Wednesday, 21 January 2015

ராஜபக்சேவால் பழிவாங்கப்பட்ட முன்னாள் ராணுவ தளபதி பொன்சேகாவுக்கு மீண்டும் பதவி: ஜனாதிபதி சிறிசேனா அறிவிப்பு

கொழும்பு, ஜன.22- 

ராஜபக்சே அரசால் பழி வாங்கப்பட்ட முன்னாள் ராணுவ தளபதி சரத் பொன்சேகாவுக்கு மீண்டும் பதவி வழங்குவதாக ஜனாதிபதி சிறிசேனா அறிவித்துள்ளார். 

இலங்கை நாட்டின் ராணுவ தளபதியாக பணியாற்றியவர், சரத் பொன்சேகா. ராஜபக்சே ஆட்சியின்போது விடுதலைப்புலிகள் படை மீதான தாக்குதல்களுக்கு பொன்சேகாதான் தலைமை தாங்கினார். இந்த நிலையில் தளபதி பொறுப்பில் இருந்து விலகிய பொன்சேகா, 2010-ம் ஆண்டு ஜனாதிபதி பதவிக்கான தேர்தலில், ராஜபக்சேவுக்கு எதிராக போட்டியிட்டு தோல்வியை தழுவினார். 

அதன் பிறகு ராஜபக்சே அரசினால் பொன்சேகா பழிவாங்கப்பட்டார். அவருக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதுடன், அவரது குடியுரிமை உள்பட அனைத்து சலுகைகளும் பறிக்கப்பட்டன. 

தற்போது நடந்த அதிபர் தேர்தலில் ராஜபக்சே தோல்வி அடைந்தார். சிறிசேனா தலைமையில் புதிய அரசு பொறுப்பேற்றது. 

ராஜபக்சே அரசால் பழிவாங்கப்பட்ட முன்னாள் ராணுவ தளபதி சரத் பொன்சேகாவுக்கு எதிரான அனைத்து குற்றச்சாட்டுகளையும் வாபஸ் பெறுவதாகவும், அவரை விடுதலை செய்யுமாறும், ஜனாதிபதி சிறிசேனா அதிரடி அறிவிப்பை நேற்று வெளியிட்டார். இதன் அடிப்படையில் சரத் பொன்சேகாவுக்கு மீண்டும் பதவி வழங்கப்படுகிறது. ஏற்கனவே அவர் பெற்ற பட்டங்கள், பதக்கங்கள், ஓய்வூதியம் ஆகியவற்றை மீண்டும் பெறுகிறார். 

இதற்கிடையே பதவி இழந்த ராஜபக்சேவுக்கு ஆதரவாக செயல்பட்டதாக, அந்த நாட்டின் தலைமை நீதிபதி மொகான் பீரிஸ் மீது குற்றச்சாட்டு எழுந்தது. அவர் சட்டவிரோதமான முறையில் பதவி வகித்து வருவதாகவும் அந்த நாட்டின் சட்ட வல்லுனர்கள் சங்கம் குற்றம் சாட்டியது. 

இந்த நிலையில் தலைமை நீதிபதி பதவியில் இருந்து விலகுமாறு, மொகான் பீரிசுக்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்கே உத்தரவிட்டார். இதை ஏற்றுக்கொண்டு பதவி விலகுவதாக மொகான் பீரிஸ் உறுதி அளித்துள்ளார். இந்த தகவலை சுகாதாரத்துறை மந்திரி ராஜித சேனாரத்ன, கொழும்புவில் நேற்று நடந்த ஒரு கூட்டத்தில் வெளியிட்டார்

No comments:

Post a Comment