Wednesday, 21 January 2015

ராஜபக்சேவால் பழிவாங்கப்பட்ட முன்னாள் ராணுவ தளபதி பொன்சேகாவுக்கு மீண்டும் பதவி: ஜனாதிபதி சிறிசேனா அறிவிப்பு

கொழும்பு, ஜன.22- 

ராஜபக்சே அரசால் பழி வாங்கப்பட்ட முன்னாள் ராணுவ தளபதி சரத் பொன்சேகாவுக்கு மீண்டும் பதவி வழங்குவதாக ஜனாதிபதி சிறிசேனா அறிவித்துள்ளார். 

இலங்கை நாட்டின் ராணுவ தளபதியாக பணியாற்றியவர், சரத் பொன்சேகா. ராஜபக்சே ஆட்சியின்போது விடுதலைப்புலிகள் படை மீதான தாக்குதல்களுக்கு பொன்சேகாதான் தலைமை தாங்கினார். இந்த நிலையில் தளபதி பொறுப்பில் இருந்து விலகிய பொன்சேகா, 2010-ம் ஆண்டு ஜனாதிபதி பதவிக்கான தேர்தலில், ராஜபக்சேவுக்கு எதிராக போட்டியிட்டு தோல்வியை தழுவினார். 

அதன் பிறகு ராஜபக்சே அரசினால் பொன்சேகா பழிவாங்கப்பட்டார். அவருக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதுடன், அவரது குடியுரிமை உள்பட அனைத்து சலுகைகளும் பறிக்கப்பட்டன. 

தற்போது நடந்த அதிபர் தேர்தலில் ராஜபக்சே தோல்வி அடைந்தார். சிறிசேனா தலைமையில் புதிய அரசு பொறுப்பேற்றது. 

ராஜபக்சே அரசால் பழிவாங்கப்பட்ட முன்னாள் ராணுவ தளபதி சரத் பொன்சேகாவுக்கு எதிரான அனைத்து குற்றச்சாட்டுகளையும் வாபஸ் பெறுவதாகவும், அவரை விடுதலை செய்யுமாறும், ஜனாதிபதி சிறிசேனா அதிரடி அறிவிப்பை நேற்று வெளியிட்டார். இதன் அடிப்படையில் சரத் பொன்சேகாவுக்கு மீண்டும் பதவி வழங்கப்படுகிறது. ஏற்கனவே அவர் பெற்ற பட்டங்கள், பதக்கங்கள், ஓய்வூதியம் ஆகியவற்றை மீண்டும் பெறுகிறார். 

இதற்கிடையே பதவி இழந்த ராஜபக்சேவுக்கு ஆதரவாக செயல்பட்டதாக, அந்த நாட்டின் தலைமை நீதிபதி மொகான் பீரிஸ் மீது குற்றச்சாட்டு எழுந்தது. அவர் சட்டவிரோதமான முறையில் பதவி வகித்து வருவதாகவும் அந்த நாட்டின் சட்ட வல்லுனர்கள் சங்கம் குற்றம் சாட்டியது. 

இந்த நிலையில் தலைமை நீதிபதி பதவியில் இருந்து விலகுமாறு, மொகான் பீரிசுக்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்கே உத்தரவிட்டார். இதை ஏற்றுக்கொண்டு பதவி விலகுவதாக மொகான் பீரிஸ் உறுதி அளித்துள்ளார். இந்த தகவலை சுகாதாரத்துறை மந்திரி ராஜித சேனாரத்ன, கொழும்புவில் நேற்று நடந்த ஒரு கூட்டத்தில் வெளியிட்டார்

ஸ்ரீரங்கம் தொகுதிக்கு போலீஸ் பார்வையாளராக அசாம் ஐ.பி.எஸ். அதிகாரி வருகை

ஸ்ரீரங்கம் தொகுதிக்கு போலீஸ் பார்வையாளராக அசாம் ஐ.பி.எஸ். அதிகாரி வருகைசென்னை, ஜன.22- 

சென்னையில் நிருபர்களுக்கு, சந்தீப் சக்சேனா அளித்த பேட்டி வருமாறு:- 

ஸ்ரீரங்கம் தொகுதி இடைத்தேர்தலுக்கான செலவீன பார்வையாளராக ஐ.ஆர்.எஸ். அதிகாரி ஸ்ரீதரதோரா ஏற்கனவே வந்துள்ளார். 22-ந் தேதி பொதுப்பார்வையாளராக ஐ.ஏ.எஸ். அதிகாரி பல்கார் சிங் வருகிறார். இவர்கள் தவிர, போலீஸ் பார்வையாளராக அசாமைச் சேர்ந்த ஐ.பி.எஸ். அதிகாரி வினோத்குமார் இந்த வாரத்தில் வந்து சேருவார். இவர் 1997-ம் ஆண்டு ஐ.பி.எஸ். பணியில் சேர்ந்தவர் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை மற்றும் அதன் தொடர்புடைய பிரச்சினை குறித்து அவர் பார்வையிடுவார். 

அங்கு தற்போது சோதனைச் சாவடிகள் மூலம் வாகன தணிக்கை நடைபெற்று வருகிறது. பறக்கும் படையும் பல்வேறு இடங்களில் சோதனை செய்து வருகிறது. அதன் எண்ணிக்கையை இன்னும் உயர்த்தவில்லை. தேர்தல் தொடர்பான புகார்கள் மற்றும் தகவல்களை 1950 என்ற இலவச எண்ணுக்கு அளிக்கலாம். பொதுவாக நகர்ப்புறங்களில் ஓட்டுப்பதிவு சதவீதம் குறைவாக உள்ளது. எனவே அங்குள்ள மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படும் வகையில், ‘ஸ்வீப்’ என்ற அறிவுறுத்தல் திட்டத்தை தொடங்கவுள்ளோம். தேசிய வாக்காளர் தினத்துக்குப்பிறகு அதுபற்றி திட்டமிடப்படும். 

இந்த இடைத்தேர்தலில் எந்தெந்தத் திட்டங்களை ஸ்ரீரங்கம் தொகுதிக்குள் நடத்தக்கூடாது, எந்தெந்தத் திட்டங்களை அது அமைந்துள்ள திருச்சி, புதுக்கோட்டை மாவட்டங்களில் நடத்தக்கூடாது என்பது பற்றி ஏற்கனவே அறிவித்துள்ளோம். அந்த வகையில், அந்தத் தொகுதியில் அம்மா திட்டத்தை (வருவாய்த்துறை மூலம் அரசு சேவைகள் அளிக்கும் திட்டம்) செயல்படுத்தக்கூடாது. இலவச வேட்டி, சேலைகளை வழங்கக்கூடாது. குறை தீர் முகாம்களை அங்கு நடத்தக்கூடாது. இதற்கான உத்தரவை இந்திய தேர்தல் கமிஷன் பிறப்பித்துள்ளது. ஆனால் டெங்கு கொசு ஒழிப்பு திட்டங்கள், குடியரசு தின விழாக்கள் போன்றவற்றை நடத்த தடையில்லை. 

இந்த இடைத்தேர்தலின்போது தேர்தல் நடத்தை விதிமுறைகள் அனைத்தும் சரியாக பின்பற்றப்படுகிறதா என்பதை கண்காணிப்பதற்காக மண்டல அளவில் 31 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், இரண்டு சிறப்புப்படையும், ஒரு பறக்கும் படையும், வீடியோ கேமராவுடனான படப்பிடிப்புப் படையும் கொண்ட குழுவும் அமைக்கபட்டுள்ளது. தேர்தலின்போது பொதுச்சுவர்களிலும், தனியாரின் சுவர்களிலும் பிரசார விளம்பரம் செய்யத் தடை உள்ளது. 

பொது இடங்களில் இதை மீறியது தொடர்பாக 10 வழக்குகளும், தனியார் சுவர்களில் அனுமதி பெறாமல் விளம்பரம் செய்ததாக 260 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டு, மாவட்ட நிர்வாகத்தால் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன. 

இவ்வாறு அவர் கூறினார்.

வளர்ச்சி திட்டங்களுக்கு கோவில் நிதிகளை பயன்படுத்த வேண்டும்: மத்திய அரசுக்கு கி.வீரமணி யோசனை

சென்னை, ஜன.22- வளர்ச்சி திட்டங்களுக்கு கோவில் நிதிகளை பயன்படுத்த வேண்டும்: மத்திய அரசுக்கு கி.வீரமணி யோசனை

திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:- 

பிரதமர் மோடி தலைமையில் உள்ள பா.ஜ.க. மத்திய அரசு தனது நிதிப் பற்றாக்குறைக்காக நல்ல லாபம் தரும், ‘‘பொன் முட்டை இடும் வாத்தைக் கொல்வது’’ போன்று, பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை தனியாருக்கு விற்பதில், நாளொருமேனியும் பொழுதொரு வண்ணமும் ஈடுபட்டு வருகிறது. 

மக்களின் சுகாதார திட்டத்துக்கு செலவு செய்வதில் 20 சதவீதம் வெட்டு. உயர் கல்வி துறை வளர்ச்சிக்கான ஒதுக்கீட்டில் ரூ.3 ஆயிரம் கோடிக்கு மேல் வெட்டு. பெட்ரோல்-டீசல் உலகச்சந்தை விலை சரி பாதிக்கு மேல் வீழ்ச்சி அடைந்தும், அதன் பயனை நுகருவோரான மக்களை சென்று அடையாமல், மத்திய அரசு வரி விதிப்பின் மூலம் இடையே பறித்துக் கொள்கிறது. 

உர விலையும் கூடவே விவசாயிகளின் தலையில் விழுகிறது. நிதி ஆதாரம் தேடும் மத்திய அரசு பல லட்சம் கோடி ரூபாய்களை உள்ளடக்கிய திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோவில், குருவாயூரப்பன் கோவில், திருப்பதி ஏழுமலையான் கோவில் வருமானத்தில் ஒரு கணிசமான தொகையை பெற்றுக் கொண்டு அதற்கு பதிலாக கடன் பாத்திரங்களாக்கி குறிப்பிட்ட காலத்துக்கு பிறகு திருப்பிக் கொடுக்கலாம். 

கோவை ஆய்வு செய்வதற்க்கு இன்னோவா கார்!

: கோவைக்கு ஜெ., அறிவித்த சிறப்பு திட்டப்பணிகளை ஆய்வு செய்ய வரும், உயரதிகாரிகளுக்காக, 17.5 லட்சம் ரூபாயில் சொகுசு கார் வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. எந்த பணியுமே துவங்காத நிலையில், ஆய்வுக்கு வரும் அதிகாரிகளுக்கு, சொகுசு கார் வாங்குவது வேடிக்கையாக உள்ளது.

கோவை மாநகராட்சியில், அ.தி.மு.க., ஆட்சிக்காலத்தில் அறிவிக்கப்பட்ட, உக்கடம் மேம்பாலம், மேற்கு புறவழிச்சாலை திட்டங்கள், மூன்றாண்டுக்கு மேலாகியும் துவங்கவில்லை. தி.மு.க., ஆட்சிக்காலத்தில் அறிவித்த மேம்பாலங்கள், ரயில்வே மேம்பாலப் பணிகள் மட்டுமே, தற்போது நடக்கிறது.இதனால், கடும் அதிருப்தியில் இருந்த கோவை மக்களை குளிர்விக்கும் வகையில், மேயர் பதவிக்கான இடைத்தேர்தலுக்கு முன்பாக, முன்னாள் முதல்வர் ஜெ., கோவைக்கு சிறப்பு திட்டங்களை அறிவித்தார்.

வெள்ளலுாரில் ஒருங்கிணைந்த பஸ் ஸ்டாண்ட், நவீன வசதிகளுடன் புறநகர் பகுதிக்கு லாரிப்பேட்டை இடமாற்றம், வெள்ளலுாரில் குடிசை மாற்று வாரியம் மூலம் அடுக்குமாடி குடியிருப்பு, 'மல்டி லெவல் பார்க்கிங்', கட்டட கழிவுகளை மறுசுழற்சி செய்யும் திட்டம், சங்கனுார் பள்ளத்திலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, அரைவட்ட சாலை அமைப்பது, இணைப்பு பகுதிகளில் மழைநீர் வடிகால் அமைத்தல் உள்ளிட்ட சிறப்பு திட்டங்கள், 2,379 கோடி ரூபாய்க்கு அறிவிக்கப்பட்டது.இந்த திட்டப்பணிகளுக்காக சிறப்பு ஒருங்கிணைப்பாளரை நியமிக்கவும், ஒவ்வொரு பணிக்கும் கண்காணிப்பு குழு அமைக்கவும் மாமன்றத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. அனைத்து திட்டப்பணிகளும் காகித அளவிலேயே உள்ளன. ஏற்கனவே நிதி ஒதுக்கீடு, கட்டட கழிவு மறுசுழற்சி திட்டம் கூட துவங்கப்படவில்லை.

இந்நிலையில், முன்னாள் முதல்வர் அறிவித்த சிறப்பு திட்டப்பணிகளை ஆய்வு செய்வதற்காக, சென்னையில் இருந்து வரும் உயர் அதிகாரிகளை, அழைத்து செல்வதற்காக, 17.5 லட்சம் ரூபாயில், புதிதாக 'இனோவா' கார் வாங்க, மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இன்று நடக்கும் அவசர கூட்டத்தில், இதற்கான தீர்மானமும் கொண்டு வரப்படுகிறது.அவசர கூட்ட தீர்மானத்தில், 'கோவை மாநகராட்சி, 105.06 சதுர கி.மீ., பரப்பில் இருந்து, 257.04 சதுர கி.மீ.,யாக விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. மாநகராட்சி மேம்பாட்டு பணிகளுக்காக பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டு, திட்ட செயலாக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சட்டசபையில், அரசு மானியக்கோரிக்கையில், கோவை மாநகராட்சிக்கு, 2379 கோடி ரூபாய் மதிப்புள்ள பல்வேறு வளர்ச்சி பணிகளை முதல்வர் அறிவித்தார். திட்டப்பணிகளை செயலாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

'திட்டங்களின் நடவடிக்கைகள், முன்னேற்றங்களை பார்வையிட்டு, ஆய்வு செய்யவும் நகராட்சி நிர்வாக ஆணையரகம் மற்றும் தமிழக அரசு செயலகத்தில் இருந்து வி.ஐ.பி., அந்தஸ்துள்ள உயர் அலுவலர்கள் அவ்வப்போது வருகின்றனர். கோவை வரும் அவர்களை அழைத்து வருவதற்கும், ஆய்வுக்கு அழைத்து செல்லவும், மாநகராட்சியில் சிறப்பு வாகனங்கள் எதுவும் இல்லை. மாநகராட்சி அலுவலர்களின் வாகனங்களையே பயன்படுத்தும் சூழ்நிலை உள்ளது.'உயர் அதிகாரிகளின் ஆய்வு பணிக்காக, இனோவா கார், 17.5 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் வாங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக நகராட்சி நிர்வாக ஆணையரகத்தில் அனுமதி பெற்று, வாகனம் வாங்க முடிவு செய்யப்படுகிறது' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.கோவை மாநகராட்சியில் கடந்த மூன்றரை ஆண்டுகளாக, எந்த பணியும் நடக்கவில்லை.

மாநகராட்சி பட்ஜெட்டிலும், மன்ற கூட்டங்களிலும் நிறைவேற்றப்பட்ட பல்வேறு திட்டங்கள் முடங்கியும், காகித அளவிலும் உள்ளன. ரோடு, சாக்கடை, மழைநீர் வடிகால் பணிகள் மட்டுமே, மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.முன்னாள் முதல்வர் அறிவித்த சிறப்பு திட்டங்களுக்கு, அதிகாரிகள் ஆலோசனை கூட்டங்கள் மட்டும் நடக்கின்றன. பணியே துவங்காத நிலையில், ஆய்வுக்கு வரும் அதிகாரிகளுக்காக, மக்களின் வரிப்பணம் பல லட்சத்தை செலவு செய்து, 'இனோவா' கார் வாங்குவது வேடிக்கையாக உள்ளது.