Wednesday, 1 July 2015

குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் பாலியல் வன்கொடுமை தடுப்பு குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கு

வாழப்பாடி, ஜூன் 30–
சேலம் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ், வாழப்பாடி பகுதியில் குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் பாலியல் வன்கொடுமை தடுப்பு குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கு நடத்தப்பட்டு வருகிறது.
வாழப்பாடி அடுத்த துக்கியாம் பாளையம் ஊராட்சி மாரியம்மன் புதூர் கிராமத்தில் நடந்த கருத்தரங்கிற்கு, யூனியன் கவுன்சிலர், வனக்குழு தலைவர் முருகன் தலைமை வகித்தார். ஊராட்சி மன்ற தலைவர் கலைச்செல்வி முன்னிலை வகித்தார். வழக்கறிஞர் பாலாஜி வர வேற்றார்.
சேலம் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு திட்ட அலுவலர் தேவகி, வாழப்பாடி போலீஸ் இன்ஸ்பெக்டர் உமாசங்கர், தலைமையாசிரியர்கள் பூங்கொடி, ஞானசேகரன், கிராம நிர்வாக அதிகாரி புஷ்பா, புதுவாழ்வு திட்ட அணித் தலைவர் ஜெயக்குமார், போலீஸ் உதவி ஆய்வாளர்கள் கிருஷ்ணன், உதயக்குமார் ஆகியோர், குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமைகள் தடுப்பு மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து கருத்துரை வழங்கினர்.
கருத்தரங்கின் முடிவில், மகளிர் கூட்டமைப்பு தலைவி தீபா நன்றி கூறினார்

தஞ்சை அருகே பேருந்து மோதி மாணவி பலி: உறவினர்கள் சாலை மறியல்

ஒரத்தநாடு, ஜூலை 1–
தஞ்சை அருகே உள்ள சின்ன பொன்னாப்பூர் பகுதியை சேர்ந்தவர் ரவிச்சந்திரன். பட்டுக்கோட்டை அரசு போக்குவரத்து கழக டிப்போவில் கண்டக்டராக வேலை பார்த்து வருகிறார்.
இவரது மகள் சந்தியா(12). இவள் பனையகோட்டையில் உள்ள அரசு உயர் நிலைப்பள்ளியில் 7–ம் வகுப்பு படித்து வந்தாள். இன்று காலை தனது அக்கா சவுந்தர்யாவுடன் சைக்கிளில் பள்ளிக்கு சென்றார்.
அப்போது மன்னார்குடியில் இருந்து தஞ்சைக்கு வந்த அரசு பேருந்து மாணவி சைக்கிளில் தொங்கவிட்டிருந்த பை மீது உரசியது. இதனால் நிலை தடுமாறிய மாணவி சந்தியா பேருந்துக்குள் விழுந்தார். அவர் பேருந்து மோதி சம்பவ இடத்திலேயே பலியானார். அவரது அக்கா காயம் இன்றி உயிர் தப்பினார்.
விபத்து குறித்த தகவல் கிடைத்தும் சந்தியாவின் உறவினர்கள் அங்கு விரைந்து வந்தனர். அவர்கள் சிறிது நேரம் மறியலில் ஈடுபட்டனர். தகவல் கிடைத்ததும் ஒரத்தநாடு டி.எஸ்.பி. செங்கமலக்கண்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.
அவர்கள் பலியான மாணவி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து ஒரத்தநாடு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இன்று காலை பேருந்து மோதி மாணவி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

நிலம் கையகப்படுத்தும் சட்டத்தை எதிர்த்து புதுக்கோட்டையில் விவசாயிகள் சங்கம் போராட்டம்

புதுக்கோட்டை, ஜூலை.1–
பிரமதர் மோடி தலைமையிலான மத்திய அரசின் நிலம் கையகப்படுத்தும் மசோதாவைக் கண்டித்தும், மசோதாவைத் திரும்பப்பெற வலியுறுத்தியும் நாடு முழுவதும் அந்தந்த மாவட்ட கலெக்டரிடம் விவசாயிகளின் சார்பில் மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது.
அதனொரு பகுதியாக புதுக்கோட்டையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டத் தலைவர் எம்.செபஸ்தியான் தலைமை வகித்தார். புதுக்கோட்டை சின்னப்பா பூங்கா அருகில் நடைபெற்ற விவசாயிகளின் பேரணியை அனைத்திந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் மாநிலத் தலைவர் ஏ.லாசர் எம்எல்ஏ., தொடங்கி வைத்து உரையாற்றினார்.
கோரிக்கைகளை விளக்கி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் எம்.சின்னத்துரை, மாவட்டச் செயலாளர் எஸ்.கவிவர்மன், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்.ராஜசேகரன், விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் எஸ்.பொன்னுச்சாமி மற்றும் நிர்வாகிகள் எம்.முத்துராமலிங்கன், கே.ஆர்.சின்னையா, சா.தோ.அருனோதயன், பி.ராமசாமி, தென்றல் கருப்பையா உள்ளிட்ட 600–க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனர்.
புதுக்கோட்டை சின்னப்பா பூங்கா அருகில் தொடங்கிய பேரணி அண்ணா சிலை, தெற்கு நான்காம் வீதி உள்ளிட்ட நகரின் முக்கிய வீதிகள் வழியாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நிறைவடைந்தது. பேரணி முடிவில் மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கைகள் அடங்கிய மனு அளிக்கப்பட்டது

கிண்டியில் மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதி வாலிபர் பலி

ஆலந்தூர், ஜூலை 1–கிண்டியில் மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதி வாலிபர் பலி
துரைப்பாக்கம், கண்ணகி நகரை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 22). தனியார் நிறுவனத்தில் டிரைவராக வேலை பார்த்து வந்தார். இன்று காலை அவர் பணிக்காக ஹெல்மெட் அணிந்தபடி மோட்டார் சைக்கிளில் சென்றார். வேளச்சேரி நீச்சல் குளம் அருகே சென்ற போது பின்னால் வந்த சமையல் எண்ணெய் ஏற்றி வந்த டேங்கர் லாரி, மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் நிலை தடுமாறிய செல்வராஜ் வண்டியோடு கீழே விழுந்தார். அப்போது லாரியின் பின் சக்கரம் அவர் மீது ஏறி இறங்கியது.
இதில் ஹெல்மெட்டோடு செல்வராஜின் தலை நசுங்கியது. சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.
கிண்டி போக்குவரத்து போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். இந்த விபத்தால் சிறிது நேரம் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து லாரி டிரைவர் சுங்குவார் சத்திரத்தை சேர்ந்த கணேசை கைது செய்தனர்.

சென்னையில் 35 லட்சத்து 45 ஆயிரம் வாகனங்கள்: 90 சதவீதம் பேர் ஹெல்மெட் அணிந்து சென்றனர் - அதிகாரி தகவல்

சென்னை, ஜூலை 1-சென்னையில் 35 லட்சத்து 45 ஆயிரம் வாகனங்கள்: 90 சதவீதம் பேர் ஹெல்மெட் அணிந்து சென்றனர் - அதிகாரி தகவல்
இன்று காலை 7 மணியளவில் ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டியவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது. சுமார் 40 சதவீதம் பேரே ஹெல்மெட் அணிந்திருந்தனர்.
நேரம் போகப்போக 10 மணிக்கு பிறகு பெரும்பாலானோர் ஹெல்மெட் அணிந்தே வாகனம் ஓட்டினார்கள். 90 சதவீதத்துக்கு அதிகமானோர் ஹெல்மெட் அணிந்து சென்றதை காண முடிந்தது. ஒரு சில பெண்கள் ஹெல்மெட்டை மோட்டார் சைக்கிளில் தொங்கவிட்டப்படி சென்றனர். போலீசார் அறிவுறுத்திய பிறகு தலையில் அணிந்து கொண்டு வாகனம் ஓட்டினார்கள்.
இன்று நடந்த ஹெல்மெட் சோதனை தொடர்பாக போக்குவரத்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:–
சென்னையில் 35 லட்சத்து 45 ஆயிரத்து 900 இருசக்கர வாகனங்கள் ஓடுகின்றன. பெரும்பாலான விபத்துக்களில் தலையில் அடிபடுவதால்தான் உயிர் இழக்கிறார்கள். இதன் காரணமாக ஐகோர்ட்டு உத்தரவுப்படி ஹெல்மெட் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டுபவர்களுக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டதற்கான ரசீது வழங்கப்படுகிறது. அந்த ரசீதின் மற்றொரு பிரதி எங்களிடம் இருக்கும். இன்னொன்று கோர்ட்டுக்கு அனுப்பப்படும். ஹெல்மெட் அணியாமல் சிக்குபவர்கள் ஹெல்மெட் வாங்கியதற்கான ரசீதை கோர்ட்டில் ஒப்படைத்த பிறகுதான் வாகனம் திரும்பவும் வழங்கப்படும்.
சென்னையில் ஹெல்மெட் தொடர்பான விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. 90 சதவீதத்துக்கும் அதிகமானோர் ஹெல்மெட் அணிந்துதான் வாகனம் ஓட்டுகிறார்கள். சென்னை அண்ணா நகரில் இன்று ஹெல்மெட் தொடர்பான விழிப்புணர்வு பிரசாரம் செய்யப்பட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.

தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனாவை மாற்ற வேண்டும்: ராமதாஸ் அறிக்கை

சென்னை, ஜூலை. 1–தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனாவை மாற்ற வேண்டும்: ராமதாஸ் அறிக்கை
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:–
சென்னை ராதாகிருஷ்ணன் நகர் தொகுதி இடைத்தேர்தல் மிக அமைதியாகவும், நேர்மையாகவும் நடத்தி முடிக்கப்பட்டிருப்பதாக தமிழகத் தலைமைத்தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா கூறியிருக்கிறார். மேலும், சில கட்சிகள் ஆதாரமின்றி புகார் கூறியிருப்பதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார். முறைகேடுகளை கண்டு கொள்ளாதது மட்டுமின்றி புகார் கூறியவர்களையே சக்சேனா விமர்சிப்பது கண்டிக்கத்தக்கது.
ராதாகிருஷ்ணன் நகர் சட்டப்பேரவைத் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்தே ஆளுங்கட்சியினர் அப்பட்டமான விதிமீறல்களில் ஈடுபட்டனர். ராதா கிருஷ்ணன் நகர் தொகுதியில் கடந்த 4 ஆண்டுகளாக எவ்வித நலத்திட்டங்களையும் செய்யாமல் இருந்து விட்டு, இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டவுடன், இரவோடு இரவாக தொகுதி முழுவதும் சாலைகள் அமைக்கப்பட்டன.
காலங்காலமாக கருப்பான கழிவு நீர் வந்த நிலையில், இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டவுடன் தற்காலிக ஏற்பாடாக சுத்தமான குடிநீர் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
கழிவுநீர் குழாய்களும் மாற்றப்பட்டன. பொது மக்களுக்கு இந்த வசதிகள் செய்து தரப்பட்டது வரவேற்கத்தக்க விஷயம் தான். ஆனால், 4 ஆண்டுகளில் எதையும் செய்யாமல் தேர்தல் நடத்தை விதிகள் நடைமுறைக்கு வந்த பின்னர் இதை செய்தது விதிமீறல் என்பது சக்சேனாவுக்கு தெரியாதா? இதை தடுக்க அவர் என்ன செய்தார்?
தேர்தல் பிரச்சாரத்தின் போது சேலம் மாநகரைச் சேர்ந்த காவல்துறை உதவி ஆணையர் கணேசன் என்பவர் காலில் அடிபட்டதாகக் கூறி மருத்துவ விடுப்பு எடுத்துக்கொண்டு தண்டையார்பேட்டையில் ஆளுங்கட்சிக்காக பரப்புரை மேற்கொண்டதை புகைப்பட ஆதாரத்துடன் அறிக்கையாக வெளியிட்டேன்.
அதைத் தொடர்ந்து மற்ற எதிர்க்கட்சிகளின் தலைவர்களும் இதே குற்றச்சாற்றை முன் வைத்தனர். இந்தக் குற்றச்சாற்றின் அடிப்படையில் தலைமைத் தேர்தல் அதிகாரி என்ன நடவடிக்கை எடுத்தார்? இதுதொடர்பாக சில செய்தியாளர்கள் அவரிடம் கேட்டபோது, இது குறித்து யாரும் புகார் தரவில்லை என்று கூறினார்.
அப்படியானால், ஊடக செய்திகளின் அடிப்படையில் நீங்களாக முன்வந்து நடவடிக்கை எடுக்க மாட்டீர்களா? என்று கேட்டபோது, ‘‘நான் இன்று தொலைக்காட்சி பார்க்கவில்லை. அதனால் இதுபற்றி எனக்கு எதுவும் தெரியாது’’ என்று பதிலளித்துள்ளார்.
இப்படி பதில் கூறுவது பொறுப்பான அதிகாரிக்கு அழகா? காவல் அதிகாரி பிரச்சாரம் செய்தது குறித்து அதுவரை தெரியாவிட்டாலும், அதன்பின் விசாரித்து தலைமைத் தேர்தல் அதிகாரி சக்சேனா நடவடிக்கை எடுப்பதை யார் தடுத்தது?
181 ஆவது வாக்குச்சாவடியில் வாக்காளர்களின் எண்ணிக்கையை விட அதிகமாக வாக்குகள் பதிவாயின. ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பதைப்போல ராதாகிருஷ்ணன் நகர் தொகுதியில் நடந்த முறைகேடுகளுக்கு இது ஒரு உதாரணம் தான்.
எந்தெந்த வாக்குச்சாவடியில் இதே போல் முறைகேடுகள் நடந்தன என்பதை விசாரித்து அவை அனைத்திலும் மறு தேர்தல் நடத்தியிருக்க வேண்டும்... இல்லாவிட்டால் இடைத்தேர்தலை ரத்து செய்திருக்க வேண்டும்.
தேர்தல் பரப்புரை முடிவடைந்தவுடன் வெளியாட்கள் அனைவரும் தொகுதியை விட்டு வெளியேறி இருக்க வேண்டும். ஆனால், வாக்குப்பதிவு நாளன்று சென்னை மாநகராட்சி அ.தி.மு.க. கவுன்சிலர்கள் அனைவரும் ராதாகிருஷ்ணன் நகர் தொகுதியில் முகாமிட்டு முறைகேடுகளை அரங்கேற்றினார்கள். இதைத் தடுக்க தலைமைத் தேர்தல் அதிகாரி சக்சேனா சிறு துரும்பையாவது கிள்ளிப் போட்டிருப்பாரா?
அனைத்து கட்சிகளுக்கும் பொதுவாக செயல்பட வேண்டிய சந்தீப் சக்சேனா ஆளுங்கட்சிக்கு ஆதரவாக செயல்பட்டிருக்கிறார். இவரை வைத்துக்கொண்டு 2016 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலை நடத்துவது சரியாக இருக்காது. எனவே, சந்தீப் சக்சேனாவுக்கு பதிலாக தமிழகத்திற்கு புதிய தலைமைத் தேர்தல் அதிகாரியை நியமிப்பதற்கு இந்தியத் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு டாக்டர் 

கன்னியாகுமரி அருகே விசைப்படகு மோதி வள்ளம் உடைந்தது: 4 மீனவர்கள் நடுக்கடலில் தத்தளிப்பு

கன்னியாகுமரி, ஜூலை. 1–கன்னியாகுமரி அருகே விசைப்படகு மோதி வள்ளம் உடைந்தது: 4 மீனவர்கள் நடுக்கடலில் தத்தளிப்பு
நெல்லை மாவட்டம் கூட்டப்புளி வாடி தெருவைச் சேர்ந்தவர் தினேஷ் (வயது 30). இவருக்கு சொந்தமான வள்ளம் மூலம் இன்று அதிகாலை இவரும், ராஜாக்கமங்கலத்தைச் சேர்ந்த ஸ்டாலின் (35). கூட்டப்புளி கோவில் தெருவைச் சேர்ந்த பெனடிக்ட் (51), தெற்கு தெருவைச் சேர்ந்த சிரியாஸ் (62) ஆகிய 4 மீனவர்களும் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.
அவர்கள் இன்று அதிகாலை 3 மணியளவில் கூட்டப்புளியில் இருந்து 8 நாட்டிக்கல் மைல் தொலைவில் கடலில் மீன் பிடித்து கொண்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக வேகமாக சென்ற ஒரு விசைப்படகு அவர்களின் வள்ளம் மீது மோதி விட்டு மின்னல் வேகத்தில் சென்று விட்டது. இதனால் வள்ளத்தின் முன் பகுதி உடைந்து நொறுங்கியது.
கடல் நீர் வள்ளத்திற்குள் புகுந்ததால் வள்ளம் கடலில் மூழ்கியது. அந்த வள்ளத்தில் இருந்த 4 மீனவர்களும் கடலில் தத்தளித்தனர். படகில் இருந்த வலை மற்றும் மீன்பிடி கருவிகளை மீட்பதற்காக தினேஷ் போராடினார். மற்ற மீனவர்களும் உதவியை எதிர்பார்த்து கடலில் தத்தளித்துக் கொண்டிருந்தனர். இந்த நிலையில் இன்று காலை 6.30 மணியளவில் அந்த வழியாக கன்னியாகுமரி அலங்கார மாதா தெருவைச் சேர்ந்த ஜார்ஜ் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். அவர்கள் கடலில் தத்தளித்த மீனவர்களை பார்த்து அவர்களை மீட்டனர்.
ஸ்டாலின், பெனடிக்ட், சிரியாஸ் ஆகிய 3 மீனவர்களையும் தங்கள் படகுகளில் ஏற்றிக் கொண்டனர். தினேஷ் வலையை மீட்பதற்காக கடலில் நீந்தி சென்றதால் அந்த வழியாக வந்த கூட்டப்புளி மீனவர்களின் வள்ளத்தில் ஏறிக்கொண்டார்.
கன்னியாகுமரி மீனவர்களால் மீட்கப்பட்ட 3 மீனவர்களும் அவர்களின் உடைந்த வள்ளமும் கன்னியாகுமரி அருகே உள்ள சின்ன முட்டத்திற்கு கொண்டு வரப்பட்டது. இந்த தகவல் கிடைத்ததும், கடலோர பாதுகாப்பு குழும போலீஸ் இன்ஸ்பெக்டர் சகாயஜோஸ், சப்–இன்ஸ்பெக்டர் சுடலைமணி, ஏட்டு நீலமணி ஆகியோர் அங்கு சென்று விசாரணை நடத்தினார்கள்.
கடலில் தத்தளித்த மீனவர்களை காப்பாற்றிய மகிழ்ச்சி மாதா விசைப்படகு சங்கத்தைச் சேர்ந்த ஜார்ஜ் மற்றும் படகில் இருந்த 16 மீன்பிடி தொழிலாளர்களையும், கன்னியாகுமரி தூய அலங்கார உபகார மாதா திருத்தல பங்குத்தந்தை நசரேன், பங்கு பேரவை துணை தலைவர் லியோன், செயலாளர் சேவியர் அமலதாசன், கல்விக்குழு பொறுப்பாளர் பிரபா, மகிழ்ச்சி மாதா விசைப்படகு சங்கத்தலைவர் செல்வம் ஆகியோர் பொன்னாடை அணிவித்து பாராட்டினார்கள்.

ஹெல்மெட் அணியாத போலீசாரை மடக்கி பிடித்த எஸ்.பி.: 670 பேர் மீது வழக்கு

நாகர்கோவில், ஜூலை. 1–ஹெல்மெட் அணியாத போலீசாரை மடக்கி பிடித்த எஸ்.பி.: 670 பேர் மீது வழக்கு
நாகர்கோவில் கலெக்டர் அலுவலகம் அருகே மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் நேரடியாக ஹெல்மெட் சோதனையில் ஈடுபட்டார். டி.எஸ்.பி. ஈஸ்வரன் மற்றும் போலீசாரும் இதில் பங்கேற்றனர்.
அப்போது அந்த வழியாக ஹெல்மெட் அணியாமல் வந்தவர்களை போலீசார் மடக்கி பிடித்து ரூ.100 அபராதம் விதித்தனர். மேலும் அவர்களது வாகனம் மற்றும் லைசென்சுகளை பறிமுதல் செய்தனர்.
ஹெல்மெட் வாங்கி வந்து அதனை காண்பித்த பிறகுதான் வாகனத்தையும் ஆவணங்களையும் ஒப்படைத்தனர். போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் சோதனை செய்துகொண்டிருந்தபோது ஒரு போலீஸ்காரர் ஹெல்மெட் அணியாமல் வாகனத்தில் வந்தார். அவரை எஸ்.பி. மடக்கி பிடித்தார். அவரது வாகனத்தை பறிமுதல் செய்து அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
இதுபோல நாகர்கோவில் சப்–டிவிசனில் 170 பேரும், கன்னியாகுமரி சப்–டிவிசனில் 94 பேரும், தக்கலை சப்–டிவிசனில் 330 பேரும், குளச்சல் சப்–டிவிசனில் 76 பேரும் என மொத்தம் 670 பேர் மீது ஹெல்மெட் அணியாதது தொடர்பாக வழக்கு பதிவு செய்து அபராதம் விதிக்கப்பட்டது.
மேலும் அனைத்து இடங்களிலும் இந்த சோதனை முழுமையாக வீடியோவில் பதிவு செய்யப்பட்டது.
இதுபற்றி போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் கூறியதாவது:–
குமரி மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 50 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. 99 சதவீதத்திற்கும் மேற்பட்டவர்கள் ஹெல்மெட் அணிந்து இருந்தனர். போலீசார் ஏற்கனவே ஏற்படுத்தி இருந்த விழிப்புணர்வு காரணமாக பெரும்பாலானவர்கள் ஹெல்மெட்டுடன்தான் வாகனம் ஓட்டினார்கள். ஹெல்மெட் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு அவர்களது வாகனமும், ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டது.
இவ்வாறு அவர் கூறினார்