Monday, 13 November 2017

மாதவரத்தில் பா.ஜனதா பிரமுகர் தூக்குப்போட்டு தற்கொலை

செங்குன்றம்,
சென்னையை அடுத்த மாதவரம் மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் பாலாஜி(வயது 43). இவர் பா.ஜனதாவில் திருவள்ளூர் மாவட்ட அமைப்பு சாரா அணி செயலாளராக இருந்து வந்தார். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த கபாலி, அசோக் என்பவர்களுக்கும் கடந்த 10 நாட்களுக்கு முன்பு தகராறு ஏற்பட்டது.
கபாலி, அசோக்கும் பாலாஜியை உருட்டு கட்டையால் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் பலத்த காயம் அடைந்த பாலாஜி சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இது சம்பந்தமாக மாதவரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கபாலியை கைது செய்தனர்.
இந்த நிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த பாலாஜி கடந்த வாரம் வீடு திரும்பினார். அன்றிலிருந்து அவருக்கு தலைவலி அதிகமானதாக தெரிகிறது. இந்த மனமுடைந்த பாலாஜி நேற்று நண்பகல் வீட்டில் மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுபற்றி தகவல் அறிந்து மாதவரம் இன்ஸ்பெக்டர் செல்வக்குமார் சம்பவ இடத்திற்கு சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.
மேலும், இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.

மாமூல் தர மறுத்த பட்டதாரி வாலிபர் மீது கொதிக்கும் பாலை ஊற்றிய கும்பல் ஒருவர் கைது

செங்குன்றம்,
சென்னை அடுத்த செங்குன்றம் பாடியநல்லூர் மருதுபாண்டி நகரை சேர்ந்தவர் லட்சுமணன். இவர் புழல் பகுதியில் டீக்கடை நடத்தி வருகிறார். புழல் பகுதியை சேர்ந்த கண்ணன், டிப்பு, சங்கர் உள்பட 4 பேர் அந்த கடைக்கு சென்று அடிக்கடி மாமூல் கேட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இந்தநிலையில், லட்சுமணனின் மகன் பி.காம் பட்டதாரியான விக்னேஷ் (25) டீக்கடையில் இருந்தபோது அவரிடம் சென்று 4 பேரும் மாமூல் கேட்டதாக தெரிகிறது. ஆனால் அவர் கொடுக்க மறுத்துவிட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த 4 பேரும் கடையில் கொதித்து கொண்டிருந்த பாலை எடுத்து விக்னேஷ் மீது ஊற்றினர்.
இதில் தீக்காயம் அடைந்த அவர் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து புழல் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ்பாபு மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து சங்கரை கைது செய்தனர்.
பால் ஊற்றியபோது டிப்புவுக்கும் தீக்காயம் ஏற்பட்டது. அவரும் கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். தலைமறைவாக உள்ள கண்ணன் ஆந்திர மாநிலத்தில் சட்டப்படிப்பு படித்து வருகிறார். அவரையும், அவரது நண்பரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

போலி ஆவணங்கள் மூலம் ‘பாஸ்போர்ட்’ பெற முயற்சி சென்னையில் 5 பேர் கைது

சென்னை,

இலங்கையை சேர்ந்தவர் சஞ்சீவி என்ற சுதர்சன் (வயது 29). இவர் கன்னியாகுமரி மாவட்டம் பெருமாள்புரத்தில் தற்போது வசிக்கிறார். சுதர்சன், தன்னுடைய நண்பர்களான சபீக் அகமது(29), முகமது சலீம்(60), குமார்(30), பெர்னாட் சேவியர்(67) ஆகியோரின் உதவியுடன் போலி ஆவணங்கள் மூலம் பாஸ்போர்ட் பெற முயற்சிப்பதாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதுதொடர்பாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கும்படி, போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டார். கூடுதல் கமிஷனர் கணேசமூர்த்தி, துணை கமிஷனர் செந்தில்குமார் ஆகியோர் மேற்பார்வையில் தனி போலீஸ் படை அமைக்கப்பட்டு ரகசியமாக விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

சஞ்சீவி சென்னை ஆழ்வார்திருநகரில் வசிப்பதாக போலி முகவரி கொடுத்து ‘பாஸ்போர்ட்’ பெற முயற்சித்தார். போலீஸ் விசாரணையில் அங்கு அவர் வசிக்கவில்லை என்பது தெரியவந்தது. மேலும், இவர்கள் மேற்கண்ட முகவரி மூலம் இருப்பிட சான்றிதழ், வாக்காளர் அடையாள அட்டை போன்ற ஆவணங்களை போலியாக தயாரித்து பாஸ்போர்ட் பெற விண்ணப்பித்து இருந்ததும் தெரிய வந்தது.

இதையொட்டி நேற்று சஞ்சீவி என்ற சுதர்சன், அவருடைய கூட்டாளிகள் சபீக் அகமது, முகமது சலீம், குமார், பெர்னாட் சேவியர் ஆகிய 5 பேரும் கைது செய்யப்பட்டனர். இவர்கள் நிறைய பேருக்கு போலி ஆவணங்கள் மூலம் பாஸ்போர்ட் பெற்றுக்கொடுக்க முயற்சி மேற்கொண்டதும் விசாரணையில் கண்டறியப்பட்டது. யாருக்காவது போலி ஆவணங்கள் மூலம் பாஸ்போர்ட் பெற்றுக்கொடுத்து இருக்கிறார்களா? என்றும் விசாரணை நடக்கிறது.
கைதானவர்களில் சபீக் அகமது தான் போலி ஆவணங்களை தயாரித்து கொடுத்து இருக்கிறார். குமாரும், பெர்னாட் சேவியரும் தரகர்களாக செயல்பட்டுள்ளனர் என்றும் கண்டறியப்பட்டுள்ளது.

குன்றத்தூரில், 4 வயது குழந்தை சாவில் திடீர் திருப்பம்: தண்ணீர் வாளியில் அமுக்கி கொலை

பூந்தமல்லி,
காஞ்சீபுரம் மாவட்டம் குன்றத்தூர் அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் தர்மலிங்கம் என்ற சரவணன்(வயது 32). வக்கீல். இவருடைய மனைவி ஜெயந்தி(30). இவர்களுக்கு திருமணமாகி 5 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. 4 வயதில் கோசிகா என்ற மகள் இருந்தாள். இவள், கோவூரில் உள்ள தனியார் பள்ளியில் எல்.கே.ஜி. படித்து வந்தாள்.
கருத்து வேறுபாடு காரணமாக கணவன்–மனைவி இருவரும் கடந்த 2 ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். ஜெயந்தி தனது மகளுடன் குன்றத்தூர் மூன்றாம் கட்டளையில் உள்ள தனது பெற்றோர் வீட்டில் வசித்து வருகிறார்.
வாரத்தில் 2 நாட்கள் மட்டும் தன்னுடன் மகள் இருக்க வேண்டும் என்று சரவணன் கூறினார். குழந்தையை வைத்தாவது இருவரும் ஒன்று சேரட்டும் என்ற எண்ணத்தில் ஜெயந்தியின் பெற்றோரும் வாரம் தோறும் கோசிகாவை சரவணன் வீட்டுக்கு அனுப்பி வைத்து வந்தனர்.
இதற்கிடையில் வக்கீல் சரவணனிடம், விவாகரத்து சம்பந்தமாக அரக்கோணத்தை சேர்ந்த ஆஷா(29) என்பவர் வந்தார். கருத்து வேறுபாட்டால் கணவரை பிரிந்து வாழும் அவருக்கு 8 வயதில் ஒரு மகன் உள்ளார். கணவரிடம் இருந்து விவாகரத்து பெற வக்கீல் சரவணனை அடிக்கடி வந்து சந்தித்து சென்றார். இதனால் அவர்களுக்குள் நெருக்கமான பழக்கம் ஏற்பட்டு, கள்ளக்காதலாக மாறியது. விவாகரத்து வழக்கு தொடர்பாக அடிக்கடி அரக்கோணம் சென்று விட்டு வரவேண்டும் என்பதால், தன்னுடன் தங்கும்படியும், மனைவியை பிரிந்து வாழும் தான், உன்னையே திருமணம் செய்து கொள்வதாகவும் கூறியதால் ஆஷா தனது மகனுடன் சரவணனுடன் ஒரே வீட்டில் வசித்து வந்தார்.
தற்போது ஆஷா கர்ப்பமாக உள்ளார். வெளி ஆட்களிடம் ஆஷாவை தனது வீட்டில் வேலை செய்யும் வேலைக்கார பெண் என்று கூறி உள்ளார்.
இந்தநிலையில் கடந்த வெள்ளிக்கிழமை சரவணன் மகள் கோசிகாவை பள்ளியில் இருந்து தனது வீட்டுக்கு அழைத்து வந்தார். திடீரென நேற்று முன்தினம் காலை வீட்டில் உள்ள தண்ணீர் வாளியில் கோசிகா தவறி விழுந்து விட்டதாக சரவணனுக்கு போன் மூலம் ஆஷா தகவல் தெரிவித்தார். பின்னர் அங்குள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது, குழந்தை கோசிகா ஏற்கனவே இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதுபற்றி ஜெயந்திக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஜெயந்தி மற்றும் அவருடைய பெற்றோர் மருத்துவமனைக்கு சென்று கோசிகாவின் உடலை பார்த்து கதறி அழுதனர்.
அப்போது மகளின் முகத்தில் காயங்கள் இருப்பதை கண்ட ஜெயந்தி, தனது மகளின் சாவில் சந்தேகம் இருப்பதாகவும், அவளை தனது கணவர் சரவணன், அவருடைய தந்தை மோகன் மற்றும் வீட்டு வேலைக்கார பெண் ஆஷா ஆகியோர் சேர்ந்து கொலை செய்து உள்ளனர் என்றும் குன்றத்தூர் போலீசில் புகார் செய்தார்.
இதையடுத்து போரூர் உதவி கமி‌ஷனர் கண்ணன், குன்றத்தூர் இன்ஸ்பெக்டர் சார்லஸ் ஆகியோர் குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். வீட்டில் குழந்தை தவறி விழுந்ததாக கூறிய தண்ணீர் வாளியை பார்த்தனர். அது சிறிய அளவில் இருந்தது. அதன் உள்ளே குழந்தை தவறி விழுந்து இருக்க வாய்ப்பு இல்லை என்று கருதிய போலீசார், குழந்தையின் தலையை பிடித்து தண்ணீர் வாளிக்குள் அமுக்கி கொலை செய்து இருப்பதை உறுதி செய்தனர்.
இது தொடர்பாக வீட்டில் இருந்தவர்களிடம் விசாரணை நடத்தினர். அப்போது சரவணனின் கள்ளக்காதலியான ஆஷா முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறினார். அவர் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. போலீசார் தொடர்ந்து துருவி, துருவி நடத்திய விசாரணையில், கோசிகாவை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். அவரை போலீசார் கைது செய்தனர். போலீசாரிடம் ஆஷா அளித்து உள்ள வாக்குமூலம் வருமாறு:–
எனது கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபட்டால் விவாகரத்து வாங்குவதற்காக சரவணனிடம் வந்தேன். அவருடைய பேச்சு எனக்கு பிடித்ததால் நெருங்கி பழகினேன். அவர் என்னை திருமணம் செய்துகொள்வதாக கூறியதால் எனது மகனுடன் அவரது வீட்டில் ஒன்றாக தங்கினேன். இதில் நான் கர்ப்பம் ஆனேன். சரவணனின் தாய் இறந்து விட்டதால் வீட்டில் உள்ள அவரது நகைகளை எல்லாம் எனக்கு போட்டு அழகு பார்ப்பார். இதனால் அவருடைய சொத்துகள் அனைத்துக்கும் வயிற்றில் வளரும் எனது குழந்தையே வாரிசு என்று நினைத்து இருந்தேன்.
ஆனால் சரவணன் தனது மகள் கோசிகாவை அடிக்கடி வீட்டுக்கு அழைத்து வருவதால் அவர் மனைவியுடன் மீண்டும் சேர்ந்து விடுவாரோ என்று கருதினேன். மேலும் சரவணன், அவருடைய தந்தை மோகன் இருவரும் இந்த சொத்துகள் முழுவதும் கோசிகாவுக்குத்தான் சேரும் என்று கூறி வந்தனர்.
இதனால் ஆத்திரம் அடைந்த நான், கோசிகாவால் எனது வயிற்றில் வளரும் குழந்தைக்கு சொத்து கிடைக்காமல் போய்விடுமோ? என்று கருதி, சொத்துக்கு இடையூறாக உள்ள கோசிகாவை தீர்த்துக்கட்ட முடிவு செய்தேன். நேற்று முன்தினம் சரவணனின் தாயாருக்கு நினைவு தினம். அதற்கு தேவையான பொருட்கள் வாங்க மோகன் கடைக்கு சென்று விட்டார். காலையிலேயே சரவணனும் வேலை வி‌ஷயமாக வெளியே சென்று விட்டார். எனது மகனை, என் தம்பியுடன் வெளியே அனுப்பி வைத்தேன்.
வீட்டில் கோசிகா மட்டும் தனியாக இருந்தாள். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அவளை கொலை செய்ய முடிவு செய்தேன். கோசிகாவின் தலை முடியை பிடித்து தரதரவென்று இழுத்துச்சென்று அங்கிருந்த தண்ணீர் வாளியில் அவளது முகத்தை அமுக்கினேன். இதில் கோசிகா, தண்ணீரில் மூச்சுத்திணறி அதே இடத்தில் இறந்து விட்டாள்.
இதையடுத்து எதுவும் தெரியாதது போல் சமையல் அறைக்கு சென்று விட்டேன். கடைக்கு சென்று விட்டு வீட்டுக்கு திரும்பி வந்த சரவணனின் தந்தை மோகன், பேத்தி கோசிகாவை எங்கே? என்று கேட்டார். நான் எனக்கு தெரியாது என்று கூறி விட்டேன். பின்னர் அவர், உள்ளே சென்று பார்த்தபோது தண்ணீர் வாளியில் கோசிகா முகம் மூழ்கிய நிலையில் இருப்பதைக்கண்டு அதிர்ச்சியில் அலறினார். பின்னர் அவளை மீட்டு போரூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது அவள் ஏற்கனவே இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்,
என் மீது யாருக்கும் சந்தேகம் வராது என்று நினைத்தேன். ஆனால் போலீசாரின் தொடர் விசாரணையில் நான் சிக்கிக்கொண்டேன். இவ்வாறு அவர் வாக்குமூலத்தில் கூறி இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.
கைதான ஆஷாவிடம் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். மேலும் குழந்தையின் தந்தையான வக்கீல் சரவணனிடமும் போலீசார் விசாரித்து வருகின்றனர். ஆனால் சரணவனின் தந்தை மோகனும் இதற்கு உடந்தையாக இருந்து உள்ளார். எனவே அவரையும் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஜெயந்தியின் பெற்றோர் போலீசாரிடம் வலியுறுத்தி உள்ளனர்.
பாட்டி இறந்த நாளிலேயே பேத்தியும் கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

சசிகலா உறவினர் ராவணனை சுற்றி புது சர்ச்சை: முதல்வர் அணியுடன் இணக்கத்தினால் வருமான வரி சோதனையில் தப்பினாரா?

சசிகலா குடும்ப உறவுகள், நட்புகள், சட்ட ஆலோசகர்கள் உள்ளிட்டோரின் வீடுகள் வருமான வரி அதிகாரிகளால் சோதனைக்கு உள்ளாக்கப்பட்ட நிலையில், இவரது எந்த ஒரு இருப்பிடத்திலும் சோதனை நடக்காதது ஆச்சரியமாக உள்ளது’.
இப்படியொரு எண்ணம் கோவை அதிமுகவினரிடையே எழுந்துள்ளது. இந்த பேச்சின் கதாநாயகர் சசிகலாவின் சித்தப்பா டாக்டர் கருணாகரனின் மருமகன் ராவணன். அதிமுக அரசியலில் முழுமையாக தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருந்த சசிகலா குடும்பத்தாரில் சோதனையில் சிக்காத சொற்ப நபர்களில் இவரும் ஒருவர் என்பதுதான் கட்சிக்காரர்கள் மத்தியில் பேசப்படும் செய்தி.
இதன் பின்னணி பற்றி தெரிந்து கொள்ளும் முன் ராவணன் குறித்த ஒரு ஃபிளாஷ்பேக்: ராவணனுக்கு கோவை, திருச்சி சாலையில் ராமநாதபுரம் ஐயர் ஆஸ்பத்திரி எதிரே சின்ன பங்களா உள்ளது. அதில் 1996-ம் ஆண்டு முதல் வசித்து வருகிறார். இங்கிருந்து மேற்கே 3 கி.மீ தூரம் உள்ள சுங்கம் பை-பாஸ் சாலையின் இடதுபுறம் ஒதுக்குப்புறமாக ஒரு குடோன் உண்டு. இந்த குடோனில் ஆரம்பத்தில் ஒரு ஆயில் கம்பெனி நடந்து வந்தது. அது பின்னர் கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு, நாமக்கல், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி என ஒட்டுமொத்த கொங்கு மண்டல அதிமுக முக்கிய நிர்வாகிகள் வந்து செல்லும் இடமாக மாறிப் போனது.
கட்சியின் முக்கிய நிர்வாகிகள் சிலர், சில நாட்கள் மட்டும் இங்கு வருவார்கள். வந்த சுவடு தெரியாமல் சில மணி நேரங்களில் சென்றுவிடுவார்கள். அவர்கள் அப்போது சந்தித்ததெல்லாம் ராவணனைத்தான் என பேசப்படுவதுண்டு. 2003-04-ம் ஆண்டுகளில் கொங்கு மண்டல அதிமுகவில் மாவட்டச் செயலாளர்கள் மாற்றம், மக்களவைத் தேர்தலுக்கு வேட்பாளர்களுக்கான ரகசிய நேர்காணல் எல்லாம் இங்கேதான் நடந்தன.
அதன்பிறகுதான், ‘ராவணன் சசிகலாவின் சித்தப்பா மருமகன். கோவை விவசாயப் பல்கலைக்கழகத்தில் படித்தவர். முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தியும் இவரும் கல்லூரி கால நண்பர்கள். மிடாஸ் மதுபான ஆலையின் இயக்குநர்களில் ஒருவர். கோடநாடு விவகாரங்களை இவரே கவனிக்கிறார். அங்கே மேலாளராக இவருடைய உறவுக்காரரே இருக்கிறார்’ என்பன போன்ற விவரங்களையெல்லாம் கட்சிக்காரர்கள் பேசத் தொடங்கினர்.

ராவணன் மீது புகார்

2004 மக்களவைத் தேர்தல் தோல்வி, 2006-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் ஆட்சியிழப்புக்கு பிறகு அதிமுகவில் கட்சிக்குள்ளேயே பெரும் சரிவு ஏற்பட்டது. அப்போது புதிது புதிதாக கட்சி நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டனர். உள்ளாட்சி மன்ற தேர்தல்களில் வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டது. அதில் கொங்கு மண்டலத்தில் இடம் பிடித்தவர்கள் எல்லாம் ராவணனால் தேர்வு செய்யப்பட்டவர்களே என்றனர் அதிமுகவினர். அதேநேரம் ராவணன் மீது பல புகார்கள் கட்சி தலைமைக்கும் சென்றன.
அதன் உச்சகட்டமாக ஜெயலலிதாவின் ஆஸ்தான ஜோதிடர் ஒருவரை கடத்திச்சென்று பல நாட்கள் ஓர் அறையில் அடைத்து மிரட்டி, அவரது நிலங்களை அபகரித்துக் கொண்டதாக போலீஸில் புகார் ஆகி, அதில் ராவணன் தலைமறைவான சம்பவமும் பத்திரிகைகளில் செய்திகளாயின. ஆனால் 2011 சட்டப்பேரவை தேர்தலின்போது அதிமுக வேட்பாளர் தேர்வில் மீண்டும் வெளிச்சத்துக்கு வந்தார். அதன் பிறகு சசிகலா குடும்பத்தினர் மீது பல்வேறு புகார்கள் வந்து பலரும் போலீஸில் சிக்க, அதில் ராவணனும் கைதானார். சசிகலா கார்டனில் இருந்து வெளியேற்றப்பட்டார்.
ஒரு கட்டத்தில் சசிகலா கார்டனில் திரும்ப அழைக்கப்பட்டு, இவர்கள் மீதான நெருக்கடிகள் தளர்த்தப்பட்டன. ராவணனும் விடுதலையானார். அதன் பிறகு பல்வேறு இடங்களில், பல்வேறு முறைகளில் சசிகலா உறவுகள் அதிமுக அரசியலுக்குள் திரைமறைவில் புகுந்து வெளிப்பட்டாலும், ராவணன் எங்கிருக்கிறார் என்பதே தெரியாமல் இருந்தது.
அதன் பிறகு, தற்போது சசிகலா குடும்பத்தினர், அவரது நெருக்கமானவர்கள் வீடுகளில் வருமான வரி அதிகாரிகள் சோதனை என்ற செய்தி வந்தபோதுதான் இவரின் பெயரும் அடிபட்டது. பிறகு அதுவும் சுவடு தெரியாமல் காணாமல் போனது. இதையொட்டித்தான் கோவை அதிமுகவினர் மற்றும் ராவணனுக்கு நெருக்கமான வட்டாரத்தில், அவர், முதல்வர் பழனிசாமி அணியுடன் தோழமை கொண்டதால்தான் இந்த ரெய்டில் இருந்து தப்பித்திருக்கிறார் என்ற பேச்சு அடிபட்டது.
இதுகுறித்து ராவணனுடன் நெருக்கமாக இருந்த பிரமுகர் ஒருவர் நம்மிடம் பேசும்போது, ‘ஆரம்ப காலத்தில் ராவணன் கார்டனில் 4, 5-ம் நபராகத்தான் இருந்தார். மெதுவாக சசிகலாவிடம் நம்பிக்கையை சம்பாதித்து 3-ம் இடத்துக்கு வந்தார். அப்போது ஜெயலலிதாவிடம் இருந்து உத்தரவுகள் சசிகலாவிடமும், சசிகலாவிடம் இருந்து திவாகரனுக்கும், திவாகரனிடம் இருந்து ராவணனுக்கும் போகும். பிறகு ஜெயலலிதாவிடம் இருந்து சசிகலாவுக்கு, அவரிடம் இருந்து ராவணனுக்கு என மாறியது. இதுவே 2011 ஆட்சிக்கு பிறகு ஜெயலலிதா உத்தரவு நேரடியாக ராவணனுக்கு செல்ல ஆரம்பித்தது. அதில்தான் வந்தது சிக்கல்.

உளவுத்துறையால் ஆபத்து

2012-ல் ஒருமுறை பெங்களூரு வழக்கு முடிவுக்கு வரும் சூழல் ஏற்பட்டது. தீர்ப்பு பாதகமாக வந்தால் யாரை முதல்வர் ஆக்குவது என்ற பேச்சு சசிகலா குடும்பத்தினர் மத்தியில் எழுந்தது. இந்த முறை ஓபிஎஸ் வேண்டாம். அவர் மறுபடி முதல்வரானால் தன்னை ஸ்தாபித்துக் கொள்வார் என்பதால் குடும்பத்தினரில் ஒருவரே பதவி ஏற்பது என்று பேச்சு நடந்துள்ளது.
அப்போது இருந்த எம்எல்ஏக்கள், அமைச்சர்களில் பெரும்பான்மையானோர் ராவணனால் தேர்வு செய்யப்பட்டவர்களே. எனவே, அவர் இதில் முக்கிய இடம் பெற்றிருக்கிறார். இந்த பேச்சுகளையெல்லாம் அப்போதைய உளவுத்துறை உயர் அதிகாரி ரெக்கார்டிங் ஆதாரத்துடன் கொண்டு போய் ஜெயலலிதாவிடம் கொடுத்துவிட்டார். அந்த ஆதாரத்தில் நீக்கமற நிறைந்திருந்தவர் ராவணன்தான் என்று கூறப்பட்டது.
அந்த கோபத்தில்தான் சசிகலா குடும்பத்தின் மீதே நடவடிக்கை எடுத்தார் ஜெயலலிதா. அதற்கு பிறகு சசிகலா இணக்கமாகி போயஸ் கார்டனுக்கு திரும்பிய பிறகும், அவர்கள் குடும்பத்தினர் ராவணனை நம்பவில்லை. ஜெயலலிதா இறுதி அஞ்சலி செலுத்த வந்தவரைகூட ஓரமாகவே நிறுத்தினர். சிறை சென்ற பின்பு ஒரே ஒருமுறை மட்டும் பெயரளவில் சசிகலா பார்க்க அனுமதித்தார். ஒரு வாரத்துக்கு முன்பு கொங்கு மண்டல அமைச்சர் ஒருவரை சந்தித்தாராம் ராவணன். அந்த அமைச்சர், முதல்வர் பழனிசாமி உள்ளிட்டோர், அக்காலகட்டத்தில் அவர் வளர்த்து விட்ட ஆட்கள்தானே? எனவே அந்த அமைச்சர் மூலம் என்ன பேச்சுவார்த்தை நடந்ததோ, இப்போது இவர் இருப்பிடங்களில் மட்டும் ரெய்டு இல்லை!’ என்றார்.
இதுகுறித்து இன்னொரு அதிமுக பிரமுகர் பேசும்போது, ‘2012-ல் கைது செய்யப்பட்டபோதே ராவணனிடம் இருந்த அத்தனையும் மிரட்டி எழுதி வாங்கிட்டாங்க. அதனால அவர்கிட்ட ஒண்ணுமில்ல. அதனால ரெய்டும் இல்லைன்னு நினைக்கிறோம்!’ என்றார்.

தண்ணீர் திறக்காததால் காய்ந்துபோன வைகை ஆறு: வானம்பார்த்த பூமியான 1.36 லட்சம் ஏக்கர் விளைநிலங்கள்

வடகிழக்கு பருவமழை தொடங்கி இரண்டு வாரங்களாகிவிட்டபோதும், வைகை அணை நீர்பிடிப்பு பகுதியில் எதிர்பார்த்த மழை பெய்யவில்லை. அதன் காரணமாக ஆற்றில் தண்ணீர் திறந்துவிடப்படாததால் விளைநிலங்கள் வானம்பார்த்த பூமியைப்போல் காய்ந்துபோய் உள்ளன.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதிலிருந்து, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட வட மாவட்டங்களிலும், தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களிலும்தான் கனமழை பெய்து வருகிறது. ஆனால், தென் மாவட்டங்களில் கடந்த ஆண்டைபோல் இந்த ஆண்டும் பருவமழை ஏமாற்றி வருகிறது.
தற்போது, பெரியாறு அணையில் இருந்து திறந்துவிடப்படும் தண்ணீர் வரத்தால் வைகை அணை நீர்மட்டம் 58.33 அடியாக உயர்ந்துள்ளது. இதையடுத்து வைகை அணையில் இருந்து பெரியாறு பாசன கால்வாயில் 45 ஆயிரம் ஏக்கர் இரு போக சாகுபடி நிலங்களுக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. ஆனால், வைகை அணையில் இருந்து வைகை ஆற்றில் இதுவரை தண்ணீர் திறந்துவிடப்படாததால் திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களை சேர்ந்த ஒரு லட்சத்து 36 ஆயிரம் ஏக்கர் வைகை ஆற்று பாசன நிலங்கள் வானம்பார்த்த பூமியைப்போல் மாறிவிட்டன.
வைகை அணைக்கு முல்லை பெரியாறு அணையில் இருந்தும், மேல் வைகை, தேனியாறு, சுருளியாறு உள்ளிட்ட வைகை நீர்பிடிப்பு வடிநிலங்களில் இருந்தும் தண்ணீர் வரும். பெரியாறு அணையில் இருந்து திறந்துவிடப்பட்ட தண்ணீரை காட்டிலும் கூடுதலாக வைகை அணைக்கு தண்ணீர் வந்தால் அது வைகை நீர்பிடிப்பு பகுதியில் பெய்த மழையாக எடுத்துக் கொள்ளப்படும். ஆனால், தற்போது பெரியாறு அணையில் இருந்து திறந்துவிடப்படும் தண்ணீர்தான் வைகை அணைக்கு வருகிறது. வைகை நீர்பிடிப்பு பகுதியில் இருந்து ஒரு சொட்டு தண்ணீர்கூட வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து வைகை -பெரியாறு வடிநில கோட்ட செயற்பொறியாளர் டி.சுப்பிரமணியன் கூறியதாவது: வடகிழக்கு பருவமழை தொடங்கியதிலிருந்து தற்போதுவரை வைகை நீர்பிடிப்பு பகுதியில் மழை பெய்யவில்லை. அதனால், மேல் வைகை, தேனியாறு, சுருளியாறு வைகை நீர்பிடிப்பு வடிநிலங்கள் வரை 20 கி.மீ. தூரம் காய்ந்துபோய் உள்ளன. அதேபோல், வைகை அணைக்கு கீழே வரட்டாறு, நாகலாறு, வராகநதி, சிறுமலையாறு, மஞ்சளாறு, சாத்தையாறு, உப்பாறு, கீழ் வைகையிலும் மழை இல்லை என்றார்.

2 ஆண்டுகளுக்குப் பிறகு..

டி.சுப்பிரமணியன் மேலும் கூறுகையில், வைகை அணையில் தற்போது 1,316 மில்லியன் கன அடி தண்ணீர் இருக்கிறது. இந்த தண்ணீர் 1,500 மில்லியன் கன அடியாக உயர்ந்தால் மட்டுமே வைகை ஆற்றில் திறந்துவிட முடியும். அதற்கான வாய்ப்பு தற்போதைக்கு இல்லை. ஆற்றில் தண்ணீர் திறப்பது வடகிழக்கு பருவமழையை பொறுத்தது. மீறி திறந்தால் கடைமடைப் பகுதிக்கு தண்ணீர் போகாது. அதனால், எந்த பயனும் இல்லை. வைகை அணையில் இருந்து விவசாய பாசனத்துக்கு கடைசியாக 2015-ம் ஆண்டு வைகை ஆற்றில் திறந்துவிடப்பட்டது. அதன்பிறகு வைகை ஆற்றில் பாசனத்துக்கு திறக்கப்படவில்லை என்றார்.

தமிழக பக்தர்களுக்கு வசதிகள் செய்து கொடுக்க சபரிமலையில் 5 ஏக்கர் நிலம் வழங்க வேண்டும்: கேரள முதல்வரிடம் அமைச்சர் ஜெயக்குமார் கோரிக்கை

தமிழக பக்தர்களின் வசதிக்காக சபரிமலையில் 5 ஏக்கர் நிலத்தை ஒதுக்கித் தரவேண்டும் என கேரள முதல்வரிடம் தமிழக அமைச்சர் டி.ஜெயக்குமார் வலியுறுத்தினார். சபரிமலை செல்லும் பக்தர்கள் வசதிக்காக தேனியில் அறநிலையத் துறை சார்பில் தகவல் மையம் திறக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜை, வரும் வெள்ளிக்கிழமை தொடங்க உள்ளது. இதையொட்டி சபரிமலைக்கு வரும் பக்தர்களுக்கான வசதிகள் செய்து தருவது தொடர்பாக தென் மாநில முதல்வர்கள், அமைச்சர்கள் மாநாடு கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நேற்று நடந்தது. கேரள முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் நடந்த இந்த மாநாட்டில் தமிழக முதல்வர் சார்பில் அமைச்சர்கள் டி.ஜெயக்குமார், சேவூர் ராமச்சந்திரன் ஆகியோர் பங்கேற்றனர். மாநாட்டில் முதல்வர் சார்பாக அமைச்சர் டி.ஜெயக்குமார் பேசியதாவது: சபரிமலைக்கு வரும் பக்தர்களில் 40 சதவீதம் பேர் தமிழகத்தில் இருந்து வருகின்றனர்.
தமிழகத்தில் இருந்து வரும் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்துதர கேரள அரசை கேட்டுக் கொள்கிறேன். ஏற்கெனவே, கடந்த 2012-ம் ஆண்டு தமிழக பக்தர்கள் வசதிக்காக 5 ஏக்கர் நிலத்தை சபரிமலையில் ஒதுக்கித் தருவதாக கேரள அரசு உறுதியளித்து நிலுவையில் உள்ளது. இந்த விஷயத்தில் கேரள முதல்வர் விரைவாக முடிவெடுக்க வேண்டும்.
இவ்வாறு அமைச்சர் ஜெயக்குமார் பேசினார்.

புகழேந்தி, டாக்டர் சிவக்குமார், பூங்குன்றனிடம் வருமானவரி அதிகாரிகள் தனித்தனியாக விசாரணை: 500 பேருக்கு சம்மன் அனுப்பி விசாரிக்க முடிவு

சசிகலா உறவினர் வீடுகளில் சோதனை நிறைவு; கர்ஸன் எஸ்டேட்டில் மட்டும் தேடுதல் வேட்டை தொடர்கிறது
சசிகலாவின் உறவினர்கள், நண்பர்களின் வீடு, அலுவலகங்கள் உள்ளிட்ட இடங்களில் வருமானவரித் துறையினர் நடத்திவந்த சோதனை நேற்றுடன் நிறைவடைந்தது. கோடநாட்டில் உள்ள கர்ஸன் எஸ்டேட்டில் மட்டும் சோதனையை அதிகாரிகள் தொடர்கின்றனர். இதுதொடர்பாக 500-க்கும் மேற்பட்டோருக்கு சம்மன் அனுப்பி விசாரிக்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
சோதனையில் கிடைத்த ஆவணங்களின் அடிப்படையில் கர்நாடக மாநில அதிமுக செயலாளர் புகழேந்தி, டாக்டர் சிவக்குமார், ஜெயலலிதாவின் நேர்முக உதவியாளர் பூங்குன்றன் ஆகியோரிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் தனித்தனியாக விசாரணை நடத்தி, வீடியோவில் பதிவு செய்துள்ளனர்.
சசிகலாவின் உறவினர்கள், நண்பர்கள், ஆதரவாளர்களுக்குச் சொந்தமான வீடுகள், அலுவலகங்கள் என மொத்தம் 187 இடங்களில் 1,800-க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் கடந்த 9-ம் தேதி அதிகாலை ஒரே நேரத்தில் சோதனையைத் தொடங்கினர். தமிழகத்தில் மட்டுமின்றி, கர்நாடகா, புதுச்சேரியிலும் இந்தச் சோதனை நடத்தப்பட்டது. குறிப்பாக, சென்னை தி.நகரில் உள்ள இளவரசி மகள் கிருஷ்ணபிரியா வீடு, ஈக்காட்டுத்தாங்கலில் உள்ள ஜெயா டிவி அலுவலகம், வேளச்சேரியில் உள்ள பீனிக்ஸ் மால், போயஸ் தோட்டத்தில் உள்ள ஜெயா டிவியின் பழைய அலுவலகம், சசிகலாவின் கணவர் நடராஜன், அவரது உறவினர்கள் வீடு, அடையாறில் உள்ள ஜெயலலிதாவின் நேர்முக உதவியாளர் பூங்குன்றன் வீடு, மகாலிங்கபுரத்தில் உள்ள ஜெயா டிவியின் சிஇஓ விவேக் ஜெயராமன் வீடு, கோடநாடு எஸ்டேட், கர்நாடக மாநில செயலாளரான வழக்கறிஞர் புகழேந்தியின் பெங்களூரு வீடு ஆகிய இடங்களில் சோதனைகள் நடத்தப்பட்டன. ஒவ்வொரு நாளும் சில இடங்களில் மட்டும் சோதனை முடிக்கப்பட்டன.

சோதனை நிறைவு

சென்னை ஈக்காட்டுத்தாங்கலில் உள்ள ஜெயா டிவி அலுவலகத்தில் நேற்று 5-வது நாளாக தொடர்ந்த சோதனை ஒட்டுமொத்தமாக 100 மணி நேரத்துக்கு மேல் நீடித்துள்ளது. 2 பெண் அதிகாரிகள் உட்பட 5 அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.
ஜெயா டிவியின் வரவு, செலவு விவரங்களும் பெறப்பட்டுள்ளன. முன்னதாக,டிவி நிர்வாகிகள் சிலரை தனியாக அழைத்து வாக்குமூலங்கள் பெறப்பட்டன. போலி நிறுவனங்களுடன் பணப் பரிவர்த்தனை நடத்தப்பட்டதா என்பது தொடர்பான தகவல்களும் சேகரிக்கப்பட்டுள்ளன. அங்கிருந்து மொத்தம் 3 வாகனங்களில் முக்கிய ஆவணங்களை அதிகாரிகள் எடுத்துச் சென்றனர். ஜெயா டிவி அலுவலகத்தில் சிஇஓ விவேக்கின் அறைக்கு மட்டும் சீல் வைக்கப்பட்டுள்ளது. அங்கு நடத்தப்பட்ட சோதனை முடிவுக்கு வந்ததாக அதிகாரிகள் கூறினர்.
நுங்கம்பாக்கத்தில் உள்ள விவேக் வீடு, தி.நகரில் கிருஷ்ணபிரியா வீட்டிலும் நேற்று சோதனை நீடித்தது. நேற்று மதியத்துக்கு மேல் அனைத்து இடங்களிலும் சோதனை நிறைவு பெற்றது. சசிகலாவுக்கு சொந்தமான கோடநாடு கர்ஸன் எஸ்டேட்டில் மட்டும் அதிகாரிகள் சோதனையை தொடர்ந்தனர்.

தனி அறையில் விசாரணை

இந்நிலையில், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமானவரித் துறையின் புலனாய்வுப் பிரிவு அலுவலகத்தில் புகழேந்தி நேற்று ஆஜரானார். அவரிடம் சொத்துகள் வாங்கப்பட்டது மற்றும் அதற்கான தொகை குறித்தும் கேள்விகள் கேட்கப்பட்டன. அவர் நாளையும் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.
அடுத்ததாக, சசிகலாவின் உறவினரான டாக்டர் சிவக்குமார் ஆஜரானார். சசிகலா சம்பந்தப்பட்ட 12 நிறுவனங்களில் அவர் முக்கிய அதிகாரியாக இருப்பது தொடர்பாக அதிகாரிகள் விசாரித்தனர். ஜெயலலிதா அப்போலோ மருத்துவமனையில் இருந்தபோது நடந்த சில சம்பவங்கள் குறித்தும் கேட்கப்பட்டதாகத் தெரிகிறது. பின்னர், ஜெயலலிதாவின் நேர்முக உதவியாளர் பூங்குன்றனிடமும் நீண்ட நேரம் விசாரணை நடந்தது. சசிகலா, தினகரன் உள்ளிட்டோர் தொடர்பாகவும் அவரிடம் கேட்கப் பட்டது.
தனி அறைகளில் அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணை முழுவதும் வீடியோவில் பதிவு செய்யப்பட்டுள்ளது. எழுத்துப்பூர்வமாகவும் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது. சசிகலாவின் தம்பி திவாகரன் இன்று நேரில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இதுவரை நடத்தப்பட்ட சோதனையின் அடிப்படையில் அடுத்தடுத்து 500-க்கும் மேற்பட்டோரிடம் விசாரிக்க வருமானவரித் துறை அதிகாரிகள் சம்மன் அனுப்ப முடிவு செய்துள்ளனர்.

ஜெயா டிவியின் தலைமை செயல் அதிகாரி விவேக்தான் முக்கிய துருப்புச் சீட்டு: வருமானவரித் துறை அதிகாரிகள் தகவல்


சென்னை மகாலிங்கபுரத்தில் உள்ள ஜெயா டிவி தலைமை செயல் அதிகாரி விவேக்கின் வீட்டில் நேற்று 5-வது நாளாக சோதனை நீடித்தது. இதைத் தொடர்ந்து, மாலை 5.50 மணி அளவில் அவரை நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமானவரி அலுவலகத்துக்கு அதிகாரிகள் காரில் அழைத்துச் சென்றனர். அங்கு அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. இதில், அவர் பல முக்கிய தகவல்களை வெளியிட்டுள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பெயர் குறிப்பிட விரும்பாத அதிகாரி ஒருவர் கூறியபோது, ‘‘பெரும்பாலான நிகழ்வுகள் விவேக்கைச் சுற்றியே நடந்திருக்கின்றன. இதுவரை 251 இடங்களில் உள்ள சொத்துகள் பற்றி முழு தகவல்களும் சேகரிக்கப்பட்டுள்ளன. இதில் 355 பேருக்கு நேரடி தொடர்பு உள்ளதாக சந்தேகிக்கிறோம். 60-க்கும் மேற்பட்ட போலி நிறுவனங்கள் இருப்பதும் தெரியவந்துள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்கள், நகைகள், பணம், வங்கிப் பரிமாற்றம் தொடர்பான அனைத்து தகவல்களும் இடைக்கால அறிக்கையாக தயாரிக்கப்பட்டு, டெல்லியில் உள்ள அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது. விவேக்தான் இந்த விசாரணையில் முக்கிய துருப்புச் சீட்டாக இருப்பார் என கருதுகிறோம்’’ என்றார்.
வீட்டு வேலையாட்கள், கார் டிரைவர்கள் என பினாமி பெயரில் சொத்துகள் வாங்கப்பட்டுள்ளதா, கடந்த ஆண்டில் பணமதிப்பு நீக்க நடவடிக்கையின்போது, பழைய ரூபாய் நோட்டுகள் முறைகேடாக மாற்றப்பட்டதா, வேறு பலரது வங்கிக் கணக்கில் பணம் செலுத்தப்பட்டதா, நடராஜனைப் பார்ப்பதற்காக சசிகலா கடந்த மாதம் சென்னை வந்தபோது, சொத்து மற்றும் பணப் பரிவர்த்தனைகள் எதுவும் நடந்ததா என்றும் விவேக்கிடம் அதிகாரிகள் விசாரித்ததாக கூறப்படுகிறது.