Monday, 30 December 2013

தர்மபுரியில் மீண்டும் காதல் திருமணத்தால் பதட்டம்: போலிஸ் குவிப்பு!

 தர்மபுரியில் இளவரசன்-திவ்யா காதல் திருமணத்தால் தலித்களின் வீடுகள் தீவைத்து எரிக்கப்பட்டன.
வாகனங்கள் சூறையாடப்பட்டன. இதனால் மனம் நொந்து இளவரசனிடமிருந்து திவ்யா பிரிந்து சென்றார். தொடர்ந்து, இளவரசன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். அதன் பிறகு தர்மபரியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
ஏற்கெனவே நடந்த இச்சம்பவங்களின் வடு மறையும் முன்னரே, தற்போது எம்.ஏ.பி.எட் படித்து ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற்று ஆசிரியர் பணிக்கு காத்திருக்கும் ஒருவருக்கும், இளம்பெண் ஒருவருக்கும் காதல்-கலப்பு திருமணம் செய்ததால் இண்டு காலனியில் மீண்டும் மோதல் உருவாகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இளம் பெண்ணை ஒப்படைத்து விடும்படியும், அவர் பாட்டி வீட்டுக்குச் சென்று வந்ததாக ஊரில் சொல்லி சமாளித்து விடுவதாக கூறியும் அந்த இளம்பெண்ணை மாப்பிள்ளை வீட்டார் திருப்பி அனுப்பவில்லை. மாப்பிள்ளையின் உறவினர் காவல்துறை துணை ஆய்வாளராக இருக்கிறார்.
அவர் காதல்-கலப்பு மணம் செய்த ஜோடியை பிரிக்க கூடாது என்று கூறியிருக்கிறார். இதனால் இரண்டு காலனிகளுக்கிடையில் மீண்டும் மோதல் உருவாகும் சூழ்நிலை ஏற்பட்டு பதட்டம் நிலவுகிறது. மோதலை தடுக்க அங்கு காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

பா.ஜ., கூட்டணியில் தே.மு.தி.க.,வுக்கு 14 'சீட்!': கந்தன் கோவிலில் பிராத்தனை



பா.ஜ., - தே.மு.தி.க., பேச்சுவார்த்தையில், உடன்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரியவந்து உள்ளது. 18 தொகுதி கள் கேட்ட, தே.மு.தி.க.,வுக்கு, 14 தொகுதிகள் கொடுப்பதாக, பா.ஜ., அளித்த உத்தரவாதத்தை ஏற்று, இரு கட்சிகளுக்கும் இடையே, உடன்பாடு ஏற்பட்டுள்ளது எனவும், கூட்டணி முடிவை, அதிகாரப்பூர்வமாக இன்று, தே.மு.தி.க., அறிவிக்கலாம் என, பா.ஜ., வட்டாரம் நம்பிக்கை தெரிவித்தது.
கூட்டணி பேச்சு சுமுகமாக முடிந்ததை அடுத்து, தமிழக பா.ஜ., தலைவர், பொன்.ராதாகிருஷ்ணன், நேற்று திருச்செந்தூர் சென்று, முருகனை வழிபட்டு திரும்பியுள்ளார். இந்த கூட்டணிக்கு, காரணகர்த்தாவாக செயல்பட்ட, காந்திய மக்கள் கட்சி தலைவர், தமிழருவி மணியன், திருவண்ணாமலை சென்று, அருணாச்சலேஸ்வரரை வழிபட்டு உள்ளார். தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த், மருத்துவ சிகிச்சைக்காக, சிங்கப்பூரில் தங்கியுள்ளார். அவரது ஒப்புதலின் பேரில், அவரது மைத்துனர், சுதீஷுடன், பா.ஜ., தலைவர்கள், பொன்.ராதாகிருஷ்ணன், மோகன்ராஜூலு ஆகியோர், தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தினர். நேற்று முன்தினம் நடத்திய பேச்சில், பா.ஜ., தரப்பில், 'தே.மு.தி.க.,வுக்கு, 14 தொகுதிகளுக்கு மேல் தர இயலாது' என்பதை, திட்டவட்டமாக தெரிவித்து உள்ளனர். அதை ஏற்று, கூட்டணி முடிவை அறிவிக்கும்படியும், பா.ஜ., தலைவர்கள் வலியுறுத்தி உள்ளனர். இதையடுத்து, 'சிங்கப்பூரில் உள்ள விஜயகாந்திடம், இந்த தகவலை தெரிவித்து, அவரது ஒப்புதலுடன், நாளை (27ம் தேதி) அறிவிப்பு வெளியிடுவோம்' என, பா.ஜ., தலைவர்களிடம், சுதீஷ் உறுதி அளித்துள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி, தே.மு.தி.க., தன் முடிவை, இன்று அறிவிக்கும் என, எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. பா.ஜ., அணியில் சேர்வதற்கான பேச்சுவார்த்தையை துவங்கிய, தே.மு.தி.க., முதலில், 20 தொகுதிகள் கேட்டு உள்ளது. பின், அது, 18, 16 என, குறைந்தது. அதேசமயம், பா.ஜ., தரப்பில், 12 தொகுதிகள் என்ற நிலையிலேயே, பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வந்தது.

இலங்கை கடற்படையால் கைதான 249 தமிழக மீனவர்களையும் விடுவிக்க நடவடிக்கை: டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை, டிச.30-

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- 

வங்கக்கடலில் மீன் பிடித்துக்கொண்டிருந்த புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் மற்றும் ஜெகதாப்பட்டினத்தை சேர்ந்த 22 மீனவர்களை சிங்களப்படை நேற்று நள்ளிரவில் கைது செய்துள்ளது. இலங்கை நீதிமன்றத்தில் இன்று நேர்நிறுத்தப்பட்ட அவர்கள், பின்னர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

தமிழக மீனவர்கள் வங்கக்கடலில் மீன்பிடிக்க செல்லும் போதெல்லாம் சிங்கள கடற்படையினரால் கைது செய்யப்படுவது வாடிக்கையாகி வருகிறது. தமிழக மீனவர்கள் நமது கடல் எல்லைக்குள் மீன் பிடித்தாலும், இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து அவர்களை கைது செய்வது சிங்களப்படையின் வழக்கமாகி விட்டது. 

இப்போதும் இந்திய கடல் எல்லைக்குள் மீன்பிடித்துக்கொண்டிருந்த மீனவர்களை தான் சிங்கள படையினர் கைது செய்துள்ளனர். இந்தியாவின் இறையாண்மைக்கு சவால் விடும் வகையில் இலங்கைப்படை நடத்தியுள்ள இந்த கைது நடவடிக்கை கடுமையாக கண்டிக்கத்தக்கதாகும். 

நாகப்பட்டினம், புதுக்கோட்டை, ராமநாதபுரம் மற்றும் காரைக்கால் மாவட்டங்களை சேர்ந்த 227 மீனவர்கள் ஏற்கனவே இலங்கைக் கடற்படையால் கைது செய்யப்பட்டு கடந்த சில மாதங்களாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். தமிழக மீனவர்களுக்கு சொந்தமான 77 படகுகளும் இலங்கை அரசால் பறிமுதல் செய்யப்பட்டிருக்கின்றன. 

இந்திய, இலங்கை மீனவர்கள் எதிர்பாராதவிதமாக சர்வதேச கடல் எல்லையை தாண்டி வந்து மீன்பிடித்ததாக கைது செய்யப்பட்டால் மனிதநேய அடிப்படையில் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று இருநாட்டு அரசுகளும் உடன்பாடு செய்துள்ளன. இதை இந்தியா மதித்து செயல்படுத்தி வரும் நிலையில், இலங்கையோ உடன்பாட்டை மீறி தமிழக மீனவர்களை குறைந்தது 3 மாதங்கள் சிறையில் அடைக்கும் அணுகுமுறையை கடைபிடித்து வருகிறது.

ஏற்கனவே கைது செய்யப்பட்ட மீனவர்கள் அனைவரையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்கும்படி பிரதமர் மன்மோகன்சிங்கிடம் தமிழக மீனவர்களின் பிரதிநிதிகள் நேற்று தான் கோரிக்கை விடுத்தனர். இலங்கை அரசின் செயலுக்கு கண்டனம் தெரிவித்த பிரதமர், கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உத்தரவாதம் அளித்திருந்தார். இந்த நிலையில் மேலும் 22 மீனவர்களை, அவர்களுக்கு சொந்தமான 6 படகுகளுடன் இலங்கை அரசு கைது செய்திருப்பதை பார்க்கும்போது இந்திய அரசை இலங்கை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை என்பது தெளிவாகிறது.

இலங்கை அரசின் இத்தகைய போக்கை தொடர அனுமதித்தால் அது இந்தியாவின் பாதுகாப்புக்கே அச்சுறுத்தலாக அமைந்து விடும். எனவே, இனியும் தமிழக மீனவர்களை கைது செய்தால் மிக மோசமான விளைவுகள் ஏற்படும் என்று இலங்கை அரசை மத்திய அரசு எச்சரிக்க வேண்டும். 

அதுமட்டுமின்றி, இதுவரை கைது செய்யப்பட்டுள்ள 249 தமிழக மீனவர்களையும், 83 விசைப்படகுகளுடன் உடனடியாக விடுதலை செய்யும்படி இலங்கை அரசுக்கு ஆணையிட வேண்டும். 

இவ்வாறு அறிக்கையில் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

இந்தியாவில் பத்திரிகையாளர்களுக்கு பாதுகாப்பில்லை!

லண்டன் : பத்திரிகையாளர்களுக்கு பாதுகாப்பில்லாத நாடாக இந்தியா திகழ்வதாக ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது.
 சர்வதேச தகவல் பாதுகாப்பு அமைப்பு என்பது லண்டனை தலைமையகமாக கொண்டுள்ளது. இந்த அமைப்பு பத்திரிகையாளர்களின் பாதுகாப்பு சம்பந்தமான விழிப்புணர்வினை ஏற்படுத்துவதோடு, அவர்களுக்கு ஏற்படும் இன்னல்களைக் களைவதற்காகவும் செயல்படுகிறது. தற்போது இந்த அமைப்பு பத்திரிகையாளர்களின் பாதுகாப்பு குறித்த ஆய்வொன்றினை வெளியிட்டுள்ளது.
இந்த ஆய்வின் படி இந்தியா, பத்திரிகையாளர்களுக்கு ஆபத்தான நாடுகளில் மூன்றாவது இடத்தினை பெற்றுள்ளது. இந்தியாவில் இந்த வருடம் 13 பத்திரிகையாளர்கள் இறந்துள்ளதாகவும் அதில் 7 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும் இந்த ஆய்வு தெரிவிக்கிறது. இந்தக் கொலைகள் சம்பந்தமாக முழுமையான விசாரணைகளும் நடைபெறவில்லை என இந்த அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது.
போர் நடைபெற்று வரும் சிரியா ஆபத்தான நாடுகளில் முதலாவதாகவும், பிலிப்பைன்ஸ் இரண்டாவதாகவும் இடம் பெற்றுள்ளன.

Saturday, 28 December 2013

அ.தி.மு.க. விருப்ப மனு மூலம் ரூ.11 கோடியே 34 லட்சம் வசூல்: தலைமை கழகம் அறிவிப்பு

சென்னை, டிச. 28–
அ.தி.மு.க. தலைமை கழகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:–
அ.தி.மு.க. பொதுச் செயலாளர் முதல்–அமைச்சர் ஜெயலலிதா விரைவில் நடைபெற உள்ள நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தலில் தமிழ் நாடு மற்றும் புதுச்சேரிக்கு உட்பட்ட 40 நாடாளுமன்ற மக்களவைத் தொகுதிகளிலும் கழகத்தின் சார்பில் வேட்பாளர்களாகப் போட்டியிட விரும்புகின்ற கழக உடன்பிறப்புகள் தங்களுடைய வேட்பு மனுக்களை 19.12.2013 முதல் 27.12.2013 வரை தலைமைக் கழகத்தில் வழங்கலாம் என அறிவிப்பு வெளியிட்டு இருந்தார். அதன்படி 27.12.13 வரை 4,537 வேட்பு மனுக்கள் பெறப்பட்டு உள்ளன.
இதில் பொதுச் செயலாளர் முதல்–அமைச்சர் ஜெயலலிதா, தங்களது தொகுதியில் போட்டியிட வேண்டும் என்று விருப்பம் தெரிவித்து தமிழ்நாட்டில் 1,171 வேட்பு மனுக்களையும், புதுச்சேரியில் 4 வேட்பு மனுக்களையும், ஆக மொத்தம் 1,175 வேட்பு மனுக்களை கழக உடன்பிறப்புகள் வழங்கி உள்ளனர்.
அதேபோல் கழக உடன்பிறப்புகள் தாங்கள் போட்டியிடுவதற்கு வாய்ப்பு கோரி தமிழ்நாட்டில் 3,343 வேட்பு மனுக்களையும், புதுச்சேரி மாநிலத்தில் 19 வேட்பு மனுக்களையும் வழங்கி உள்ளனர்.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரிக்கு உட்பட்ட 40 நாடாளுமன்ற மக்களவை தொகுதிகளிலும், கழகத்தின் சார்பில் வேட்பாளர்களாக போட்டியிட வாய்ப்பு கோரி மொத்தம் 4,537 வேட்பு மனுக்கள் பெறப்பட்டு உள்ளன. இதன்மூலம் வேட்பு மனு கட்டணமாக 11 கோடியே 34 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் பெறப்பட்டு உள்ளது என்பதை தெரித்துக் கொள்கிறோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

CLOSE

அண்மை - சென்னை

section1

வரலாற்று சின்னமாய் திகழும் பாம்பன் பாலத்துக்கு வருகிற பிப்ரவரி 24–ந்தேதி 100 வயது

சென்னை, டிச. 28–சுற்றுலா பயணிகளுக்கும், புனித யாத்திரை செல்பவர்களுக்கும் மிகச் சிறந்த இடம் ராமேஸ்வரம்.ராமேஸ்வரம் என்றாலே 

கூடங்குளம் குடிநீர் திட்டத்திற்கு ரூ.68.10 கோடி ஒதுக்கீடு

சென்னை:கூடங்குளம் அணுமின் நிலையத்தை சுற்றியுள்ள பகுதிகளுக்கு, குடிநீர் வழங்க, 68.10 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது.கூடங்குளம் அணுமின் நிலையத்தை சுற்றியுள்ள, ராதாபுரம், வள்ளியூர் ஒன்றியங்களுக்குட்பட்ட, கூடங்குளம் உட்பட, 13 ஊராட்சிகளில் வசிக்கும் மக்களுக்கு, தாமிரபரணி ஆற்று நீர் வழங்க, கூட்டுக் குடிநீர் திட்டத்தை செயல்படுத்த, முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இதற்காக, 68.10 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆண்டு பராமரிப்புக்காக, 87 லட்சம் ரூபாய்க்கு, நிர்வாக ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம், 13 ஊராட்சிகளில் உள்ள, 100 ஊரக குடியிருப்புகளில், நபர் ஒருவருக்கு, 55 லிட்டர் தண்ணீர் கிடைப்பது, உறுதி செய்யப்படும்.
Click Here

புத்தாண்டு.. மூணு நாளைக்கு 'கடைய' மூடுங்க! - ராமதாஸ்

சென்னை: புத்தாண்டையொட்டி இரண்டு நாட்களில் மட்டும் ரூ.250 கோடிகளுக்கு மது விற்பனை செய்ய தமிழக அரசு இலக்கு நிர்ணயித்திருப்பதாகவும், எனவே புத்தாண்டுக் கொண்டாட்டங்களின் போது விபத்து உள்ளிட்ட அசம்பாவிதங்களைத் தவிர்க்க டிசம்பர் 31 முதல் வரும் ஜனவரி 2ம் தேதி வரை மூன்று நாட்களுக்கு மதுக்கடைகளை மூட வேண்டும் என பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- ஆங்கிலப் புத்தாண்டைக் கொண்டாட மக்கள் தயாராகிவரும் நிலையில், டிசம்பர் 31, ஜனவரி 1 ஆகிய இரு நாட்களில் மட்டும் ரூ.250 கோடிகளுக்கு மது விற்பனை செய்ய தமிழக அரசு இலக்கு நிர்ணயித்திருக்கிறது. தாராளமாக மது விற்பனை செய்ய வசதியாக ஒவ்வொரு கடையிலும் 15 நாட்களுக்கு தேவையான மது இருப்பு வைக்கப்பட வேண்டும் என்றும் அரசு அறிவுறுத்தியிருக்கிறது. தமிழகத்தில் உள்ள நியாயவிலைக் கடைகளில் மக்களுக்குத் தேவையான அரிசி, எண்ணெய், பருப்பு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை தேவையான அளவுக்கு இருப்பு வைப்பதில் ஆர்வம் காட்டாத அரசு, மது வகைகளை இருப்பு வைப்பதில் மட்டும் ஆர்வம் காட்டி வருவது கண்டிக்கத்தக்கது. ஆங்கிலப் புத்தாண்டை கொண்டாடும் வழக்கம் தமிழகத்தில் அதிகரித்த பிறகுதான் இளைஞர்கள் மது அருந்தும் வழக்கமும் அதிகரித்திருப்பதாக அண்மையில் நடத்தப்பட்ட ஆய்வுகள் தெரிவிக்கின்றன. 14 முதல் 19 வயது வரையுள்ள சிறுவர்கள் மற்றும் இளைஞர்களில் 65 விழுக்காட்டினர் மது அருந்தும் பழக்கத்திற்கு ஆளாகியிருக்கிறார்கள் என்று அசோசெம் அமைப்பு நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. அதுமட்டுமின்றி, 20 வயது முதல் 29 வயது வரையுள்ளவர்களில் 25 விழுக்காட்டினர் புத்தாண்டுக் கொண்டாட்டங்களின் போது மது அருந்துவதற்காக மட்டும் ரூ.1000 முதல் ரூ.10,000 வரை செலவழிக்கிறார்கள் என்றும் இந்த ஆய்வுகளில் கண்டறியப்பட்டிருக்கிறது. இந்த தகவல்கள் மிகவும் அதிர்ச்சி அளிக்கின்றன என்ற போதிலும் இந்த உண்மைகளை எவரும் மறுக்க முடியாது. கடந்த 10 ஆண்டுகளாக இந்தியாவிலேயே மிக அதிக அளவில் சாலை விபத்துக்கள் நடைபெறும் மாநிலமாகவும், அதிக உயிரிழப்புகள் ஏற்படும் மாநிலமாகவும் தமிழகம் திகழ்கிறது. அதிலும் குறிப்பாக புத்தாண்டு கொண்டாட்டங்களின் போதுதான் அதிக அளவில் விபத்துக்கள் ஏற்படுகின்றன. கடந்த சில மாதங்களில் சென்னையில் சாலையோர நடைபாதைகளில் இருந்த குழந்தைகள் உள்ளிட்டோர் உயிரிழக்கக் காரணமான 2 பயங்கர சாலை விபத்துக்களுக்கு காரணம் மதுபோதை தான் என்பது நிரூபிக்கப்பட்டிருக்கிறது. அதேபோல், புத்தாண்டையொட்டி நிகழும் பாலியல் குற்றங்களுக்கும் மது தான் காரணமாக விளங்குகிறது. இத்தனைத் தீமைகளுக்கும் காரணமான மதுவை கட்டுப்படுத்துவது தான் மக்கள் நலன் விரும்பும் ஓர் அரசின் கடமையாக இருக்க வேண்டும். ஆனால், மக்களை பாதுகாக்க வேண்டிய அரசே புத்தாண்டின் போது இலக்கு நிர்ணயம் செய்து மதுவை விற்பனை செய்வது வெட்கக்கேடான ஒன்றாகும். புத்தாண்டுக் கொண்டாட்டங்களின் போது குடித்துவிட்டு வாகனம் ஓட்டக் கூடாது என்று ஒருபுறம் அறிவுறுத்தும் அரசு, இன்னொரு புறம் மதுக்கடைகளை திறந்து வைத்து, இலக்கு நிர்ணயித்து மது விற்பனை செய்வது முரண்பாடுகளின் உச்சமாகும். மது அருந்துவதை வழக்கமாகக் கொண்டவர்கள் அதிகம் வாழும் அமெரிக்கா, நியூசிலாந்து உள்ளிட்ட நாடுகளில் கூட புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது விபத்துக்களைத் தவிர்க்கவும், மற்றவர்களுக்கு தொல்லையில்லாத கொண்டாட்டங்களை உறுதி செய்யவும் மது விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது. அவ்வாறு இருக்கும் போது கலாச்சாரத்திற்கும், ஒழுங்குக்கும் பெயர்பெற்ற தமிழ்நாட்டில் அரசே அதிக அளவில் மது விற்பனை செய்வது சரியல்ல. எனவே, மக்களின் நலன்கருதி புத்தாண்டையொட்டி டிசம்பர் 31 முதல் ஜனவரி 2 வரை மூன்று நாட்களுக்கு மதுக்கடைகளை அரசு மூட வேண்டும்" என இவ்வாறு அவர் வலியுறுத்தியுள்ளார்.


டெல்லியின் முதல் இளம் முதல்வராக பதவியேற்றார் அரவிந்த் கேஜ்ரிவால்: 6 அமைச்சர்களும் பதவியேற்பு