Monday, 3 November 2014

இலங்கையில் தமிழக மீனவர்களுக்கு தூக்கு தண்டனை பல்லாவரத்தில் ரெயில் மறியல் போராட்டம்


தாம்பரம்,
தமிழக மீனவர்கள் 5 பேருக்கு தூக்கு தண்டனை விதித்த இலங்கை அரசை கண்டித்தும், தண்டனை விதிக்கப்பட்ட 5 மீனவர்களையும் விடுதலை செய்யக்கோரியும் தந்தை பெரியார் திராவிடர் கழகம் மற்றும் அம்பேத்கர் மக்கள் நீதி இயக்கம் ஆகியவற்றின் சார்பில் பல்லாவரம் ரெயில் நிலையத்தில் (2.11.2014) ரெயில் மறியல் போராட்டம் நடைபெற்றது.
பெரியார் திராவிடர் கழக துணைத்தலைவர் துரைசாமி தலைமையில் சட்டத்துறை செயலாளர் இளங்கோவன், வடக்கு மண்டல அமைப்பாளர் அண்ணாமலை, அம்பேத்கர் மக்கள் நீதி இயக்க அமைப்பாளர் பாண்டியராசன் உள்பட பலர் சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம் நோக்கி வந்த மின்சார ரெயிலை மறித்து போராட்டம் நடத்தினர்.
இதையடுத்து ரெயில் மறியலில் ஈடுபட்ட 35 பேரை போலீசார் கைது செய்து பல்லாவரத்தில் உள்ள பள்ளியில் தங்க வைத்தனர். பின்னர் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.

பல்லாவரம் விடுதியில்வாலிபர் தற்கொலை முயற்சி

மலேசியாவில் வேலை வாங்கித்தருவதாக மோசடி பல்லாவரம் விடுதியில் வாலிபர் தற்கொலை முயற்சி போலீசாரின் துரித நடவடிக்கையால் உயிர் பிழைத்தார்
தாம்பரம்,
மலேசியாவில் வேலை வாங்கித்தருவதாக மோசடி செய்ததால் ஏமாந்த வாலிபர், பல்லாவரம் விடுதியில் கையை அறுத்து தற்கொலைக்கு முயன்றார். உரிய நேரத்தில் சென்று அவரை போலீசார் காப்பாற்றினர்.
மலேசியாவில் வேலை சேலம் ஜாகிர்அம்மாபாளையம், பாரதி நகரைச் சேர்ந்தவர் அருணகிரி(வயது 22). இவர், விசுவல் கம்யூனிகேஷன் படித்தவர். வேலை தேடி வந்த இவரிடம் அதே பகுதியைச் சேர்ந்த அப்துல்லா என்பவர் மலேசியாவில் வேலை வாங்கித்தருவதாக கூறினார்.
அதற்காக ரூ.2 லட்சம் பெற்றுக்கொண்டு கடந்த மாதம் 25–ந்தேதி அருணகிரியை மலேசியாவிற்கு அனுப்பினார். மலேசியா சென்ற அருணகிரிக்கு, சுற்றுலா விசாவில் வந்து இருப்பதாக கூறி வேலை தர மறுத்து விட்டதாக தெரிகிறது.
சென்னை திரும்பினார் அதன்பிறகே அவருக்கு அப்துல்லா ரூ.2 லட்சம் வாங்கிக்கொண்டு வேலைக்கான விசா என்று கூறி ஏமாற்றி, சுற்றுலா விசாவில் மலேசியாவுக்கு அனுப்பி வைத்தது தெரிந்தது. இதனால் வேலைக்கு செல்ல முடியாமல் தவித்த அருணகிரி, நேற்று முன்தினம் மலேசியாவில் இருந்து விமானத்தில் சென்னை திரும்பி வந்தார்.
பின்னர் பல்லாவரம் தர்கா ரோட்டில் உள்ள ஒரு விடுதியில் அறை எடுத்து தங்கினார். ரூ.2 லட்சம் கொடுத்து வெளிநாட்டு வேலை கிடைக்காமல் ஏமாந்ததால் மனமுடைந்த அருணகிரி, நேற்று அதிகாலை சொந்த ஊரில் உள்ள தனது பெரியப்பா துரைசாமிக்கு போன் செய்து, வெளிநாட்டில் வேலை கிடைக்கும் என பணம் கொடுத்து ஏமாந்த விவரத்தை கூறினார்.
தற்கொலை முயற்சி மேலும் அவர், பல்லாவரத்தில் தங்கி உள்ள விடுதி முகவரியை தெரிவித்து, தற்கொலை செய்து கொள்ளப்போவதாக தெரிவித்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த துரைசாமி, இதுபற்றி சேலம் சூரமங்கலம் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். அவர்கள் பல்லாவரம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.
உடனடியாக பல்லாவரம் போலீசார் அருணகிரி தங்கி இருந்த விடுதிக்கு விரைந்து சென்று பார்த்தனர். அங்கு விடுதி அறையில் அருணகிரி தனது கை மணிக்கட்டு பகுதியில் அறுத்துக்கொண்டு ரத்தம் வழிந்த நிலையில் மயங்கி கிடந்தார்.
போலீசார் அவரை மீட்டு பல்லாவரத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச்சென்று உரிய சிகிச்சை அளித்து அருணகிரியின் உயிரை காப்பாற்றினர். இதற்கிடையில் துரைசாமியும் சென்னை வந்து விட்டார். போலீசார் அருணகிரிக்கு அறிவுரை கூறி துரைசாமியுடன் அனுப்பி வைத்தனர். போலீசாரின் துரித நடவடிக்கையால் வாலிபரின் உயிர் காப்பாற்றப்பட்டது.

சென்னை நகரில் வாக்காளர் பெயர் சேர்ப்பு இறுதி முகாம் 3,509 இடங்களில் நடந்தது மழை காரணமாக அதிகமானோர் பங்கேற்கவில்லை

சென்னை நகரில் (2.11.2014) வாக்காளர் பெயர் சேர்ப்பு இறுதி முகாம் 3,509 இடங்களில் நடந்தது மழை காரணமாக அதிகமானோர் பங்கேற்கவில்லைசென்னை,

சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட 16 சட்டமன்ற தொகுதிகளுக்கு, இந்த ஆண்டுக்கான வாக்காளர் பெயர் சேர்ப்பு இறுதிக்கட்ட சிறப்பு முகாம் நேற்று 3,509 இடங்களில் நடைபெற்றது. மழை காரணமாக அதிகமானோர் பங்கேற்கவில்லை.

3,509 இடங்களில் சிறப்பு முகாம்

சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட 16 சட்டமன்ற தொகுதிகளில், இந்த ஆண்டுக்கான இறுதிக்கட்ட வாக்காளர் பெயர் சேர்ப்பு சிறப்பு முகாம் நேற்றுடன் முடிவடைந்தது. சென்னை மாநகராட்சி மண்டல அலுவலகங்கள் மற்றும் சென்னை பள்ளிகள் உள்பட 3 ஆயிரத்து 509 இடங்களில் சிறப்பு முகாம் நடத்தப்பட்டது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, கடந்த அக்டோபர் 15-ந்தேதி சென்னை மாநகராட்சி அலுவலகங்களில் வாக்காளர் வரைவு பட்டியல் வெளியிடப்பட்டது. இந்த வரைவு பட்டியலில் பெயர் விடுபட்டவர்கள் மற்றும் முகவரி மாற்றம், திருத்தம் செய்தல், நீக்குதல் தொடர்பாக விண்ணப்பிக்கவும், மேலும் 2015-ம் ஆண்டு ஜனவரி 1-ந் தேதி 18 வயது பூர்த்தி அடைபவர்கள் புதிதாக விண்ணப்பிப்பதற்கான சிறப்பு முகாம்களை அக்டோபர் 26 மற்றும் நவம்பர் 2-ந் தேதி நடத்துவதற்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருந்தது.

ஆன்-லைன், மண்டல அலுவலகங்களில்...

அதன்படி, இந்த ஆண்டுக்கான வாக்காளர் பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தம் செய்தலுக்கான இறுதிகட்ட சிறப்பு முகாம் நேற்று நடைபெற்றது. இதில், புதிதாக பெயர் சேர்க்க விரும்புபவர்களுக்கு படிவம்-6, திருத்தம் செய்பவர்களுக்கு படிவம்-8, ஒரே தொகுதிக்குள் முகவரி மாற்றம் செய்பவர்களுக்கு படிவம்-8ஏ, பெயரை நீக்குவதற்கு படிவம்-7, அடையாள அட்டை தொலைந்தவர்களுக்கு படிவம்-001 சி, வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு படிவம்-6ஏ ஆகிய படிவங்கள் வழங்கப்பட்டன.

நேற்று காலை முதல் சென்னையில் பெரும்பாலான இடங்களில் பரவலாக மழை பெய்ததால், சிறப்பு முகாம்களுக்கு அதிகமானோர் வரவில்லை என்று தெரிகிறது. இந்த சிறப்பு முகாமை பயன்படுத்தாதவர்கள் வருகிற 10-ந்தேதி வரை, ஆன்-லைன் மற்றும் மண்டல அலுவலகங்களில் சென்று விண்ணப்பித்து கொள்ளலாம்.

மார்ச் மாதத்துக்குள்வண்ண அடையாள அட்டை

இந்த சிறப்பு முகாம்களில் விண்ணப்பித்து உள்ளவர்களுக்கான திருத்தங்களுடன் கூடிய வரைவு வாக்காளர் பட்டியல் வருகிற ஜனவரி 5-ந்தேதி வெளியிடப்பட உள்ளது. மேலும், தேசிய வாக்காளர் தினமான ஜனவரி 25-ந்தேதி முதல் வண்ண வாக்காளர் அடையாள அட்டைகள் வழங்கப்பட உள்ளன.

முதலில், புதிதாக 18 வயது பூர்த்தி அடைந்தவர்களுக் கான அடையாள அட்டைகள் வழங்கப்படுகிறது. அதைத்தொடர்ந்து மற்றவர்களுக் கான வண்ண அடையாள அட்டைகளும் வழங்கப்பட உள்ளன. ஜனவரி, பிப்ரவரி, மார்ச் மாதத்திற்குள் அனைவருக்கும் வண்ண அடையாள அட்டை வழங்கப்படும் என்று சென்னை மாநகராட்சி தேர்தல் துறை வட்டாரத்தில் கூறப்படுகிறது.

வாசன் ஆதரவாளர்கள் சத்தியமூர்த்தி பவனை கைப்பற்ற முடியுமா?

சென்னை, நவ. 3–வாசன் ஆதரவாளர்கள் சத்தியமூர்த்தி பவனை கைப்பற்ற முடியுமா?
பெருந்தலைவர் காமராஜர் உருவாக்கிய சத்திய மூர்த்தி பவன் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகமாக செயல்பட்டு வருகிறது. தமிழ்நாடு காங்கிரஸ் அறக்கட்டளைக்கு ஏராளமான சொத்துக்கள் உள்ளன. சத்தியமூர்த்தி பவன், தேனாம்பேட்டை காங்கிரஸ் வளாகம், காமராஜர் அரங்கம் உள்ளிட்டவை இந்த அறக்கட்டளை மூலம் பராமரிக்கப்படுகிறது.
இந்த அறக்கட்டளை கட்சியின் மூத்த தலைவர்கள் 4 பேரின் மேற்பார்வையில் செயல்படுகிறது. அறக்கட்டளை சொத்துக்களின் பேரில் எடுக்கப்படும் எந்த ஒரு முடிவையும் இவர்கள் ஒப்புதல் பெற்றே நிறைவேற்ற முடியும்.
ஜி.கே.மூப்பனார் காங்கிரசில் இருந்து விலகி தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை தொடங்கினார். அப்போது காங்கிரஸ் தலைமை இடமான சத்தியமூர்த்தி பவனையும் அந்த கட்சி கைப்பற்றிக் கொண்டது.
த.மா.கா. தொடங்கப்பட்ட 1996–ல் தமிழ்நாடு காங்கிரஸ் அறக்கட்டளை பெறுப்பாளர்களாக ஜி.கே.மூப்பனார், ப.சிதம்பரம், ப.ராமச்சந்திரன், என்.ராமசாமி உடையார் ஆகியோர் இருந்தனர். அனைவரும் மூப்பனார் முடிவை ஆதரித்தனர். எனவே சத்தியமூர்த்தி பவன் த.மா.க.விடமே இருந்தது.
ஜி.கே.வாசன் காங்கிரசில் இருந்து விலகி மீண்டும் த.மா.கா. தொடங்குவதால் சத்தியமூர்த்தி பவன் மீண்டும் அந்த கட்சியின் வசம் செல்லுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது என்றாலும் அதற்கு வாய்ப்பு இல்லை என்று தெரியவந்துள்ளது.
தமிழ்நாடு காங்கிரஸ் அறக்கட்டளை நிர்வாகிகளாக இப்போது முன்னாள் மத்திய மந்திரிகள் ஜெயந்தி நடராஜன், சுதர்சனநாச்சியப்பன், ஜி.கே.வாசன், முன்னாள் எம்.எல்.ஏ. யசோதா ஆகியோர் உள்ளனர். எனவே, இன்றைய நிலைமைவேறு.
மூப்பனார் காங்கிரசில் இருந்து விலகியபோது அவரது கட்டுப்பாட்டில் தமிழ்நாடு காங்கிரஸ் அறக்கட்டளை இருந்தது. இப்போது ஜி.கே.வாசன் தவிர மற்ற 3 பேரும் கட்சி மேலிடத்தை மதிப்போம் என்று கூறுவதால் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தலைமையை ஆதரிக்கிறார்கள்.
மேலும் மூப்பனார் தலைமையில் அன்று காங்கிரஸ் செயல்பட்டதால், சத்தியமூர்த்தி பவனிலேயே த.மா.கா.வும் செயல்படத் தொடங்கியது. எனவே காங்கிரஸ் வேறு அலுவலகத்தை தேட வேண்டிய நிலமை ஏற்பட்டது.
இப்போது ஞானதேசிகன் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகி வெளியே சென்று விட்டார். புதிய தலைவராக ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் சத்தியமூர்த்தி பவனில் பதவி ஏற்று விட்டார். ஜி.கே.வாசன் ஆதரவாளர்கள் வெளியே சென்று கூட்டம் நடத்தி வருகிறார்கள்.
தமிழ்நாடு காங்கிரஸ் அறக்கட்டளை பொறுப்பாளர்களில் ஜி.கே. வாசன் தவிர மற்றவர்கள் காங்கிரஸ் பக்கமே உள்ளனர். எனவே சத்தியமூர்த்தி பவனை ஜி.கே.வாசன் ஆதரவாளர்கள் நெருங்க முடியாது என்று காங்கிரஸ் மூத்த நிர்வாகிகள் தெரிவித்தனர்.

ஜி.கே. வாசன் நீக்கம்


காங்கிரஸ் கட்சியில் இருந்து ஜி.கே. வாசன் நீக்கம்

காங்கிரஸ் கட்சியில் இருந்து ஜி.கே. வாசன் நீக்கம்
சென்னை, நவ. 3-

தமிழக காங்கிரஸ் தலைவராக இருந்த ஞானதேசிகன் தனது பதவியை ராஜினாமா செய்தார். அத்துடன் காங்கிரஸ் மேலிடத்தை விமர்சித்தார். இந்த கருத்தை ஜி.கே. வாசனும் ஆதரித்தார். ஞானதேசிகன் ராஜினாமா செய்த உடனேயே ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் புதிய தலைவராக நியமிக்கப்பட்டார்.

இந்நிலையில் இன்று காலை காங்கிரஸ் கட்சியில் இருந்து பிரிந்து புதிய கட்சி தொடங்குவதாக அறிவித்தார். புதிய கட்சிக்கான கொடி விரைவில் அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

புதிதாக கட்சி தொடங்குவேன் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், ஜி.கே. வாசன் காங்கிரஸ் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். ஒழுங்கு நடவடிக்கை காரணமாக 6 வருடங்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது.