Thursday, 2 June 2016

தமிழக சட்டசபையில் சபாநாயகராக ப.தனபால் இன்று தேர்வு பொள்ளாச்சி ஜெயராமன் துணை சபாநாயகர்

சென்னை,
தமிழக சட்டசபையில் சபாநாயகராக ப.தனபால், துணை சபாநாயகராக பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோர் இன்று தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.
அறிவிப்பு
தமிழக சட்டசபையில் மே 25–ந் தேதி தற்காலிக சபாநாயகர் செம்மலை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். ஜூன் 3–ந் தேதியன்று (இன்று) காலை 10 மணிக்கு அவை கூடுகிறது. அன்று சபாநாயகர், துணை சபாநாயகர் தேர்தல் நடைபெறுகிறது.
தேர்தலில் போட்டியிட விரும்புவோர், ஜூன் 2–ந் தேதி பகல் 12 மணிக்குள் சட்டசபை செயலாளரிடம் வேட்புமனு சமர்ப்பிக்க வேண்டும் என்று கூறினார்.
வேட்புமனு தாக்கல்
சபாநாயகர் பதவிக்கு ப.தனபாலையும், துணை சபாநாயகர் பதவிக்கு பொள்ளாச்சி ஜெயராமனையும் வேட்பாளர்களாக ஆளும் கட்சியான அ.தி.மு.க. அறிவித்தது. இவர்கள் கடந்த ஆட்சி காலத்திலும் முறையே அதே பதவியை வகித்தவர்கள்.
இந்தநிலையில், ப.தனபாலும், பொள்ளாச்சி ஜெயராமனும் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தனர். இதற்காக சட்டசபை செயலாளர் அறைக்கு நேற்று காலை 10.30 மணிக்கு வந்தனர். முதலில் ப.தனபாலும், பின்னர் பொள்ளாச்சி ஜெயராமனும் வேட்புமனு தாக்கல் செய்தனர்.
அதிகாரபூர்வமாக...
அவர்களுடன் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், எடப்பாடி பழனிச்சாமி, செல்லூர் கே.ராஜூ, தங்கமணி, வேலுமணி ஆகியோர் வந்திருந்தனர். வேட்புமனு தாக்கல் செய்ததும் அவர்களுக்கு அமைச்சர்கள் கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்தனர்.
பகல் 12 மணி வரை வேறு யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. எனவே இன்று காலை 10 மணிக்கு சட்டசபை கூடியதும், ப.தனபாலை சபாநாயகராக தற்காலிக சபாநாயகர் செம்மலை அதிகாரபூர்வமாக அறிவிப்பார். அதைத்தொடர்ந்து பொள்ளாச்சி ஜெயராமனை துணை சபாநாயகராக சபாநாயகர் ப.தனபால் அறிவிப்பார்.
வாழ்த்து
சபாநாயகரை அவை முன்னவரும், எதிர்க்கட்சித் தலைவரும் சேர்ந்து சபாநாயகர் இருக்கையில் அமர வைப்பார்கள். அதைத்தொடர்ந்து முதல்–அமைச்சர் ஜெயலலிதா, சட்டமன்ற தி.மு.க. கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், மற்றும் சட்டமன்ற கட்சித் தலைவர்கள் வாழ்த்துவார்கள்.
வாழ்த்துரைக்கு சபாநாயகர் ஏற்புரை ஆற்றுவார். அதோடு இன்றைய சட்டசபை நிகழ்ச்சிகள் முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தென்னை விவசாயிகளுக்கு சலுகைகள் கொப்பரைத் தேங்காய் நேரடி கொள்முதல் மையங்கள் தொடக்கம் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றுவதாக ஜெயலலிதா பெருமிதம்

சென்னை,
விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்வதற்காக 20 மாவட்டங்களில் நேரடி கொள்முதல் மையங்கள் தொடக்கப்படும் என்று முதல்–அமைச்சர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
இதுகுறித்து முதல்–அமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:–
வாக்குறுதிக்கான ஆலோசனைதமிழ்நாட்டில் சுமார் 4 லட்சத்து 28 ஆயிரம் ஹெக்டேர் பரப்பரளவில் தென்னை பயிரிடப்பட்டு வருகிறது. அகில இந்திய அளவில் தேங்காய் உற்பத்தியில் தமிழ்நாடு முதலிடத்திலும், சாகுபடி பரப்பில் மூன்றாமிடத்திலும் உள்ளது.
தற்போது சந்தையில் கொப்பரை தேங்காயின் விலை கிலோ ஒன்றுக்கு 50 ரூபாய்க்கும் குறைவாக உள்ளதால், கொப்பரைத் தேங்காயை அரசு கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும் என தென்னை விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில், தேர்தல் அறிக்கையில் ‘கொப்பரை விலை குறையும் போதெல்லாம் விவசாயிகளிடமிருந்து கொப்பரையை வாங்க நடவடிக்கை எடுக்கப்படும்’ என்ற வாக்குறுதியை நான் அளித்திருந்தேன். தற்போது கொப்பரைத் தேங்காய் விலை குறைந்துள்ளதால், இந்த வாக்குறுதியை நிறைவேற்றுவதற்கு தேவையான நடவடிக்கையை எடுப்பதற்கான ஆய்வுக் கூட்டம் 2–ந்தேதி (நேற்று) எனது தலைமையில் தலைமைச்செயலகத்தில் நடைபெற்றது.
அதிகாரிகள்இந்த கூட்டத்தில் அமைச்சர்கள் செல்லூர் கே.ராஜு, ஆர்.காமராஜ், தலைமைச் செயலாளர் கு.ஞானதேசிகன், அரசு ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன், நிதித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் க.சண்முகம், கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை முதன்மைச் செயலாளர் ஷிவ் தாஸ் மீனா, வேளாண்மை உற்பத்தி ஆணையர் மற்றும் வேளாண்மைத் துறை செயலாளர் ச.விஜயகுமார், கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் ஜெயஸ்ரீ முரளிதரன் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
நேரடி கொள்முதல் மையம்தென்னை விவசாயிகளின் நலன் காக்கும் வகையில் கொப்பரைத் தேங்காயை விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்ய தேவையான நடவடிக்கைகளை எடுக்கும்படி நான் உத்தரவிட்டுள்ளேன்.
* இதன்படி, கொப்பரைத் தேங்காய் அதிக அளவில் உற்பத்தி செய்யப்படும், கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, திண்டுக்கல், தேனி, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, தஞ்சாவூர், சிவகங்கை, ராமநாதபுரம், வேலூர், மதுரை, நாகப்பட்டினம், நாமக்கல், புதுக்கோட்டை, திருவாரூர், திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கூட்டுறவுத் துறை நிறுவனங்களான தமிழ்நாடு கூட்டுறவு விற்பனை இணையம் (டான்பெட்), வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கங்கள் (ஏ.பி.சி.எம்.எஸ்.) மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் (பி.ஏ.சி.சி.எஸ்.) மூலமாக நேரடி கொள்முதல் மையங்கள் தொடக்கப்பட்டு, கொப்பரைத் தேங்காய் கொள்முதல் செய்யப்படும்.
ஆதார விலை* அரவைக் கொப்பரை கிலோ ஒன்றுக்கு 59 ரூபாய் 50 காசு, பந்து கொப்பரை கிலோ ஒன்றுக்கு 62 ரூபாய் 40 காசு என்ற ஆதார விலையின் அடிப்படையில் விவசாயிகளிடமிருந்து கொப்பரைத் தேங்காய் நேரடியாக கொள்முதல் செய்யப்படும்.
* இந்த கொள்முதலுக்குத் தேவையான 10 கோடி ரூபாய் நடைமுறை மூலதனத்திற்கு ஏற்பாடுகள் செய்யப்படும்.
* கொள்முதல் செய்யப்படும் கொப்பரைத் தேங்காய்க்கான தொகை விவசாயிகளின் விருப்பத்திற்கேற்ப அவர்களது வங்கிக்கணக்கில் மின்னணு நிதி பரிமாற்றம் (இ.சி.எஸ்.) மூலமாகவோ, கோடிட்ட காசோலை மூலமாகவோ உடனடியாக வழங்கப்படும்.
சந்தை கட்டணம் ரத்து* இந்த நேரடி கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்படும் கொப்பரைத் தேங்காய்க்கு விவசாயிகளால் செலுத்தப்படவேண்டிய ஒரு சதவீத சந்தைக்கட்டணம் ரத்து செய்யப்படும்.
* தேசிய வேளாண்மை கூட்டுறவு விற்பனை இணையம் கேட்டுக்கொண்டபடி, கொள்முதல் செய்யப்பட்ட கொப்பரைத் தேங்காயை விற்பனை செய்யும்போது மாநில அரசுக்கு செலுத்தப்படவேண்டிய 5 சதவீத மதிப்பு கூட்டு வரி முற்றிலுமாக ரத்து செய்யப்படும்.
* இந்த நேரடி கொள்முதல் நிலையங்கள் 15–ந்தேதி முதல் செயல்படும். கொப்பரைத் தேங்காய்கள் அடுத்த ஆறு மாதங்களுக்கு கொள்முதல் செய்யப்படும்.
எனது தலைமையிலான அரசின் இந்த நடவடிக்கையின் காரணமாக தென்னை விவசாயிகள் பயன்பெறுவர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

கருத்துகள்

3 ஆயிரம் பள்ளிவாசல்கள் பயன் அடைய ரமலான் மாதத்தில் நோன்பு கஞ்சி தயாரிக்க 4,600 டன் பச்சரிசி ஜெயலலிதா உத்தரவு

சென்னை,
ரமலான் மாதத்தில் பள்ளிவாசல்களில் நோன்பு கஞ்சி தயாரிக்க 4 ஆயிரத்து 600 டன் பச்சரிசி வழங்க முதல்–அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இதன்மூலம், 3 ஆயிரம் பள்ளிவாசல்கள் பயன் அடையும்.
இதுகுறித்து முதல்–அமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
புனித ரமலான்சிறுபான்மையின மக்கள் நலனில் மிகுந்த அக்கறை கொண்டுள்ள எனது தலைமையிலான தமிழ்நாடு அரசு, அவர்களின் நலன் கருதி பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து வருகிறது.
அந்த வகையில், நோன்பு நோற்கும் இஸ்லாமிய மக்களுக்கு புனித ரமலான் மாதத்தில் நோன்பு கஞ்சி தயாரிக்க பள்ளிவாசல்களுக்கு அரிசி வழங்குவதற்கு தேவையான மொத்த அனுமதியை வழங்க எனது முந்தைய ஆட்சி காலத்தில் அதாவது 9.11.2001 அன்று நான் ஆணையிட்டிருந்தேன்.
அதன்படி, பள்ளிவாசல்களுக்கு தேவையான அரிசிக்கான மொத்த அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. இது இஸ்லாமிய பெருமக்களிடையே ஏகோபித்த வரவேற்பை பெற்றுள்ளது.
நோன்பு கஞ்சிகடந்த ஆண்டுகளைப் போலவே, இந்த ஆண்டும் ரமலான் மாதத்தில் நோன்பு கஞ்சி தயாரிக்க பள்ளிவாசல்களுக்கு அரிசியை வழங்கவேண்டும் என்று இஸ்லாமிய மக்களிடமிருந்து எனக்கு கோரிக்கைகள் வந்துள்ளன.
அவர்களின் கோரிக்கையினை ஏற்று, இந்த ஆண்டும் புனித ரமலான் மாதத்தில் நோன்பு கஞ்சி தயாரிக்க, பள்ளிவாசல்கள் சிரமமின்றி அரிசி பெறுவதற்கு ஏதுவாக, மொத்த அனுமதி வழங்க நான் ஆணையிட்டுள்ளேன்.
4,600 டன் பச்சரிசிபள்ளிவாசல்களுக்குத் தேவையான அரிசிக்கான மொத்த அனுமதியை வழங்க மாவட்ட கலெக்டர்களுக்கு தக்க அறிவுரைகள் வழங்கப்பட உள்ளன. இதன்படி, 4,600 மெட்ரிக் டன் பச்சரிசி மொத்த அனுமதி மூலம் பள்ளிவாசல்களுக்கு வழங்கப்படும்.
இதனால், அரசுக்கு ரூ.2 கோடியே 14 லட்சம் செலவாகும். இதன்மூலம், மாநிலம் முழுவதும் சுமார் 3 ஆயிரம் பள்ளிவாசல்கள் பயன் அடையும் என்பதை நான் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தமிழ் உள்ளிட்ட 22 மொழிகளையும் ஆட்சி மொழிகளாக்க வேண்டும் மத்திய அரசுக்கு டாக்டர் ராமதாஸ் கோரிக்கை

சென்னை,
தமிழ் உள்ளிட்ட 22 மொழிகளையும் ஆட்சி மொழிகளாக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு டாக்டர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து, பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
மாநில மொழி இணையதளங்கள்பிரதமர் நரேந்திர மோடி அலுவலகத்தின் இணையதளம் தமிழ் மொழியில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதுவரை ஆங்கிலம், இந்தி ஆகிய இருமொழிகளில் மட்டும் செயல்பட்டு வந்த பிரதமர் அலுவலக இணையதளம் இப்போது தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், குஜராத்தி, வங்காளம், மராட்டியம் ஆகிய மொழிகளிலும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த முயற்சி வரவேற்கத்தக்கதாகும்.
இந்தி தவிர்த்த பிற மொழிகளின் முக்கியத்துவத்தை மத்திய அரசு இப்போதாவது உணர்ந்து கொண்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
பா.ம.க. வலியுறுத்தல்மத்திய அரசின் ஆணைகளும், அறிவிப்புகளும் மக்களை அவர்களின் மொழியில் சென்றடையவும், மக்கள் தங்களின் கருத்துக்களையும், கோரிக்கைகளையும் அரசுக்கு அவர்களின் தாய்மொழியில் தெரிவிக்கவும் வசதியாக 8–வது அட்டவணையில் உள்ள தமிழ் உள்ளிட்ட 22 மொழிகளையும் ஆட்சிமொழியாக்க வேண்டும் என்று பா.ம.க. தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
அறிவியலும், தகவல் தொழில்நுட்பமும் வளர்ச்சியடையாத காலத்தில் ஒரு மொழியை அலுவல் மொழியாக அறிவிப்பதில் ஏராளமான சிக்கல்கள் இருந்தன. ஆனால், தொலைத்தொடர்பும், தகவல் தொழில்நுட்பமும் வளர்ச்சியடைந்துவிட்ட நிலையில் இப்போது எந்த சிக்கலும் இல்லை.
ஆட்சி மொழியாக்க வேண்டும்8–வது அட்டவணையில் உள்ள அனைத்து மொழிகளையும் ஆட்சி மொழிகளாக்க இப்போது தேவைப்படுவது மத்திய அரசின் அனுமதி ஒன்று மட்டுமே. மாநில மொழி பேசும் மக்களை அவர்களின் தாய்மொழி மூலமே அணுக முடியும் என்ற அளவுக்கு முதிர்ச்சியான கருத்தை பிரதமர் தெரிவித்துள்ள நிலையில், அதற்கு செயல் வடிவம் தரும் வகையில் தமிழை ஆட்சி மொழியாக்குவதில் எந்த தடையும் இருக்க முடியாது.
அதுமட்டுமின்றி, 2014 மக்களவைத் தேர்தலுக்கான பாரதீய ஜனதா கட்சியின் தேர்தல் அறிக்கையில், ‘‘இலக்கியம், வரலாறு, கலை மற்றும் அறிவியல் சாதனைகளின் களஞ்சியமாக திகழும் அனைத்து இந்திய மொழிகளையும் மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்’’ என கூறப்பட்டிருக்கிறது. அந்த வாக்குறுதியையும் நிறைவேற்றும் வகையில் தமிழ் உள்ளிட்ட 8–வது அட்டவணையில் உள்ள 22 மொழிகளையும் ஆட்சி மொழிகளாக்க மத்திய அரசு முன்வர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

கருணாநிதியின் 93–வது பிறந்த நாள்: ‘மக்கள் நலத் திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடுங்கள்’ தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

சென்னை,
தி.மு.க. தலைவர் கருணாநிதியின் 93–வது பிறந்த நாளை மக்கள் நலத் திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடுங்கள் என்று தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுகுறித்து, தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
93–வது பிறந்த நாள்
தமிழினத் தலைவர் கருணாநிதியின் 93–வது பிறந்த நாள் தி.மு.க. வரலாற்றில் மிக முக்கியமான நாள். ஒவ்வொரு கட்சி தொண்டர்களின் உணர்வோடு பின்னிப் பிணைந்த நாள். கட்சி தொண்டர்கள் அனைவரும் தங்களின் இல்ல விழாவாக கொண்டாடி மகிழும் நாள் என்பதை நானறிவேன்.
தமிழக மக்களின் நலனுக்காக அயராது பாடுபட்டுக் கொண்டிருக்கும் தலைவரின் அரிதான மக்கள் சேவையை நினைவு கூர்ந்து நாம் அனைவரும் அவரது பிறந்த நாளை இதயப்பூர்வமாக கொண்டாடி வருகிறோம்.
இளைஞர் அணியின் கொண்டாட்டம்
ஆகவே நமக்கு எல்லாம் ஒப்பற்ற தலைவராக இருக்கும் தலைவர் கருணாநிதியின் 93–வது பிறந்த நாளை முன்னிட்டு இளைஞர் அணி தொண்டர்களும், நிர்வாகிகளும் ஆங்காங்கே மரக்கன்றுகள் நட்டும், ரத்த தானம் செய்தும், பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கியும் தலைவரின் பிறந்த நாளை கொண்டாடும் படி அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்.
தமிழினத்திற்காக, அடித்தட்டு மக்களுக்காக சீர்மிகு சேவையாற்றிக் கொண்டிருக்கும் தலைவர் கருணாநிதி மேலும் பல்லாண்டு வாழ்ந்து தமிழர் தலைநிமிர்ந்து வாழ தன் பணியைத் தொடரும் வகையில் இளைஞர் அணியின் கொண்டாட்டம் இருக்க வேண்டும் என்று இளைஞர் அணி நிர்வாகிகள் மற்றும் தோழர்கள் அனைவரையும் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

உள்ளாட்சி தேர்தலில் பா.ஜ.க. முத்திரையை பதிக்கும்’ பிறந்தநாள் விழாவில் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி

சென்னை,
‘உள்ளாட்சி தேர்தலில் பா.ஜ.க. தனது முத்திரையை பதிக்கும்’ என்று பிறந்தநாள் விழாவில் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.
பிறந்தநாள் விழா
தமிழக பா.ஜ.க. தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜனின் பிறந்தநாள் விழா, தியாகராயநகரில் உள்ள பா.ஜ.க, மாநில அலுவலகமான கமலாலயத்தில் நேற்று நடந்தது.
அவருக்கு, கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பொன்னாடை, சந்தனமாலை, ஆளுயர மலர் மாலை மற்றும் மலர் கிரீடம் ஆகியவற்றை அணிவித்து வாழ்த்து கூறினார்கள். தாமரை வடிவிலான ‘கேக்’ வெட்டி பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
பின்னர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
மத்திய மந்திரிகள் வருகை
பா.ஜ.க.வின் அகில பாரத தலைவர் அமித்ஷா தலைமையில் அலகபாத்தில் தேசிய செயற்குழு கூட்டம் வரும் 12 மற்றும் 13–ந்தேதிகளில் நடக்கிறது. பிரதமர் நரேந்திரமோடி உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொள்கின்றனர். இதில் பல்வேறு மாநில தேர்தல் முடிவுகள் குறித்து ஆலோசிக்கப்படுகிறது.
மத்திய மந்திரிகள் மனோகர் பாரிக்கர், ஸ்மிரிதி இரானியை தொடர்ந்து, நிர்மலா சீதாராமன், ரவிசங்கர்பிரசாத், உமாபாரதி, கஜபதி மற்றும் ரூடி ஆகியோர் தமிழகத்தில் வேறு வேறு நகரங்களுக்கு வர உள்ளனர்.
காங்கிரஸ்காரர்கள் சதி
தமிழக பொதுவினியோக திட்டத்திற்கு உணவு பொருட்கள் வழங்கல், தங்கம் வாங்குவதில் சலுகை, துறைமுக மேம்பாடு, புதிய சாலைகள் அமைக்கும் பணி உட்பட அனைத்து துறை வாரியாக பல திட்டங்களை மோடி அரசு வழங்கி வருகிறது. இதற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். ஆனால் கொண்டாட்டங்கள் தேவையா? என்று காங்கிரஸ் தலைவர் சோனியா கேட்கிறார். தமிழகத்தில் இளங்கோவன், பா.ஜ.க. எது செய்தாலும் குறை கூறுகிறார். ஆனால் அவருடைய கட்சியில் உள்ள குறைகளை நீக்கிவிட்டு அடுத்தவர்களை பற்றி பேச வேண்டும்.
தமிழகத்தில் பால்விலை உயர்வு, கல்வி கட்டணம் உயர்வு போன்றவற்றை கட்டுப்படுத்த வேண்டும். தவறும் பட்சத்தில் பா.ஜ.க. போராட்டத்தில் ஈடுபடும்.
தேர்தல் மொழி
கட்சியில் சேர மிஸ்டு கால் அளித்த 50 லட்சம் பேர்களில் 15 லட்சம் பேரை நேரில் சந்தித்து கட்சியில் இணைத்து உள்ளோம். தமிழகத்தில் 3 தொகுதிகளில் இடைத்தேர்தல் தொடர்பாக நீதிமன்றம் கூறிய கருத்து வரவேற்கத்தக்கது. தமிழக மக்களுக்கு நல்ல பல சேவைகளை தொடர்ந்து செய்வதற்கும் பா.ஜ.க.வினர் தேர்தல் அரசியல் விஞ்ஞானம் கற்றுக் கொள்ள வேண்டும்.
நல்லவர்கள், வல்லவர்களாக வலம் வந்தால் மட்டும் போதாது, தேர்தல் மொழியையும் கற்றுக் கொள்ள வேண்டும். தேர்தல் யுக்தியை தெரிந்து கொள்ள வேண்டும். வரவிருக்கும் உள்ளாட்சி தேர்தலுக்கான பணிகளை தொடங்கி உள்ளோம். இதில் பா.ஜ.க, முத்திரை பதிக்கும். தமிழகத்தில் பா.ஜ.க.வுக்கு உரிய அங்கீகாரத்தை பெற்றுத்தருவதுடன், பலம் பொருந்திய கட்சியாகவும் வருவதற்கு இந்த பிறந்தநாளில் உறுதி எடுத்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.

‘நான் தோற்கவில்லை, இன்னும் போராடுவேன்’’ வைகோ பேச்சு

‘‘நான் தோற்கவில்லை, இன்னும் போராடுவேன்’’ என்று ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கூறினார்.

மீட்க வேண்டும்

நாகர்கோவிலில் நேற்று காலை நடந்த ம.தி.மு.க. பிரமுகர் இல்ல திருமண விழாவில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கலந்து கொண்டார். மணமக்களை வாழ்த்தி பேசிய அவர் கூறியதாவது:-

தமிழக தேர்தலை இனி பணம் தான் தீர்மானிக்குமா? இதற்கு மாற்றே இல்லையா? இதுதான் நிரந்தரமா? இனி பணம் படைத்தவர்கள் மட்டுமே தேர்தலில் போட்டியிட வேண்டுமா?. இந்த நிலையில் இருந்து மீட்க வேண்டிய பொறுப்பு நமக்கு உண்டு. நான் மீட்பர் அல்ல, ஆனால் மீட்பர்கள் வழியிலேயே செல்கிற சாதாரண போர் வீரன்.

தேர்தலில் மக்கள் மனநிலைக்கு ஏற்ப வாக்குகள் வழங்குகிறார்கள். ஜனநாயக தீர்ப்பை தலைவணங்கி நான் ஏற்றுக்கொள்கிறேன். ஆனால் தமிழகம் முழுவதிலும் பணம்தான் தீர்மானித்தது. இந்தநிலை நீடிக்க முடியாது. நீடித்ததாக இயற்கை நியதி கிடையாது.

எந்த அநீதிக்கும் ஒரு எல்லை உண்டு. ஒரு முடிவு வரும். அந்த அநீதியை எதிர்த்து ஒரே நாளில் வென்றுவிட முடியாது. எந்த முயற்சியும் ஒரு நாளில் வெற்றி பெற்று விடாது. தோற்றுவிட்டோம் என்று தளர்ச்சி அடைந்தவனுக்கு லட்சியத்தில் நம்பிக்கை இல்லை என்று அர்த்தம். நான் தோற்கவில்லை, இன்னும் போராடுவேன். நாங்கள் ஒரு களத்தை இழந்திருக்கிறோம். யுத்தத்தை இழக்கவில்லை. 

கட்சி அங்கீகாரம்

கட்சிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்ய தேர்தல் ஆணையத்தால் முடியும். இதுவரை இந்தியாவில் தேர்தல் ஆணையம் அதைச் செய்யவில்லை. இப்போது என்ன செய்ய வேண்டும்?. மத்திய அரசு சட்டம் நிறைவேற்ற வேண்டும்.

வாக்காளர்களுக்கு பணம் வழங்குகிற வேட்பாளர் என்று தேர்தல் ஆணையத்திடம் நிரூபணம் செய்தால், அந்த வேட்பாளரை தகுதி நீக்கம் செய்யும் அதிகாரத்தை வழங்குகிற சட்டத்தை கொண்டு வாருங்கள். அங்கீகாரத்தை ரத்து செய்கிற அதிகாரம் இருந்தாலும் இன்னும் தெளிவான விதிமுறைகளை வகுத்து கட்சிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்வதற்கு இன்னும் அதிகமான காரணங்களை காட்டி சட்டத்தை நிறைவேற்றுங்கள்.

இவ்வாறு வைகோ பேசினார்.

மறியல்

முன்னதாக வைகோவிடம் பேட்டி காண்பதற்காக பத்திரிகையாளர்கள் மற்றும் தொலைக்காட்சி செய்தியாளர்கள் திருமணம் மண்டபம் முன் காத்து நின்றனர். அப்போது சில வீடியோகிராபர்கள் வைகோவை வரவேற்று வைக்கப்பட்டிருந்த பேனர்களை படம் பிடித்தனர். இதைப்பார்த்த தக்கலை ஒன்றிய நிர்வாகியும், மற்றொருவரும் சேர்ந்து செய்தியாளர்களை தகாத வார்த்தைகளால் பேசினர். 

இதைத்தொடர்ந்து செய்தியாளர்கள் திருமண மண்டபம் முன் உள்ள அவ்வை சண்முகம் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நேரத்தில் அந்த திருமண மண்டபத்துக்கு வைகோ காரில் வந்தார். 

மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சம்பவம் பற்றி கேட்டறிந்தார். பின்னர் கட்சி நிர்வாகிகளை மன்னிப்பு கேட்கச் சொன்னார். வைகோவும் இந்த சம்பவத்துக்காக பத்திரிகையாளர்களிடம் வருத்தம் தெரிவித்தார். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. 

ஆர்.கே.நகர் தொகுதி வாக்காளர்களுக்கு ஜெயலலிதா 6–ந் தேதி நன்றி தெரிவிக்கிறார் வேனில் வீதி, வீதியாக பயணம்

சென்னை,
ஆர்.கே.நகர் தொகுதி வாக்காளர்களுக்கு முதல்–அமைச்சர் ஜெயலலிதா 6–ந் தேதி (திங்கட்கிழமை) நன்றி தெரிவிக்கிறார்.
ஜெயலலிதா வெற்றிநடைபெற்று முடிந்த சட்டசபை தேர்தலில் சென்னை ஆர்.கே. நகர் தொகுதியில் மீண்டும் போட்டியிட்டு முதல்–அமைச்சர் ஜெயலலிதா வெற்றி பெற்றார். ஓட்டு போட்ட வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க, வரும் 6–ந் தேதி (திங்கட்கிழமை) அவர் ஆர்.கே. நகர் தொகுதியில் வீதி, வீதியாக வேனில் பயணம் மேற்கொள்கிறார்.
இது தொடர்பாக, அ.தி.மு.க. தலைமைக் கழகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:–
வாக்காளர்களுக்கு நன்றிஅ.தி.மு.க. பொதுச் செயலாளரும், முதல்–அமைச்சருமான ஜெயலலிதா, 16–5–2016 அன்று நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொதுத் தேர்தலில், டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் (ஆர்.கே. நகர்) சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு மகத்தான வெற்றி பெற்றார்.
அதனையொட்டி, டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் சட்டமன்றத் தொகுதி வாக்காளப் பெருமக்களுக்கு 6–6–2016 (திங்கட்கிழமை) அன்று நன்றி தெரிவிக்க உள்ளார்.
முதல்–அமைச்சர் ஜெயலலிதா நன்றி தெரிவிக்க செல்லும் இடங்கள் விவரம் வருமாறு:–
வைத்தியநாதன் பாலம்எம்.ஜி.ஆர். சிலை – பெட்ரோல் பங்க், காசிமேடு, சூரிய நாராயண செட்டி தெரு – ஜீவரத்தினம் சாலை சந்திப்பு, சூரியநாராயண செட்டி தெரு, வீரராகவன் ரோடு, திருவொற்றியூர் நெடுஞ்சாலை, கிராஸ் ரோடு, அருணாச்சலேஸ்வரர் கோவில் தெரு, காமராஜர் காலனி தெரு, சேனியம்மன் கோயில் தெரு, மார்க்கெட் தெரு – வ.உ.சி. சாலை சந்திப்பு, இளைய முதலி தெரு, வைத்தியநாதன் பாலம், வைத்தியநாதன் பாலம் – எண்ணூர் நெடுஞ்சாலை சந்திப்பு.
எண்ணூர் நெடுஞ்சாலை, எண்ணூர் நெடுஞ்சாலை – ஜெ.ஜெ. நகர் சந்திப்பு, எண்ணூர் நெடுஞ்சாலை, வைத்தியநாதன் பாலம், பழைய வைத்தியநாதன் சாலை, புதிய வைத்தியநாதன் சாலை, திருவொற்றியூர் நெடுஞ்சாலை சந்திப்பு, மகாராணி தியேட்டர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது
சென்னை,

காணாமல் போன பட அதிபர் மதன் உயிரோடு இருக்கிறாரா? மர்மம் நீடிக்கிறது, பண மோசடி புகார்களும் குவிகின்றன

சென்னை,
காணாமல் போன பட அதிபர் மதன் உயிரோடு இருக்கிறாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது. அவரது கதி என்ன ஆனது என்பதில் தொடர்ந்து மர்மம் நீடிக்கிறது. அவர் மீது நேற்று ஏராளமான மோசடி புகார்கள் கொடுக்கப்பட்டன.
மர்மம் நீடிப்புசினிமா பட அதிபர் மதன் தற்கொலை செய்யப்போவதாக கடிதம் எழுதி வைத்துவிட்டு திடீரென்று தலைமறைவாகி விட்டார். அவர் காணாமல் போன சம்பவம் தமிழ் சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதனை கண்டுபிடிக்கும்படி அவரது மனைவிகள் சிந்து, சுபலதா ஆகியோர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளனர்.
மதன் எடுத்துச்சென்ற பி.எம்.டபிள்யூ கார் சென்னை விமான நிலையத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவர் விமானத்தில் டெல்லி சென்றுள்ளார். டெல்லியில் நட்சத்திர ஓட்டலில் அறை எடுத்தும் தங்கியுள்ளார். டெல்லியில் இருந்து அவர் எங்கு சென்றார்? என்பதுதான் தொடர்ந்து மர்மமாக உள்ளது. அவர் உயிரோடு இருக்கிறாரா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
மோசடி புகார்கள்மதன் மீது ஏற்கனவே பிரபல கல்வி நிறுவனம் சார்பில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. மணப்பாறையை சேர்ந்த வெங்கடேசன் என்பவர் மதன் மீது ஒரு புகார் கொடுத்துள்ளார். மருத்துவ கல்லூரியில் சீட் வாங்கித்தருவதாக ரூ.52 லட்சத்தை மதன் மோசடி செய்துவிட்டதாக வெங்கடேசன் புகாரில் குறிப்பிட்டுள்ளார்.
நேற்று மேலும் 5 பேர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் மதன் மீது மோசடி புகார்களை கொடுத்தனர். தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த பஞ்சனி மகேஷ் என்பவரிடம் ரூ.1 கோடியே 96 லட்சம் சுருட்டி விட்டதாக மதன் மீது புகார் மனு கொடுக்கப்பட்டது.
மருத்துவ மேல்படிப்பு சீட் வாங்கித் தருவதாக மதன் மேற்கண்ட பணத்தை பெற்றதாக புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவையை சேர்ந்த டாக்டர் சகுந்தலா என்பவரும், மதனிடம் ரூ.60 லட்சம் ஏமாந்துள்ளதாக புகார் மனு கொடுத்துள்ளார்.
மதன் மீது கொடுக்கப்பட்டுள்ள புகார்களை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்த போலீஸ் கமிஷனர் டி.கே.ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளார்.
கருத்துகள்
0

சென்னை தொழில் அதிபர் வீட்டின் பூட்டிய அறையில் இருந்து மேலும் 34 சிலைகள் மீட்பு

ஆயிரம் ஆண்டு பழமையானவை என்று தொல்லியல் நிபுணர் தகவல் 

சென்னை தொழில் அதிபர் வீட்டின் பூட்டிய அறையில் இருந்து மேலும் 34 சிலைகள் மீட்கப்பட்டன. இவை ஆயிரம் ஆண்டு பழமையானவை என்று தொல்லியல் நிபுணர் தெரிவித்துள்ளார். 


சென்னை ஆழ்வார்பேட்டை முர்ரேஸ்கேட் சாலையை சேர்ந்தவர் தொழில் அதிபர் தீனதயாளன். அவரது பங்களா வீட்டில் ரூ.50 கோடி மதிப்புள்ள 55 பழங்கால கற்சிலைகளை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் மீட்டனர்.

வெளிநாட்டுக்கு கடத்த...

தீனதயாளன் வீட்டில் மீட்கப்பட்ட சிலைகள் அனைத்தும் மிகவும் பழமையான சிலைகள் என்று தெரியவந்துள்ளது. அந்த சிலைகளில் சாமி சிலைகள் அதிக அளவில் இருந்தன. அவற்றை கோவில்களில் திருடி வெளிநாட்டிற்கு கடத்தி செல்வதற்கு திட்டமிட்டு தீனதயாளன் தனது வீட்டில் பதுக்கி வைத்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகப்படுகிறார்கள்.

சிலைகளை மீட்டபோது தொழில் அதிபர் தீனதயாளன் வீட்டில் இல்லை. அவர் பெங்களூருவில் உள்ள தனது மகளின் வீட்டிற்கு தப்பி சென்று விட்டார். அவரை நேரில் ஆஜ ராகுமாறு சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர். 15 நாட்கள் கால அவகாசம் கொடுக் கப்பட்டுள்ளது. தொழில் அதிபர் தீனதயாளன் வீட்டில் தொடர்ந்து புதையலைப் போல சிலைகள் கிடைத்த வண்ணம் உள்ளது.

அறைகளை திறந்து சோதனை

தொழில் அதிபர் தீனதயாளன் வீட்டில் பூட்டிக் கிடந்த 2 அறைகளை கோர்ட்டு அனுமதி பெற்று, போலீசார் நேற்று காலை 11 மணிக்கு திறந்து பார்த்தனர். ஐ.ஜி.பொன் மாணிக்கவேல், துணை போலீஸ் சூப்பிரண்டு சுந்தரம், அறநிலையத்துறை அதிகாரிகள் சரவணன், இளம்பரிதி மற்றும் தொல்பொருள் ஆராய்ச்சி நிபுணர் நாகசாமி ஆகியோர் முன்னிலையில் பூட்டிக் கிடந்த அறைகள் திறக்கப்பட்டன. காலை 11 மணியிலிருந்து மாலை 6 மணி வரை அந்த அறைகளை போலீசார் துருவித்துருவி சோதனை போட்டனர்.

சந்தனப்பேழை போன்ற அழகான பெட்டி தீனதயாளனின் படுக்கையறைக்குள் இருந்தது. அந்த பெட்டியை திறந்து பார்த்தபோது கண்ணைக்கவரும் ஐம்பொன் சாமி சிலைகள் ஏராளமாக இருந்தது. அத்தனையும் 1000 ஆண்டுகளுக்கு முந்தைய பழமையான சிலைகள் என்று தெரியவந்தது.

மொத்தம் 34 சாமி சிலைகளை போலீசார் மீட்டனர். அவற்றில் 7 பெரிய சாமி சிலைகள் காணப்பட்டது. ஒரு புத்தர் சிலையும் இருந்தது. இன்னொரு அறையை திறந்தபோது அதற்குள் 42 ஓவியங் கள் காணப்பட்டன. அந்த ஓவியங்கள் அனைத்தும் புராதன சின்னம் போன்று காணப்பட்டன. கலைநுட்பத்துடன் அந்த ஓவியங்கள் வரையப்பட்டிருந்தன.

யானை தந்த சிலைகள்

கைப்பற்றப்பட்ட சிலைகளில் யானை தந்தத்தால் செய்யப்பட்ட 3 கிருஷ்ணன் சிலைகள் உள்ளன. 2 பசு சிலை களும் யானை தந்தத்தால் செய்யப்பட்டதில் உள்ளன.

தீனதயாளன், வெளிநாட்டு வங்கிகளில் வைத்துள்ள கணக்கு ஆவணங்கள், 500 தமிழக கோவில்களின் புகைப்படங்கள், தங்க முலாம் பூசப்பட்ட ஏராளமான சாமி பட ஓவியங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

அதிகாரி பேட்டி

சோதனை குறித்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

தற்போது 2 அறைகளை திறந்து சோதனை நடத்தினோம். மேலும் 2 அறைகள் திறக்கப்பட வேண்டியுள்ளது. கைப்பற்றப்பட்ட இந்த சிலைகள் 1000 ஆண்டுகளுக்கு முந்தைய விலைமதிக்க முடியாத சிலைகள் என்று தொல்பொருள் ஆய்வு நிபுணர் நாகசாமி கருத்து தெரிவித்துள்ளார். சோதனை தொடர்ந்து நடத்தப்படும். பூட்டிக் கிடக்கும் மேலும் 2 அறைகளையும்  திறந்து சோதனை நடத்துவோம்.

இவ்வாறு அந்த அதிகாரி தெரிவித்தார்.
 
கருத்துகள்
0
வாசிக்கப்பட்டது
43
பிரதி
Share