Monday, 30 December 2013

இலங்கை கடற்படையால் கைதான 249 தமிழக மீனவர்களையும் விடுவிக்க நடவடிக்கை: டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை, டிச.30-

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- 

வங்கக்கடலில் மீன் பிடித்துக்கொண்டிருந்த புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் மற்றும் ஜெகதாப்பட்டினத்தை சேர்ந்த 22 மீனவர்களை சிங்களப்படை நேற்று நள்ளிரவில் கைது செய்துள்ளது. இலங்கை நீதிமன்றத்தில் இன்று நேர்நிறுத்தப்பட்ட அவர்கள், பின்னர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

தமிழக மீனவர்கள் வங்கக்கடலில் மீன்பிடிக்க செல்லும் போதெல்லாம் சிங்கள கடற்படையினரால் கைது செய்யப்படுவது வாடிக்கையாகி வருகிறது. தமிழக மீனவர்கள் நமது கடல் எல்லைக்குள் மீன் பிடித்தாலும், இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து அவர்களை கைது செய்வது சிங்களப்படையின் வழக்கமாகி விட்டது. 

இப்போதும் இந்திய கடல் எல்லைக்குள் மீன்பிடித்துக்கொண்டிருந்த மீனவர்களை தான் சிங்கள படையினர் கைது செய்துள்ளனர். இந்தியாவின் இறையாண்மைக்கு சவால் விடும் வகையில் இலங்கைப்படை நடத்தியுள்ள இந்த கைது நடவடிக்கை கடுமையாக கண்டிக்கத்தக்கதாகும். 

நாகப்பட்டினம், புதுக்கோட்டை, ராமநாதபுரம் மற்றும் காரைக்கால் மாவட்டங்களை சேர்ந்த 227 மீனவர்கள் ஏற்கனவே இலங்கைக் கடற்படையால் கைது செய்யப்பட்டு கடந்த சில மாதங்களாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். தமிழக மீனவர்களுக்கு சொந்தமான 77 படகுகளும் இலங்கை அரசால் பறிமுதல் செய்யப்பட்டிருக்கின்றன. 

இந்திய, இலங்கை மீனவர்கள் எதிர்பாராதவிதமாக சர்வதேச கடல் எல்லையை தாண்டி வந்து மீன்பிடித்ததாக கைது செய்யப்பட்டால் மனிதநேய அடிப்படையில் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று இருநாட்டு அரசுகளும் உடன்பாடு செய்துள்ளன. இதை இந்தியா மதித்து செயல்படுத்தி வரும் நிலையில், இலங்கையோ உடன்பாட்டை மீறி தமிழக மீனவர்களை குறைந்தது 3 மாதங்கள் சிறையில் அடைக்கும் அணுகுமுறையை கடைபிடித்து வருகிறது.

ஏற்கனவே கைது செய்யப்பட்ட மீனவர்கள் அனைவரையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்கும்படி பிரதமர் மன்மோகன்சிங்கிடம் தமிழக மீனவர்களின் பிரதிநிதிகள் நேற்று தான் கோரிக்கை விடுத்தனர். இலங்கை அரசின் செயலுக்கு கண்டனம் தெரிவித்த பிரதமர், கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உத்தரவாதம் அளித்திருந்தார். இந்த நிலையில் மேலும் 22 மீனவர்களை, அவர்களுக்கு சொந்தமான 6 படகுகளுடன் இலங்கை அரசு கைது செய்திருப்பதை பார்க்கும்போது இந்திய அரசை இலங்கை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை என்பது தெளிவாகிறது.

இலங்கை அரசின் இத்தகைய போக்கை தொடர அனுமதித்தால் அது இந்தியாவின் பாதுகாப்புக்கே அச்சுறுத்தலாக அமைந்து விடும். எனவே, இனியும் தமிழக மீனவர்களை கைது செய்தால் மிக மோசமான விளைவுகள் ஏற்படும் என்று இலங்கை அரசை மத்திய அரசு எச்சரிக்க வேண்டும். 

அதுமட்டுமின்றி, இதுவரை கைது செய்யப்பட்டுள்ள 249 தமிழக மீனவர்களையும், 83 விசைப்படகுகளுடன் உடனடியாக விடுதலை செய்யும்படி இலங்கை அரசுக்கு ஆணையிட வேண்டும். 

இவ்வாறு அறிக்கையில் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment