: சென்னை, ஜன. –
‘‘சென்னை மேடவாக்கம் – சோழிங்கநல்லுார் இணைப்புச்சாலை, இனி ‘செம்மொழிச்சாலை’ என்று பெயர் மாற்றம் செய்யப்படும்,’’ என, முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.
செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தால் வழங்கப்படும், ‘கருணாநிதி செம்மொழித் தமிழ் விருது’ வழங்கும் விழா, நேற்று சென்னை கோட்டூர்புரம் அண்ணா நுாறறாண்டு நுாலகத்தில் நடந்தது. கடந்த, 2010 முதல் 2019 வரை, தேர்வு செய்யப்பட்ட தமிழறிஞர்களுக்கு, முதல்வர் விருதுகளை வழங்கி பேசியதாவது:
தமிழ் தொன்மையான மொழி என்பதை, உலகம் முழுதும் உள்ள, மொழியியல் அறிஞர்கள், இனவியல் அறிஞர்கள் சொல்லிக் கொண்டிருக்கின்றனர். தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட உண்மை.
தமிழ் குறிப்பிட்ட நாட்டு மக்கள் பேசும் மொழியாக மட்டுமல்ல. ஒரு பண்பாட்டின் அடையாளமாக இருக்கிறது. நம் தமிழ் மொழியானது, நிலத்துக்கு, மண்ணுக்கு, இயற்கைக்கு, மக்களுக்கு, பண்பாட்டுக்கு இலக்கணத்தை வகுத்திருக்கக் கூடிய மொழி.
தமிழ் என்றாலே இனிமை என்றுதான் பொருள். உலகின் மூத்த மொழிகளில் ஒன்று. தமிழ் எந்த மொழியில் இருந்தும் கடன் வாங்கி உருவான, கிளை மொழி அல்ல. தமிழில் இருந்துதான் ஏராளமான மொழிகள் உருவாகி உள்ளன.
செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம், 41 செவ்வியல் தமிழ் நுால்களின் ஆய்வுக்கு முதலிடம் வழங்கி வருகிறது. தொல் பழங்காலம் முதல், கி.பி.,6ம் நுாற்றாண்டு வரையிலான காலப்பகுதிக்குள் தோன்றிய, இலக்கிய, இலக்கணம் குறித்த ஆய்வினை மேற்கொள்ள, இந்நிறுவனம் உருவாக்கப்பட்டது. தமிழ்மொழி ஆய்விலும், அதன் மேம்பாட்டிலும், தனிக்கவனம் செலுத்தி வருகிறது.
அந்த வரிசையில், செம்மொழித் தமிழாய்வில் குறிப்பிடத்தக்க பங்களிப்பு செய்தவர்களுக்கு, விருதுகள் வழங்கி சிறப்பித்து வருகிறது. செம்மொழித் தமிழாய்வு நிறுவனத்துக்கு, 2008 ஜூலை, 24ம் தேதி தனது சொந்த நிதியில் இருந்து, ஒரு கோடி ரூபாயை கருணாநிதி வழங்கினார். அவர் பெயரால் அறக்கட்டளை நிறுவப்பட்டு, தமிழறிஞர்களுக்கு விருது வழங்கப்படுகிறது.
இந்தியாவிலேயே மிக உயரிய விருதாக, 10 லட்சம் ரூபாய் பரிசுத் தொகை கொண்டது. அத்துடன் பாராட்டு இதழும், கருணாநிதி உருவம் பொறித்த நினைவுப்பரிசும் வழங்கப்படும். கடந்த, 2010ல் விருது வழங்கப்பட்டது. அதன்பின் விருது வழங்கவில்லை. அதை பேசி அரசியலாக்க விரும்பவில்லை.
தமிழுக்கு, தமிழறிஞர்களுக்கு செய்ய வேண்டிய மரியாதையில் கூட, அரசியல் புகுந்ததன் காரணமாக, 2011 முதல் 2019 வரை, விருதுகள் வழங்கப்படவில்லை. தி.மு.க., அரசு பொறுப்பேற்ற பிறகு, விருதாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
தி.மு.க., ஆட்சி தமிழுக்கு ஆற்றிய பணிகளின் தொடர்ச்சியாக, செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் புதிய வளாகம் அமைந்துள்ள, மேடவாக்கம் – சோழிங்கநல்லுார் இணைப்புச்சாலை, இனி ‘செம்மொழிச் சாலை’ எனப் பெயர் மாற்றம் செய்யப்படும்.
செம்மொழிச் சிறப்புகளை, உலகெங்கும் கொண்டு சேர்க்கும் வகையில், முதல்கட்டமாக தென்கிழக்கு ஆசிய நாடுகளில் உள்ள, ஐந்து பல்கலைகளில், ‘செம்மொழித் தமிழ் இருக்கைகள்’ அமைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். செம்மொழி நிறுவனம் முன் வைத்துள்ள இலக்குகளை அடைய, தமிழக அரசு எப்போதும் துணை நிற்கும்.
மொழி குறித்த ஆய்வுகள், தமிழகத்தோடு, இந்திய எல்லையோடு முடிந்து விடாமல், உலகளாவியதாக அமைய வேண்டும். உலக மொழியியல் கோட்பாடுகளை உள்ளடக்கியதாக, நமது ஆய்வுகள் அமைய வேண்டும். தமிழை ஆட்சி மொழியாகவும், வழக்காடு மொழியாகவும் மேலும் உயர்த்திட, தமிழக அரசு தொடர்ந்து குரல் கொடுக்கும்.
இவ்வாறு, முதல்வர் பேசினார்.
விழாவில், அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, தங்கம் தென்னரசு, சுப்பிரமணியன், மகேஷ் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
விருது பெற்றவர்கள் விபரம்
ஆண்டு – விருதாளர்கள்
2011 – கோதண்டராமன், சென்னை பல்கலை முன்னாள் துணைவேந்தர்
2012 – சுந்தரமூர்த்தி, தமிழ் பல்கலை முன்னாள் துணைவேந்தர்
2013 – மருதநாயகம், புதுவை பல்கலை முன்னாள் பதிவாளர்
2014 – மோகனராசு, திருக்குறள் ஆய்வு மையம் முன்னாள் தலைவர்
2015 – மறைமலை இலக்குவனார், சென்னை மாநிலக் கல்லுாரி முன்னாள் தமிழ் பேராசிரியர்
2016 – ராஜன், புதுவை பல்கலை வரலாற்றுத்துறை முன்னாள் பேராசிரியர்
2018 – ஈரோடு தமிழன்பன், சென்னை புதுக்கல்லுாரி முன்னாள் தமிழ் பேராசிரியர்
2019 – சிவமணி – தஞ்சாவூர் கரந்தைப் புலவர் கல்லுாரி முன்னாள் முதல்வர்
2010 ம்ஆண்டு விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட, அமெரிக்காவை சேர்ந்த ராஜம், ஜெர்மனியை சேர்ந்த உல்ரிக் நிக்லாஸ் ஆகியோர் விழாவிறகு வர இயலாததால், அவர்களுக்கு பிறதொரு நாளில் விருது வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.:
Wednesday, 2 February 2022
செம்மொழிச்சாலை எனப் பெயர் மாற்றம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment