Wednesday, 21 January 2015

ஸ்ரீரங்கம் தொகுதிக்கு போலீஸ் பார்வையாளராக அசாம் ஐ.பி.எஸ். அதிகாரி வருகை

ஸ்ரீரங்கம் தொகுதிக்கு போலீஸ் பார்வையாளராக அசாம் ஐ.பி.எஸ். அதிகாரி வருகைசென்னை, ஜன.22- 

சென்னையில் நிருபர்களுக்கு, சந்தீப் சக்சேனா அளித்த பேட்டி வருமாறு:- 

ஸ்ரீரங்கம் தொகுதி இடைத்தேர்தலுக்கான செலவீன பார்வையாளராக ஐ.ஆர்.எஸ். அதிகாரி ஸ்ரீதரதோரா ஏற்கனவே வந்துள்ளார். 22-ந் தேதி பொதுப்பார்வையாளராக ஐ.ஏ.எஸ். அதிகாரி பல்கார் சிங் வருகிறார். இவர்கள் தவிர, போலீஸ் பார்வையாளராக அசாமைச் சேர்ந்த ஐ.பி.எஸ். அதிகாரி வினோத்குமார் இந்த வாரத்தில் வந்து சேருவார். இவர் 1997-ம் ஆண்டு ஐ.பி.எஸ். பணியில் சேர்ந்தவர் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை மற்றும் அதன் தொடர்புடைய பிரச்சினை குறித்து அவர் பார்வையிடுவார். 

அங்கு தற்போது சோதனைச் சாவடிகள் மூலம் வாகன தணிக்கை நடைபெற்று வருகிறது. பறக்கும் படையும் பல்வேறு இடங்களில் சோதனை செய்து வருகிறது. அதன் எண்ணிக்கையை இன்னும் உயர்த்தவில்லை. தேர்தல் தொடர்பான புகார்கள் மற்றும் தகவல்களை 1950 என்ற இலவச எண்ணுக்கு அளிக்கலாம். பொதுவாக நகர்ப்புறங்களில் ஓட்டுப்பதிவு சதவீதம் குறைவாக உள்ளது. எனவே அங்குள்ள மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படும் வகையில், ‘ஸ்வீப்’ என்ற அறிவுறுத்தல் திட்டத்தை தொடங்கவுள்ளோம். தேசிய வாக்காளர் தினத்துக்குப்பிறகு அதுபற்றி திட்டமிடப்படும். 

இந்த இடைத்தேர்தலில் எந்தெந்தத் திட்டங்களை ஸ்ரீரங்கம் தொகுதிக்குள் நடத்தக்கூடாது, எந்தெந்தத் திட்டங்களை அது அமைந்துள்ள திருச்சி, புதுக்கோட்டை மாவட்டங்களில் நடத்தக்கூடாது என்பது பற்றி ஏற்கனவே அறிவித்துள்ளோம். அந்த வகையில், அந்தத் தொகுதியில் அம்மா திட்டத்தை (வருவாய்த்துறை மூலம் அரசு சேவைகள் அளிக்கும் திட்டம்) செயல்படுத்தக்கூடாது. இலவச வேட்டி, சேலைகளை வழங்கக்கூடாது. குறை தீர் முகாம்களை அங்கு நடத்தக்கூடாது. இதற்கான உத்தரவை இந்திய தேர்தல் கமிஷன் பிறப்பித்துள்ளது. ஆனால் டெங்கு கொசு ஒழிப்பு திட்டங்கள், குடியரசு தின விழாக்கள் போன்றவற்றை நடத்த தடையில்லை. 

இந்த இடைத்தேர்தலின்போது தேர்தல் நடத்தை விதிமுறைகள் அனைத்தும் சரியாக பின்பற்றப்படுகிறதா என்பதை கண்காணிப்பதற்காக மண்டல அளவில் 31 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், இரண்டு சிறப்புப்படையும், ஒரு பறக்கும் படையும், வீடியோ கேமராவுடனான படப்பிடிப்புப் படையும் கொண்ட குழுவும் அமைக்கபட்டுள்ளது. தேர்தலின்போது பொதுச்சுவர்களிலும், தனியாரின் சுவர்களிலும் பிரசார விளம்பரம் செய்யத் தடை உள்ளது. 

பொது இடங்களில் இதை மீறியது தொடர்பாக 10 வழக்குகளும், தனியார் சுவர்களில் அனுமதி பெறாமல் விளம்பரம் செய்ததாக 260 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டு, மாவட்ட நிர்வாகத்தால் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன. 

இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment