Sunday, 17 August 2025

காத்திருப்பு போராட்டம்.. மதுரை மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் அறிவிப்பு.



மதுரை மாநகராட்சிக்கு உட்பட்டு மொத்தம் 5 மண்டலங்கள், 100 வார்டுகள் இருக்கின்றன. இதில் 500க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் நடந்த சில நாட்களாகவே தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வருகின்றனர். தூய்மை பணியை தனியார் மயமாக்க வழி வகை செய்யும் அரசாணை எண் 152ஐ ரத்து செய்ய வேண்டும் என்பதே இவர்களின் கோரிக்கையாக இருக்கிறது.

தவிர, தூய்மை பணியாளர்களான தங்களுக்கு அரசாணை 62(2D)ன் படி தினசரி ஊதியமாக ரூ.754 வழங்க வேண்டும், தங்களுக்கான உபகரணங்களை வழங்க வேண்டும், தூய்மை பணியை அவர்லேண்ட் தனியார் நிறுவனத்திடம் ஒப்படைத்ததை திரும்ப பெற வேண்டும், அரசே தூய்மை பணிகளை ஏற்று நடத்த வேண்டும், அரசு அறிவித்துள்ள பண பலன்களை கொடுக்க வேண்டும் என பல கோரிக்கைகளை வலியுறுத்தி இவர்களின் போராட்டம் நடைபெற்று வருகிறது. கடந்த ஆண்டு டிசம்பரில் மதுரை மாநகராட்சி தலைமை அலுவலகத்தை 300க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் முற்றுகையிட்டு தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தியிருந்தனர். இந்நிலையில், நாளை முதல் மீண்டும் இக்கோரிக்கைகளை முன்வைத்து போராட்டத்தை நடத்த இருப்பதாக தூய்மை பணியாளர்கள் அறிவித்திருக்கின்றனர். தங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை காலவரையற்ற காத்திருப்பு போராட்டத்தை நடத்த இருப்பதாக அவர்கள் அறிவித்திருக்கின்றனர்.


 

No comments:

Post a Comment