தூத்துக்குடி மாவட்டம் சேரகுளத்தைச் சேர்ந்தவர் எம்.சங்கர சுப்பிரமணியன். இவர் நாங்குநேரி இடைத்தேர்தலில் சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிடுகிறார். அவர் இன்று உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலை ஒத்திவைக்கக் கோரி மனு ஒன்றைத் தாக்கல் செய்தார்.
அவரது மனுவில், “நாங்குநேரி தொகுதியில் அக். 21-ல் இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இந்தத் தொகுதியில் அமைச்சர்கள், ஆளும் கட்சி எம்எல்ஏக்கள் முகாமிட்டுள்ளனர். அதிமுக வேட்பாளர்களுக்கு வாக்களிக்க ஒவ்வொரு வாக்காளருக்கும் தலா ரூ.2 ஆயிரம் வழங்க அதிமுகவினர் முடிவு செய்துள்ளனர்.
தொகுதி முழுவதும் உலா வரும் வெளி மாவட்டங்களைச் சேர்ந்த ஆளும் கட்சியினர், சமூக விரோதிகள், குண்டர்களால் தொகுதி மக்கள் அச்சத்துடன் உள்ளனர். இவர்களைத் தொகுதியில் இருந்து வெளியேற்ற தேர்தல் ஆணையம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
எனவே, நாங்குநேரி இடைத்தேர்தல் தொடர்பாக தேர்தல் ஆணையம் செப். 21-ல் வெளியிட்ட அறிவிப்பாணையை ரத்து செய்து, தேர்தலை அக். 21-க்குப் பிறகு ஒத்திவைக்க உத்தரவிட வேண்டும். தேர்தல் பணிகளை மேற்கொள்ள தேர்தல் ஆணையத்துக்குத் தடை விதிக்க வேண்டும்” என்று கோரியுள்ளார்.
No comments:
Post a Comment