நோட்டுகள், ஸ்டாம்புகள் ஆகியவற்றின் படங்கள் அடங்கிய ஆல்பங்களும் விற்பனைக்காக உள்ளன. ஆனால் இங்கு வைக்கப்பட்டிருக்கும், பொருட்களின் விலை வெளிமார்க்கெட் விலையைவிட அதிகமாக இருப்பதாக வாடிக்கையாளர்கள் தெரிவித்தனர்.        

இதுகுறித்து ராயப்பேட்டையை சேர்ந்த செண்பகவள்ளி கூறும்போது, ‘‘பென்டிரைவ் வெளி மார்க்கெட்டில் 4 ஜி.பி. ரூ.250 முதல் கிடைக்கிறது. ஆனால் இங்கு விலை ரூ.300. பெரும்பாலான பொருட்களின் நிலை இதுதான். எனவே வாடிக்கையாளர்கள் பார்ப்பதோடு சரி, யாரும் வாங்குவதில்லை. விலையை குறைக்க முன்வர வேண்டும்’’ என்றார்

பாஸ்போர்ட் அப்ளை செய்ய தேவையான ஆவணங்கள், கட்டணங்கள், விதிமுறைகள் என்ன

.ஒரு நாட்டைக் கடந்து மற்றொரு நாட்டிற்கு செல்கிற எவரும் கடவுச்சீட்டு (Passport) பெற வேண்டியது அவசியமாக உள்ளது. அதனால் பாஸ்போர்ட் நமக்கு தேவை என்றால் முதலில் நாம் அணுகுவது இடை தரகர்களை தான், ஆனால் தற்போது எந்த இடை தரகர்களும் இல்லாமலே நாமே நேரடியாக பாஸ்போர்ட் எடுக்க இந்திய அரசாங்கம் வழிவகை செய்துள்ளது. பாஸ்போர்ட் விண்ணப்பிக்கும் செயல்முறை இப்போது ஆன்லைனில் மாறிவிட்டது. புதியதாக நிறுவப்பட்டுள்ள பாஸ்போர்ட் சேவக் கேந்திரா”Passport Seva Kendras (PSK) என்கிற செயல்பாட்டின் மூலம், ஆன்லைனில் விண்ணப்பித்து…..
விண்ணப்பித்த 30 நாட்களுக்குள்ளேயே உங்களது பாஸ்போர்ட்டைப் பெற்று விடலாம். அந்த அதிகாரப்பூர்வ இணையதளம் இப்போது டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TATA Consultancy Services) மூலம் பராமரிக்கப்படுகிறது. நம்மில் பலருக்கு நேரடியாக பாஸ்போர்ட் எடுக்க விருப்பம் இருந்தாலும் அதற்கான வழிமுறைகள் தெரியாததால் தரகர்களிடம் சென்று எடுக்கிறோம், இனி அந்த அவசியம் தேவையில்லை. உங்கள் பாஸ்போர்ட்டை ஆன்லைனிலேயே நீங்கள் அப்ளை செய்யும் செயல்முறையையும், பாஸ்போர்ட் எடுக்க என்ன விதிமுறை மற்றும் வழிமுறை அனைத்தையும் தெரிந்து கொள்ள போகிறோம்.
1) பாஸ்போர்ட் எத்தனை வகைப்படும்?
ஆர்டினரி (Ordinary)
அப்பிசியல் (Official)
டிப்ளோமேட்டிக் (Diplomatic)
ஜம்போ (Jumbo) 
என நான்கு விதமான பாஸ்போர்ட்கள் வழங்கப்படுகின்றன. Ordinary பாஸ்போர்ட் சாதாரண குடிமக்களுக்கும், Official பாஸ்போர்ட் அரசாங்க ஊழியர்களுக்கும்,Diplomatic பாஸ்போர்ட் முதல்வர், பிரதமர் போன்ற உயர்மட்டத் தலைவர்களுக்கும், Jumbo பாஸ்போர்ட் வியாபார நிமித்தமாக அடிக்கடி வெளிநாடு செல்பவர்களுக்கும் வழங்கப்படுகின்றன.
2) பாஸ்போர்ட் பெறுவதில் எத்தனை முறைகள் உள்ளன?
இரண்டு முறைகள் உள்ளன. ஒன்று ஆர்டினரி (Ordinary), மற்றொன்று தட்கல்(Tatkal).
3) ஒரு முறை வாங்கும் பாஸ்போர்ட்டை எத்தனை வருடங்களுக்குப் பயன்படுத்தலாம்?
ஒரு முறை கொடுத்த பாஸ்போர்ட்டைப் பத்து வருடங்களுக்குப் பயன்படுத்தலாம்
. மீண்டும் அதை அதற்கான கட்டணத்தைக் கட்டிப் புதுப்பித்துக் கொள்ளலாம்
. ஒன்பது வருடங்கள் முடிந்தவுடன் எப்போது வேண்டுமானாலும் புதுப்பித்துக் கொள்ளலாம். மீண்டும் 10 வருடங்களுக்கு வழங்கப்படும். இப்படி புதுப்பிக்கும்போது, 15 நாட்களுக்குள் புதிய பாஸ்போர்ட் கிடைத்துவிடும்.
4) பாஸ்போர்ட் விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள்?
முக்கியமாக இரண்டு ஆவணங்கள் வேண்டும்.
1. இருப்பிடச் சான்றிதழ் (ஏதாவது இரண்டு)
ரேசன் கார்டு
பான் கார்டு
வாக்காளர் அடையாள அட்டை
வங்கி கணக்கு புத்தகம் (கடந்த ஒரு வருடமாக பணம் எடுக்கவும் போடவும் செய்து அதை பதிவு செய்திருக்கவேண்டும்)
தொலைபேசி ரசீது (உங்கள் பெயரில் இருக்க வேண்டும்)
எரிவாயு இணைப்பிற்கான ரசீது (உங்கள் பெயரில் இருக்க வேண்டும்)
2. பிறப்புச் சான்றிதழ். (ஏதாவது ஓன்று)
விண்ணப்பதாரர் 26.01.89 அன்றைக்கு பிறந்த அல்லது அதற்குப் பிறகு பிறந்தவராக இருந்தால் மட்டும் நகராட்சி ஆணையாளரால் அல்லது பிறப்பு & இறப்பு பதிவாளர் அலுவலகத்தில் கொடுக்கும் பிறப்பு/இறப்பு சான்றிதல் ஏற்கதக்கதாகும்.என்றால் அரசாங்கத்தால் தரும் பிறப்பு சான்றிதழ்
பள்ளியில் வழங்கப்படும் சான்றிதழ்
கெஜட்டடு (நோட்ரி பப்ளிக்) ஆபிசர் மூலம் வாங்கவேண்டும்
வேறு சான்றிதழ்கள்
• 10
வது மேல் படித்திருந்தால் ECNR முத்திரை இருக்காது, அதற்காக கடைசியாக எதை படித்து முடித்தீர்களோ அதனை கொண்டுபோகவும்.
உங்களது பெயரை (மதம் மாறும்போது/ எண்கணித முறையில்) மாற்றி இருந்தால் அதற்கு உண்டான சான்றிதழ்.
பழைய பாஸ்போர்ட் எடுக்கும் போது திருமணம் ஆகாமல் இருந்து, பழையது முடிந்து ரினிவல் பாஸ்போர்ட் அப்ளை செய்ய போனாலும் மேற்கன்ட அனைத்தையும் கொண்டு போகவேண்டும்,
மேலும் திருமண சான்றிதழ் இணைக்க வேண்டும் அல்லது மாவட்ட நீதிமன்றத்தில்/ நோட்ரி பப்ளிக் மூலமாக கணவனும் மனைவியும் சென்று வாங்கவேண்டும்.
பழைய பாஸ்போர்ட்டை கொண்டு செல்ல வேண்டும்.
எட்டாம் வகுப்புக்கு குறைவாகப் படித்திருந்தால் அல்லது படிக்கவே இல்லை என்றால் நோட்டரி பப்ளிக் மூலம் அபிடவிட் பெற்று விண் ணப்
பிக்கலாம்.26.01.1989-ம் ஆண்டுக்குப் பிறகு பிறந்திருந்தால் பிறப்பு சான்றிதழ் கட்டாயம் தேவை.
சிறுவர்-சிறுமியர்
சிறுவர்-சிறுமியர்க்கு (14 வயதுக்கு உட்பட்டவர்) கடவுச்சீட்டு எடுக்க விரும்பினால், பெற்றோர்கள் கடவுச்சீட்டு இருப்பவராக இருந்தால், காவல்துறை அறிக்கை தேவைப்படாது. பெற்றோர்க்கு கடவுச்சீட்டு இல்லாவிட்டால் அவர்தம் விண்ணப்பங்களும் காவல் துறைக்கு அனுப்பி அறிக்கை பெற்ற பின்னரே கடவுச்சீட்டு அளிப்பர்.
5) இணையதளம் மூலம் விண்ணப்பிபதால் என்ன பயன்கள்?
விண்ணப்பதாரர்கள் வட்டார பாஸ்போர்ட் அலுவலகத்திலுள்ள அதற்குரிய அலுவலரிடம் சமர்ப்பிக்கவேண்டியதற்கான திட்டமிட்ட தேதி, நேரம், தேவையான ஆவணங்கள் மற்றும் கட்டணம் ஆகியவைகளை பெறமுடியும்
நீண்ட வரிசையில் நிற்க வேண்டிய தேவையில்லை
6) பாஸ்போர்ட் பெறுவதற்க்கான கட்டணம்?
பாஸ்போர்ட் கட்டணம் தெரிந்து கொள்ள :http://passport.gov.in/cpv/FeeStructure.htm 
புதிய மற்றும் புதுபிக்க : 1500 ரூ (சாதரணமான முறை)
காணாமல் போனால் சேதமடைந்தால் – 1500 ரூ (பாஸ்போர்டு முடிந்து இருந்தால் – Expired)
காணாமல் போனால் சேதமடைந்தால் – 3000 ரூ (பாஸ்போர்டு Expireஆகவில்லை எனில்)
• 60
பக்கங்கள் வேண்டுமெனில் 500 ரூபாயைச் சேர்த்துக் கொள்ளவும்
தட்கல் முறையில் பெற 2000 ரூபாயைச் சேர்துக் கொள்ளவும்
7) தொலைந்து போனால்?
பாஸ்போர்ட் தொலைந்து போனால் காவல் துறையினரிடம் புகார் செய்து, எஃப்.ஐ.ஆர். பெற வேண்டும். அவர்கள் “Non Traceable” சான்றிதழ் தருவார்கள். அதை ஒப்படைத்தால் டூப்ளி கேட் பாஸ்போர்ட் வழங்கப்படும். இதற்கு ஆர்டினரிக்கு 2500 ரூபாய் மற்றும் தட்கலுக்கு 5000 ரூபாய் கட்டணம்.
தட்கல் திட்டம்:
பொதுவாக, பாஸ்போர்ட் விண்ணப்பங்களை மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தில் செலுத்தி 30 நாள்களில் பாஸ்போர்ட் வழங்கப்பட்டு விடுகின்றன. அவசரமாக வெளிநாடு செல்பவர்க்கு உதவியாக விரைந்து பாஸ்போர்ட் பெறவும் வகையிருக்கிறது. இதற்கு தட்கல் திட்டம்என்ற புதிய முறை அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இத்திட்டத்தில் சிறப்புரிமை அடிப்படையில் விரைந்து பாஸ்போர்ட் பெற முடியும்.
தட்கல் திட்டத்தின் கீழ் வழங்கும் அனைத்து பாஸ்போர்ட்களைச் சார்ந்த காவல்துறையின் சரிப்பார்க்கும் பணி பாஸ்போர்ட் வழங்கிய பின் இருக்கும் கீழே சொல்லப்பட்ட பட்டியலிலிருந்து மூன்று ஆவணங்களை சமர்ப்பிப்பதன் மூலம் தட்கால் திட்டத்தின் கீழ் பாஸ்போர்ட் பெறுவதற்கு விண்ணப்பதார்ர் பெறமுடியும். மூன்று ஆவணங்களில் ஒன்று புகைப்படைத்துடன் கூடிய அடையாள அட்டையாக இருக்க வேண்டும்
அவ்வாறு விரைந்து பாஸ்போர்ட் பெற விழைவோர் ரூ.2500/- கட்டணமாக செலுத்த வேண்டும். 3 ஆவணங்கள் கட்டாயமாக சமர்பிக்க வேண்டும்.
கீழ் வரும் ஆவணங்களின் பட்டியலிலிருந்து, பாஸ்போர்ட்-க்காக மூன்றை கண்டிப்பாக சமர்ப்பிக்க வேண்டும்
வாக்காளர் அடையாள அட்டை
இரயில்வே அடையாள அட்டைகள்
வருமான வரி அடையாள (Pan Card) அட்டைகள்
வங்கி அலுவலக புத்தகம்
எரிவாயு இணைப்பிற்கான ரசீது
ஓட்டுனர் உரிமம்
பிறப்பு சான்றிதழ்கள் (Birth Certificate)
தாழ்த்தப்பட்ட(எஸ்சி)/பழங்குடியினர் (எஸ்டி)/மிகவும் பிற்படுத்தப்பட்டோர் (ஓபிசி) சான்றிதழ்கள்
சொத்து ஆவணங்களான பட்டா, பதிவுசெய்யப்பட்ட ஒப்பந்தபத்திரங்கள் இன்னும் பிற குடும்ப அட்டைகள்
அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களால் வழங்கப்பட்ட மாணவர்களுக்கான புகைப்பட அடையாள அட்டைகள்
ஓய்வூதிய ஆவணங்களான முன்னாள் இராணுவ வீரரின் ஓய்வூதிய புத்தகம்/ ஓய்வூதியம் செலுத்துவதற்கான ஆணை, முன்னாள் இராணுவ வீரரின் விதவை/சார்ந்தவர்கள் சான்றிதழ்கள், முதியோர் ஓய்வூதிய ஆணை, விதவை ஓய்வூதிய ஆணை
மத்திய/மாநில அரசுகளால் வழங்கப்பட்ட பணிக்கான புகைப்பட அடையாள அட்டை, பொது நிறுவனங்கள், உள்ளூர் அமைப்புகள் அல்லது பொது வரையறை நிறுவனங்கள்
குறிப்பு: பதிவின் நீளம் கருதி அடுத்த பதிவில் பாஸ்போர்ட் ஆன்லைனில் அப்ளை செய்வது எப்படி, அப்பாய்ன்மெண்ட் வாங்குவது எப்படி, அப்ளை செய்த பாஸ்போர்ட் என்ன ஸ்டேட்டஸில் இருக்கு என்பதையும் பார்க்கலாம்.
இந்த பதிவு பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்....அப்படியே உங்களது ஓட்டுகளையும் பதிவிட்டு செல்லுங்கள் நண்பர்களே..
விசா பெற வழிகாட்டும் இனையத்தளங்கள்!........
வெளிநாட்டு பயணங்களைத் திட்டமிடும்போது எழக்கூடிய முக்கிய கேள்வி, விசா பெறுவது எப்படி? இந்த கேள்விக்கு பதில் தெரிய கொஞ்சம் இணைய ஆராய்ச்சி தேவை.
முதலில் பயணம் செல்ல உள்ள நாட்டிற்கு விசா தேவையா என தெரிந்துகொள்ள வேண்டும். அதன்பிறகு விசாவுக்கு விண்ணப்பிப்பது எப்படி என அறிய வேண்டும். ஒரு சில நாடுகளுக்கு விசா தேவையில்லை. ஒரு சில நாடுகளுக்கு அங்கே போய் இறங்கியவுடன் விசா வாங்கி கொள்ளலாம். பெரும்பாலான நாடுகளை பொருத்தவரை முன்கூட்டியே விசா பெற வேண்டும். நாடுகளுக்கு நாடு இது மாறக்கூடியது.
குறிப்பிட்ட சில நாடுகள் மட்டும் விசா இன்றி வரும் சலுகையை வழங்குகின்றன. இப்படி விசாவுக்கான நடைமுறைகள் பல இருக்கின்றன.
இந்தத் தகவல்களை எல்லாம் தேடி இணையத்தில் அங்கும் இங்கும் அல்லாடாமல், ஒரே இடத்தில் தெரிந்து கொள்ளும் வகையில் விசாமேப்பர்.காம் (http://www.visamapper.com/) வலைத்தளம் அமைந்துள்ளது.
எந்த எந்த நாடுகளுக்கு எல்லாம் விசா இல்லாமல் செல்லலாம், எந்த எந்த நாடுகளுக்கு எல்லாம் அங்கே போய் சாவகாசமாக விசா வாங்கலாம் போன்ற தகவலகளை இந்தத் தளம் தருகிறது. அதுவும் எப்படி.., அதிகம் தேடாமல் எடுத்த எடுப்பிலேயே தெரிந்து கொள்ளும் வகையில் அழகாக உலக வரைபடத்தின் மீது விசா விவரங்களை புரிய வைக்கிறது.
இந்த தளத்தில் தோன்றும் உலக வரைபடத்தில் நாடுகள் பல்வேறு வண்ணங்களில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. அந்த வண்ணங்களுக்கான அர்த்தம் அருகே உள்ள கட்டங்களில் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த வண்ணங்களை வைத்தே குறிப்பிட்ட ஒரு நாட்டின் விசா நடைமுறையை தெரிந்து கொள்ளலாம். உதாரணத்திற்கு பச்சை வண்ணத்தில் மின்னும் நாடுகளுக்கு அங்கே போய் விசா பெறலாம். மெரூன் நிறம் என்றால் முன்னதாகவே விசா பெற வேண்டும். வெளிர் பச்சை என்றால் விசாவே வேண்டாம். மஞ்சள் வண்ணம் என்றால் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். சிவப்பு என்றால் விசாவே கிடையாது.
ஆக, இந்த வரைபடத்தை பார்த்தே ஒருவர் பயணம் செய்ய உள்ள நாட்டிற்கான விசா முறை என்ன என அறிந்து கொள்ளலாம். இந்த வரைபடத்தில் மேலும் ஒரு சிறப்பம்சம், நீங்கள் தேடக்கூட வேண்டாம், அதுவாகவே விவரங்களை காட்டுகிறது என்பது தான். அதாவது இந்த தளத்தில் நுழைந்ததுமே, பயனாளி எந்த நாட்டிலிருந்து விவரங்களைத் தேடுகிறார் என புரிந்து கொண்டு அந்த நாட்டுக்கான விசா நடைமுறையை வரைபடமாக காட்டுகிறது.
உதாரணத்திற்கு இந்தியாவில் இருந்து பயன்படுத்தும் போது, இந்தியாவுக்கான இடம் குடியிருக்கும் நாடு என காட்டப்படுகிறது. இந்தியர்களுக்கு மற்ற நாடுகள் எப்படி விசா தருகின்றன என்பது வண்ணங்களாக காட்டப்படுகிறது. ஆக, பயனாளி வேறு நாட்டில் இருந்து அணுகும் போது அவரது நாட்டுக்கான விசா வரைபடம் தோன்றும். அற்புதம் தான் இல்லையா?
அதே நேரத்தில் வரைபடத்தின் மீது உள்ள, 'நான் இந்த நாட்டு குடிமகன்' என குறிக்கும் கட்டத்தில் ஒருவர் தனக்கான நாட்டை தேர்வு செய்து பார்த்தால் அந்த நாட்டுக்கான உலக விசா நடைமுறையை தெரிந்து கொள்ளலாம். இந்த பகுதியில் பல்வேறு நாடுகளை கிளிக் செய்து பார்த்தால் எந்த எந்த நாடுகள் எந்த எந்த நாடுகளுக்கு விசா சலுகை அளிக்கின்றன போன்ற தகவல்களையும் தெரிந்து கொள்ளலாம். உலக அரசியலை அறிவதற்கான சின்ன ஆய்வாகவும் இது அமையும். உலக அரசியல் யாதார்த்ததையும் இதன் மூலம் அறிந்து கொள்ளலாம்.
விசா பற்றி அறிய விரும்புகிறவர்களுக்கு இந்த தளம் நிச்சயம் உதவியாக இருக்கும். ஆனால் ஒன்று, இது ஒரு வழிகாட்டித் தளமே. இதில் உள்ள விவரங்களை அதிகாரபூர்வமானதாக கொள்வதற்கில்லை. தகவலை எளிதாக தெரிந்து கொண்டு அதனை அதிகாரபூர்வ தளங்களின் வாயிலாக உறுதி செய்து கொள்வது நல்லது. மேலும் இந்த தளத்திலேயே, விடுபட்டிருக்கும் நாட்டை சேர்கக அல்லது பிழையான தகவலை சரி செய்யும் வசதி கொடுக்கப்பட்டுள்ளது.
இதைப் போலவே விசாமேப்.நெட் (http://www.visamap.net/) எனும் வலைத்தளமும் விசா தொடர்பான தகவல்களை வரைபடம் மூலம் தருகிறது. விசா தகவல்களோடு தூதரக அலுலகங்கள் எங்கே உள்ளன போன்ற தகவல்களையும் அளிக்கிறது. விசா நோக்கில் பிரபலமான நாடுகளின் பட்டியலும் இருக்கிறது. ஐபோனுக்கான செயலி வடிவமும் இருக்கிறது. ஆனால் இந்த தளமும் வழிகாட்டி நோக்கிலானது தான். இதில் உள்ள தகவல்களை உறுதி செய்து கொள்ள வேண்டும்.
வெளிநாட்டுக்கு போக ஆசைப்படுபவர்களுக்கும், போக இருப்பவர்களுக்கும் இந்தத் தளங்கள் பயனுள்ளவைகளாக இருக்கின்றன